15 Jan 2025

அப்பாவின் பரிவு! (சிறுகதை) - விகடபாரதி

அப்பாவின் பரிவு! (சிறுகதை)

-         விகடபாரதி

நாமஞ்சேரிப் பண்ணையப் போயிப் பாத்துட்டு வந்தா தேவலாம்ப்பா என்றார் அப்பா.

இத்தோடு பத்தாவது முறையோ, பதினொன்றாவது முறையோ அப்பா சொல்லி விட்டார்.

போகலாம் என்று நினைக்கும் போது ஏதாவது ஒரு வேலை வந்து தடைபட்டு விடுகிறது. இந்தத் தடையைப் பார்த்துக் கொண்டிருந்தால் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். என்ன வேலையாக இருந்தாலும் நாளை கிளம்பி விட வேண்டும் என்ற தோன்றியது.

நாளைக்குக் காத்தால சாப்பாட்ட முடிச்சிட்டுக் கிளம்பிரலாம்ப்பா என்றேன்.

அவர் முகத்தில் ஆச்சரியம். இந்தப் பதிலை எதிர்பார்த்திருக்க மாட்டார் போல. வழக்கமாகப் போயிட்டு வந்திடலாம்ப்பா என்ற பதிலை எதிர்பார்த்திருப்பார். நாளைக்குக் காலை என்று குறிப்பாகச் சொல்லி விட்டதால் ஆகட்டும்ப்பா என்றார்.

அப்பாவுக்கு அதில் ஓர் ஆர்வம். யாராவது இயற்கை முறையில் வெள்ளாமை பண்ணுவதாகச் சொல்லி விட்டால் போதும், அதைப் பார்த்து விட்டு வந்தால்தான் மனசு அடங்கும். இல்லையென்றால் சதா அதையே பேசிக் கொண்டிருப்பார். அதையே என்றால் அதை மட்டும்தான்  பேசிக் கொண்டிருப்பார். பேச்சுக்கு இடையில் எங்கே இடம் கிடைத்தாலும் அங்கே போயிட்டு வரணுமேப்பா என்று கோடிட்டுக் காட்டாமல் விட மாட்டார்.

என்னவோ அப்பாவுக்கு இந்த வயதில் இப்படியொரு ஆசை. வேறு எதற்கும் ஆசைப்பட மாட்டார். வாயிக்கு ருசியாகச் சமையல் இல்லையென்றாலும் கவலைப்பட மாட்டார். நேரத்துக்குச் சாப்பாடு வராவிட்டாலும் கவலைப்பட மாட்டார். வெள்ளாமைப் பண்ணையம் என்றால் ஒரு எட்டு பார்த்து விட்டு வந்து விட வேண்டும்.

காலைச் சாப்பாடு எட்டு மணிக்கு எல்லாம் ஆகி விடும். அப்பா தயாராகி விட்டார். எனக்குத்தான் தாமதமாகி விட்டது. நான் அங்கங்கே இருக்கும் சில்லுண்டி வேலைகளை முடித்து விட்டுக் குளித்த போது மணி பத்து ஆகி விட்டது. சாப்பிட்டு விட்டுச் சட்டையைப் போட்டுக் கொண்டு கிளம்பிய போது மணி சரியாக பதினொன்றே கால்.

அப்பா ரொம்ப நேரமாகத்தான் காத்துக் கிடந்திருக்கிறார். அது குறித்த சலிப்போ, அலுப்போ எதுவுமில்லை அவரிடம். நாமஞ்சேரி பண்ணையைப் பார்க்கப் போக வேண்டும் என்ற ஆசையில் இன்னும் காத்திருக்க நேர்ந்தாலும் சந்தோசமாகத்தான் உட்கார்ந்திருப்பார்.

என்னப்பா கௌம்பலாமா என்ற போது, நான்தான் தயாரா இருக்கேன்னே என்றார். எனக்குச் சுருக்கென்று இருந்தது. இவ்ளோ நேரமா காக்க வைப்பது? இங்கே நேரத்தைப் பார்த்தால் ஆங்கே ஆகியிருக்க வேண்டிய நாலைந்து வேலை ஆகியிருக்காது. நாளைக்கு அது பெரிய லந்தாக இருக்கும். எதற்காக எதை விடுவது? எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது? சம்சாரியின் வாழ்க்கையில் எல்லாம் அப்படி இப்படித்தான். ரொம்ப சுருதி சுத்தம் பார்த்தால், பிறகு எல்லாம் சுருதி பேதமாகி விடும்.

நான் வண்டியை எடுத்தேன். அந்த வண்டி கூட அப்பா வாங்கியதுதான். ரொம்ப பழைய ஆக்டிவா ஹோண்டா வண்டி அது. எப்படி வாழ்க்கைப் போய்க் கொண்டிருக்கிறது என்றால், ஏதோ வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது என்று பதில் சொல்வோம் இல்லையா? இங்கு நிஜமாகவே அந்த வண்டி அப்படித்தான் வாழ்க்கையைப் போல ஓடிக் கொண்டிருந்தது.

மெதுவாக ஓடும் போது ஒரு வித தடக் தடக் சத்தம் வந்து வண்டி ஓடுமா என்பது போலிருக்கும். வேகமெடுத்து விட்டால் அப்படி முனகிய வண்டியா இப்படி ஜெகஜோதியாகப் போகிறது என்பது போலிருக்கும்.

அப்பா வண்டியில் ஏறி ரெண்டு பக்கமும் காலைப் போட்டு உட்கார்ந்து கொண்டார். என்னவோ ஒனக்கும் இன்னிக்குத்தான் நேரம் அமைஞ்சிருக்கு. நீயும் என்னத்தான்டா பண்ணுவே? எதாவது வேலைக்குப் போயிருந்தாலாவது பொழைப்பு நல்லா இருந்திருக்கும். விவசாயியா வாழ்றதுன்னா ரொம்ப பாடுதான் போ. அப்பா எப்போதும் இப்படித்தான், எனக்காகப் பரிந்து பரிந்து பேசுவார்.

விவசாயம் பண்ணுற நீயி நாலு பண்ணையங்களப் போயி பாக்கணும்டா. இப்படியா குட்டிப் போட்ட பூனைய மாதிரி வீட்டுக்கும் வயலுக்கும்மா கெடந்து அல்லாடறது? என்னவோ எனக்கும் இதுல ஓர் ஆர்வம். அப்படியே நீயி வந்துப் பார்த்தா ஒனக்கு ஏதாச்சும் கதவு தொறக்காதாங்ற நெனைப்புத்தான். தொறக்கும் தொறக்கும் வா என்று நம்பிக்கையோடு பேசிக் கொண்டு வந்தார்.

அது சரி இங்கேயிருந்து இருபத்தஞ்சு கிலோ மீட்டர் இருக்குமா என்றார்.

தெரியலப்பா. திருப்பூண்டி ரோட்டுலப் போயி சாம்பல்குடிக்குக் கெழக்கால செஞ்ஞாயிறு போற வழியில போகணும்ன்னு சொன்னாங்க. நீங்க சொல்றாப்பல இருபத்து அஞ்சு இருக்கும். கூடவும் இருக்கும் என்றேன்.

கொஞ்சம் காத்தால கௌம்பியிருந்தா வெயிலு போட்டு இப்படி பொசுக்காதுடா என்றார்.

காத்து நல்லா சிலுசிலுன்னு அடிக்குதேப்பா என்றேன்.

அடிக்குதுதான். இருந்தாலும் காத்தால போறப்ப நெலத்துல ஆசையோட எறங்கி வேலையைப் பாக்குற சனங்கள பாக்குற சந்தோசம் இருக்கே. அதுக்காகச் சொன்னேன் என்றார்.

இப்போது யார் காலையில் வயலில் இறங்கி வேலை பார்க்கிறார்கள்? எல்லாவற்றுக்கும் எந்திரம் வந்த பிறகு வயலில் மேம்பார்வைத்தான் பார்க்கிறார்கள். இது அப்பாவுக்கும் தெரியும்தான். இருந்தாலும் பல விசயங்களை அவ்வபோது மறந்து விடுகிறார். சில விசயங்களைச் சம்பந்தம் இல்லாமல் போட்டு இணைத்துக் கொண்டு எதையாவது பேசி விடுகிறார்.

இந்த வருஷம் ஆடிப் பெருக்குக்குத் தண்ணீர் வந்து விட்டாலும் பாசனம் சரியில்லை. ஆற்றில் தண்ணீர் வந்தும் வயலுக்குத் தண்ணீர் வைப்பதற்குள் தாவு தீர்ந்து விடுகிறது. வாய்க்காலில் வரும் தண்ணீர் வயலுக்கு வர வேண்டுமே என்று யார் காத்திருக்கிறார்கள்? எல்லாரிடமும் தூக்கிச் செல்லும் அளவுக்கு மோட்டார் பம்புசெட்டு இருக்கிறது. வாய்க்காலில் தண்ணீர் வந்த அடுத்த நிமிஷமே டீசலைப் போட்டு வாய்க்காலிலிருந்து வயலுக்கு பம்புசெட்டு பாசனத்தை ஆரம்பித்து விடுகிறார்கள். கவணை போடுவது, மடை திறந்து வைப்பது என்று எந்த வேலையும் இல்லை. இப்படி விவசாயம் மாறும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சொல்லியிருந்தால் நான் கூட நம்பியிருக்க மாட்டேன். நான் மட்டும் ஒழுங்கா என்ன? ஒன்றுக்கு இரண்டாகக் கூட அல்ல, நான்கு அடக்கமான மோட்டார் பம்பு செட்டுகளை வாங்கி வைத்திருக்கிறேன்.

அப்பா இதையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். காலத்துக்கு ஏத்தாப்புல மாறிகிட்டே இருந்ததாத்தான் விவசாயமும் பண்ண முடியும் என்பதை உணர்ந்திருக்கிறார். எப்போதவாது கேட்பார், இப்படி விவசாயம் பண்ணா, இதுல என்னத்தெடா மிச்சம் பண்ணுவே என்று. என்னத்தை மிச்சம் பண்ணுவது?

விவசாயம் பண்ணாமலும் நிலத்தைப் போட முடியாது. கையைக் கடிக்கிறது என்று கை விடவும் முடியாது. செலவைப் பார்த்து செய்யாமல் விட்டால் அவ்வளவுதான். ஒரு வருஷம் தரிசு போட்டு அடுத்த வருஷம் விவசாயம் பண்ண வரலாறு இங்கே சுத்துபட்டு எந்தக் கிராமத்திலும் இல்லவே இல்லை. அது என்ன சோதனையோ, விவசாயம் பண்ணாமல் போட்டால் போட்டதுதான். எப்படியோ விவசாயம் கை நழுவித்தான் போய் விடுகிறது. சாமிக்குத்தம் போல இதுல விவசாயக் குத்தம் ஏதும் இருக்குமோ என்னவோ.

ஆறுமுகத்து அண்ணன் அப்படித்தான் இந்த ஒரு வருஷம் கிடக்கட்டும்டா என்று போட்டார். கட்டாயம் அடுத்த வருஷம் பண்ணுவேன்டா என்றார். அதுவும் சத்தியம் பண்ணாத குறை. அடுத்த வருஷம் பண்ண முடிந்ததா என்றால் அவ்ளோதான். விவசாயத்தை விட்ட ஒரு வருஷம், சோப்பு விற்கப் போகிறேன் என்று கிளம்பினார். டாடா மேஜிக் வண்டியை வாங்கிக் கொண்டு கனிஷ்கா சோப்பு கனிஷ்கா சோப்பு பவுடர், நூறு ரூபாய்தான். நூறு ரூபாய்க்கு ஆறு சோப்பு, நாலு பவுடர் பாக்கெட் என்று குரலைப் பதிவு பண்ணி வைத்துக் கொண்டு ஊர் ஊராகச் சென்று விற்க ஆரம்பித்தார். என்னவோ அது நேரம் வியாபாரம் சூடு பிடிச்சு விவசாயப் பக்கமே தலை வைத்துப் படுக்கவில்லை. நான்கைந்து வருஷம் தரிசாகவே கிடந்த நிலத்தை கிடைத்த விலைக்குத் தட்டி விட்டு தற்போது கனிஷ்கா சோப்போடு காய்கறி வியாபாரத்தையும் டாடா மேஜிக்கில் வைத்துச் செய்து கொண்டிருக்கிறார். இப்போது மாடி மேல மாடி வைத்து வீடு கட்டிக் கொண்டு இருக்கிறார்.

மாவூர் வந்து திரும்பியதும், டேய் யப்பா கொஞ்சம் கேரா இருக்குறாப்புல இருக்குதுடா. டீக்கடையில கொஞ்சம் உக்காந்து ஒரு டீயை அடிச்சிட்டுக் கௌம்புலாமா என்றார் அப்பா.

டீக்கடை ஒரமாக வண்டியை ஒதுக்கினேன். இறங்கும் போது கேட்டேன், ஏம்ப்பா வண்டியில உக்காந்துட்டு தூங்கிடலேயே?

அதான் பேசிக்கிட்டுத்தானே வர்றேன். அடிக்கிற காத்துக்குத் தூக்கம் வரத்தான் செய்யுது. வயசும் ஆவுதுல்ல. வண்டியில உக்காந்து தூங்குனா பெறவு என்னாவுறது? வயசான ஆளுன்னு நெனைச்சு சர்க்கரைய கம்மியா போட்டுடப் போறான். சொல்றப்பவே தூக்கலா போடச் சொல்லு, டபரா செட்டுல போடச் சொல்லு என்றார்.

நெறையத்தாம்லா போட்டுருக்கு சர்க்கரைய என்று ஒரு மிடறு ருசி பார்த்து விட்டுக் குடித்தவர் டபரா செட்டைக் கையில் கொடுத்ததும், இன்னொண்ணு சொல்லட்டுமா என்றேன். ஒரு சிரிப்பு சிரித்தார். நான் இன்னொன்று போடச் சொல்லி டபார செட்டில் வாங்கிக் கொடுத்ததும் ஆசையோடு உறிஞ்சினார்.

நான் கடையில் குடிப்பது, சாப்பிடுவது என்ற பழக்கத்தை விட்டு ஒரு மாமாங்கம் ஆகி விட்டது. கடையில் குடிக்கக் கூடாது என்றோ, சாப்பிடக் கூடாது என்றோ விரதம் ஏதுமில்லை என்றாலும் வருகின்ற வருமானத்துக்கு அப்படி இறுக்கிப் பிடித்துக் கொண்டு இருந்தால்தான் குடும்பம் ஓடுகிறது. அதற்காக எல்லாரையும் அப்படிப் போட்டு வதைத்து விட முடியுமா?  என்னமோ கடைச் சமாச்சாரங்க நமக்கு ஒத்துக்க மாட்டேங்குதுன்னு ஒரு புளுகுனியை வைத்துக் கொண்டு கடையில் சாப்பிடாமல் இருந்து கொண்டிருக்கிறேன்.

வண்டியில் ஏறி உட்கார்ந்ததும் ஒனக்குத்தாம் கடைச் சமாச்சாரமெல்லாம் ஆவாதுல்ல என்று குறும்புச் சிரிப்பு சிரித்தார் அப்பா. ஒரு வேள, ஒரு நாளு சாப்பிடுறதால்ல கஜானா ஒண்ணும் கொறைஞ்சிப் போயிடாதுடா என்றார் அப்பா மைக்கில் சத்தமாகப் பேசுவதைப் போல.

அப்பா என்றேன் நான் கடிந்து கொள்வது போல.

ரோட்டுல போறதுல கேக்குறவன் கேட்டா கேட்டுட்டுப் போறான் போ. பைத்தியக்கார பயலுவோன்னு நெனைச்சாலும் நெனைச்சிட்டுப் போறான் போ என்றார்.

எங்கேயாவது ஒரு விடியல் கிடைத்து விடாதா என்றுதான் நாமஞ்சேரி பண்ணைக்கு அப்பா கேள்விப்பட்டு அழைத்து வருகிறார். இப்படி எத்தனையோ பண்ணைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். விடியல்தான் வந்த பாடில்லை. வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் அவருக்கு இது போன்ற பயணங்கள் ஒரு விடுவிப்பு. வயசு ஆனாலென்ன ஊர் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை யாருக்கு இல்லாமல் இருக்கும்? எனக்கும் கூட இப்படி வெளியே வந்தால்தான் உண்டு. காலைச் சுற்றிய பாம்பு போல விவசாயம் இருப்பதால் அங்கே இங்கே நகருவது என்பதெல்லாம் நடவாத காரியம்தான்.

ஆத்துல தண்ணி நெறையப் போவுது, வயலெல்லாம் காய்ஞ்சிக் கெடக்குதே என்றார் அப்பா.

வருஷா வருஷம் கட்சிக்காரங்க பொழைக்கணும்ன்னு ஆத்தைத் தோண்டுறதுக்குக் கான்ட்ராக்ட் வுடுறது, எதுக்குத் தோண்டுறோம், ஏன் தோண்டுறோம்ன்னு தெரியாமலே ஆத்தைத் தோண்டுறது, கரையில இருக்குற அத்தனை மர மட்டைகளையும் மொட்டையடிக்கிறது, இப்படி பண்ணிப் பண்ணியே ஆறு ஆழமா போச்சு, வாய்க்காலுங்க மேடாப் போச்சு. பெறவு வாய்க்காலுங்கள ஆழம் பண்ணுறதுன்னு அடுத்த கான்ட்ராக்ட். அதுல வாய்க்காலுங்க ஆழமாப் போச்சு. வயலுங்க மோடாப் போச்சு. இனுமே வயலுங்களத் தோண்டி ஆழம் பண்ணினாத்தான் வயல்ல தண்ணிப் பாயும். நாமளே நம்ம வூட்டுல நாலு மோட்டார் பம்பு செட்டுகள வாங்கி வெச்சில்லையா? அடுத்ததா வயலுங்கள ஆழம் பண்ணப் போறோம்ன்னு அடுத்த கான்ட்ராக்ட் வுட்டாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல என்றேன்.

எல்லாம் சேர்ந்து கூத்துக் கட்டித்தான்டா அடிக்கிறீங்க? என்னத்தெ அமாவாசைக் கூட்டம் போடுறீங்களோ? என்னத்தெ பேசுறீங்களோ? எல்லாத்துக்கும் கவர்மென்டுகாரனெ நம்பிக்கிட்டு இருந்தா காரியம் நடக்குமாடா? ஆத்தைத் தோண்டுறப்ப ஊர்ல நாலு பேரு நின்னு எப்படி என்னா பண்ணணும்ன்னு போயிப் பேசணும். விவசாயம் பண்ணுற எவனாச்சும் ஒத்துமையா போயி எதையாச்சும் கேட்டு இருக்கீங்களா? எங்க காலத்துல எல்லாம் இப்படியா? கலெக்டர் வரைக்கும் மனு போட்டுப் போவோம் தெரியுமா? என்றார்.

எல்லாம் ஒங்க காலத்தோட முடிஞ்சிப் போயிடுச்சுப்பா. இப்போல்லாம் என்னத்தெ மனுவக் கொடுத்தாலும் வாங்கிக் கக்கத்துல செருகிகிட்டு போயிக்கிட்டே இருக்கானுங்க. எத்தனை பேரு ஒண்ணாப் போயி சொன்னாலும் இதாங் இஞ்சினியரு பிளானுங்கறானுவோ. இப்படி தோண்டுனாத்தாம் தம்பி கவர்மென்டு ஆபீசருங்க வந்துப் பார்த்து பணத்தை சேங்சன் பண்ணுவாங்கங்றானுவோ. எல்லாத்துக்கும் ஒரு காரணம். எல்லாத்துக்கு ஒரு பதிலு. எதுவும் பொதுசனம் பிரயோசனப்படுறாப்புல இல்லப்பா. அதுக்கு மேல பேசுனா ஆளுங்கள வெச்சு அடிக்கிறானுவோப்பா. ஒங்க காலம் மாரில்லாம் இல்லப்பா. பெரிய பெரிய ரௌடி பயலுங்கத்தாம்ப்பா கான்ட்ராக்டே எடுக்குறானுவோ. சமயத்துல போலீச வெச்சே அடிக்கவும் வுடுறானுவோப்பா. உசுர கையில பிடிச்சிக்கிட்டு வாழ வேண்டியதா இருக்கு. அவனுவோகிட்டெ போயி மொத்து படுறதுக்குக் கொஞ்சம் காசைப் போட்டோமா, பம்பு செட்ட வாங்கி வெச்சிக்கிட்டோமான்னு பொழைப்ப பாத்துட்டுப் போயிட்டு இருக்கணும்ப்பா என்றேன்.

இப்படியோ போனா பெறவு எல்லாம் அப்படியே போவத்தாம்டா வேணும் என்றார்.

திருப்பூண்டி சாலையிலிருந்து சாம்பல்குடி கிழக்காகப் போகும் கிராமத்துச் சாலையில் வண்டியைத் திருப்பினேன். திருப்பூண்டி முக்கிய சாலை வழியாக வந்த போது வயல்கள் வெடித்துக் கிடக்கிறதென்றால் அதில் சில காரணங்கள் இருக்கின்றன. முக்கிய சாலை அநியாயத்துக்கு உயர்ந்ததன் காரணமாக தரைமட்டம் என்பது தாறுமாறாகி சாலையின் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் தண்ணீர் செல்வது பாதிக்கப்பட்டிருந்தது. கிராமத்திற்கு உள்ளே செல்லும் போதும் வயல்கள் அப்படித்தான் இருந்தன. விவசாயிகள் விதை விட்டு நாற்று நடும் முறையிலிருந்து தெளி விதைக்கு மாறியிருந்தனர். தெளித்து வைத்த வயல்களில் நெய்பயிர் நான்கு அங்குலம், ஐந்து அங்கலத்திற்கு வளர்ந்திருந்தது. வயல்கள் ஈரப்பதத்துக்கு ஏங்கிக் கொண்டிருந்தன.

நாட்டுல நடக்குறது ரொம்ப அநியாயம்டா. பாவம்டா அந்தப் பயிருங்க. வள்ளலார் பாத்தாருன்னு வெச்சுக்கோ, உசுரையே விட்டுடுவார்டா. தண்ணி இல்லாம வாடலாம்டா. இருந்தும் வாடக் கூடாதுடா. சுத்தமாவே ஒங்க காலத்து நிருவாகம் கொஞ்சம் கூட சரியா இல்லடா. இப்படியெல்லாம் போராடி விவசாயம் பண்ணணும்ன்னா எத்தனைப் பேருடா பண்ணுவாங்க? ரொம்ப தப்புடா நாட்டுல நடக்குது என்றார்.

அது முக்காலடி குழாயாக இருக்க வேண்டும். அவ்வளவு பெரிய வெளியேற்றும் குழாய்க்குக் கிட்டதட்ட அது ராட்சச பம்புசெட். அதை வைத்துக் கொண்டு வாய்க்காலிலிருந்து வயலுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார் ஒரு விவசாயி. இவன் என்னடா ஒன்னயத் தாண்டி தீவிர விவசாயியா இருப்பாம் போலிருக்கே. இம்மாம் பெரிய பம்பு செட்ட நாம்ம பாத்ததில்லடா என்றார் அப்பா.

நாம்ம நாலு வெச்சிருக்கோம். அவரு நாலுக்கும் சேத்தியா ஒண்ணா வெச்சிருக்கார். நம்ம குஞ்சிதபாதம் வெச்சில்லையா. அவர்ர மாரின்னு நெனைச்சுக்கோங்க என்றேன்.

ரொம்ப தூரம் போயிட்டே இருக்குற மாரி இருக்குடா. கொஞ்சம் விசாரிச்சுக்கோ. பெறவு பெட்ரோல் போச்சுன்னு பொலம்பிக்கிட்டு இருப்பே என்றார் அப்பா.

ஒரு கூரை வீட்டுக்கு முன்னாடி பிளாஸ்டிக் நாற்காலியைப் போட்டு அதில் உட்கார்ந்திருந்தார் ஒரு பெண்மணி. அவருக்குக் கை உடைந்திருக்க வேண்டும். சிம்புகள் வைத்துக் கட்டுப்போடப்பட்டிருந்தது. கூரை வீடு திறந்து கிடந்தது. அதனுள்ளே அவருடைய மகளாக இருக்க வேண்டும். தரையில் உட்கார்ந்து புத்தகத்தைப் பார்த்துப் பார்த்துத் தாளில் எழுதிக் கொண்டிருந்தாள். நாமஞ்சேரிக்கு இப்படித்தானே போகணும் என்றேன்.

இதாஞ் நாமஞ்சேரி. நீங்க யார்ரப் பாக்கணும் என்றார். செஞ்சோலை பண்ணையம்ன்னு சொன்னாங்க என்றேன். பண்ணையமா என்றார் அவர் புரியாதபடிக்கு.

இயற்கை வேளாண்மை பண்ணுறதா சொன்னாங்க. செஞ்சோலை பண்ணையம்ன்னு சொன்னாக்கா தெரியும்னாங்க என்றேன்.

ஓ ஒன்றியத்தோட பண்ணையச் சொல்றீங்களா என்றார்.

அது தெரியலைங்களே. ஆனா இயற்கை விவசாயம் பண்ணுறதா சொன்னாங்க. பேரு முடிகொண்டநாதன்னு சொன்னாங்க என்றேன்.

சரிதாம் போங்க. இப்படியே போனீங்கன்னா ஒரு ரயில்வே கிராசிங் வரும். அதெ தாண்டிப் போனீங்கன்னா எடது பக்கமா ஒரு பாதை பிரியும். அதுல போங்க. அது நேரா போயி அங்கத்தான் நிப்பாட்டும். பண்ணைன்னு சொல்லுங்க புரியும். பண்ணையம்ன்னா யாரு கண்டாக்கா என்றார் அந்தப் பெண்மணி.

ரொம்ப நல்லதுங்க. சொல்லிவிட்டு புறப்பட்டோம்.

என்னடா இந்த ஊர்ல ஒரு மனுஷன் இயற்கை விவசாயம் பண்ணுறான்னா அது யாருக்குமே தெரிய மாட்டேங்குது. நாட்டுல ஒண்ணு அப்படி இல்லையா என்ன? என்றார் அப்பா.

இதெல்லாம் நாட்டுல வசதி இருக்குறவன்தாம்பா பண்ணலாம். சாதாரண ஆளு பண்ணான்னா வெச்சுக்கோங்க டவுசரு கழன்றுடும் என்றேன்.

ஏன்டா நீ பண்ணலையா? நீயென்ன வசதியில சேத்தி? என்றார் அப்பா.

நான் பண்ணுறேன்னா விசயம் வேறப்பா. ஒரு வைராக்கியத்துல பண்ணிக்கிட்டு இருக்கேன். அதாங் இப்படி இருக்கேன். நம்மாழ்வர்ரப் பாக்காம இருந்திருந்தேன்னா இந்தப் பக்கம் வந்திருக்க மாட்டேன். அதெல்லாம் இனுமே நடக்காதுப்பா.

ஏன்டா அந்த மனுஷனப் போயி கொறை சொல்றே? ஒனக்கு வேணும்ன்னா பொருளாதாரம் இல்லாம இருக்கலாம். நோயி நொடி இல்லாம குடும்பமே நல்லாத்தான்டா இருக்கே. என்னய எடுத்துக்கோ இந்த வயசுக்கு எப்படி இருக்கேன்? ஒங்க அம்மாவ எடுத்துக்கோ சுகரு உண்டா, பிரசர் உண்டா? செலவு பண்ணுறவனுக்குத்தான்டா காசு வேணும். ஒனக்குத்தான் செலவே இல்லையே. பெறவு ஒனக்கு எதுக்குடா காசு என்றார் அப்பா.

அப்புறம் எதுக்குப்பா இங்கே வரணும்? வீட்டிலேய இருந்திருக்கலாமே என்றேன்.

ஏதோ ரெண்டு காசு வந்தா புள்ளைங்களுக்கு நகை நட்டு வாங்கிச் சேத்து வைக்கலாம் பாரு. நாளைக்கு படிப்புச் செலவு, கல்யாணச் செலவுன்னு வந்தாக்கா என்னத்தெ பண்ணுவே?

இருக்குற நெலத்தை வித்துடுவேம்ப்பா என்றேன்.

வித்துப்புட்டு… சோத்துக்கு என்னத்தெ பண்ணுவே? என்றார் அப்பா இழுவையாக.

சோத்துக்கு ஒரு ஏக்கரா நெலம் போதும். ஏழு ஏக்கரா நெலம் தேவையில்லப்பா என்றேன்.

தெளிவாத்தான் இருக்கே. இருக்குற நெலத்துல இயற்கையா விவசாயம் பண்ணி நாலு பேத்துக்கு நல்லதெ பண்ணலாம்னுத்தான் நானும் யோசிக்கிறேன். நீ வித்தீன்னா வாங்குறவன் ரசாயனத்தைப் போட்டுத்தான் விவசாயம் பண்ணுவான். இப்போ இருக்குற நெலமைக்கு வீட்டு மனையா போட்டாலும் போடுவான். அதாம்டா பாக்குறேன். விக்குறது பெரிய விசயமே இல்ல. ஆனா பின்னாடி நீயே நெனைச்சாலும் கையில லட்சம் லட்சமா பணத்தெ கையில வெச்சிருந்தாலும் நெலத்தை வாங்க முடியாது. அப்படி ஒரு காலம் வரப்  போவுது பாரு என்றார்.

அது வரைக்கும் எப்படி சமாளிக்கிறதுன்னு புரியலையேப்பா என்றேன்.

நாமாஞ்சேரி வந்திருக்கோம். முடிகொண்டநாதரு ஒரு வழியக் காட்டாமலா விடப் போறாரு என்றார் அப்பா.

இப்படி எத்தனையோ பண்ணையத்துக்குப் போயாச்சுப்பா. வழிதான் கெடைக்கல. நாலு மூட்டையும் அஞ்சு மூட்டையும் வெளைஞ்சா கிலோ அரிசிய நூறு ரூபாய்க்கு விக்காம எப்படிக் கொறைச்சு விக்க முடியும்? என்றேன்.

கடையில நல்ல அரிசி அறுவது ரூபாய்க்கு விக்குறப்போ எப்படிடா நூறு ரூபாய் கொடுத்து வாங்குவான்?

நூறு ரூபாய்க்குக் கம்மியா வித்தா கட்டுபடி ஆகாதுப்பா? கூடுதலா லாவம் வேணாம். போட்ட காசு கைக்கு வந்ததாத்தான் அடுத்தடுத்த வருஷம் உழவு பண்ண, களை எடுக்க, அறுவடை பண்ண காசு இருக்கும் என்றேன்.

சரி பாக்கலாம் வா என்றார் அப்பா.

நாமஞ்சேரி பண்ணையத்துக்கு முன்னாடியே பெரிய பெயர்ப்பலகை வைத்திருந்தார்கள். நாதன் இயற்கை வேளாண் பண்ணையம் என்ற பெரிய எழுத்துகள் வரவேற்றன.

நாங்கள் போன நேரம் முடிகொண்டநாதர் பண்ணையத்தில் இல்லை. அவருக்கு நான்கைந்து இடங்களில் பண்ணையம் இருந்தது. தவிரவும் அவருடைய பிள்ளைகள் பெங்களூரு, ஓசூர் என்று பெரிய வேலைகளில் இருந்தார்கள். பிரதான அரசியல் கட்சியில் ஒன்றிய பொறுப்பாளராக இருந்தார். அவரைப் பார்ப்பது சாமானியம் இல்லை என்பது புரிந்தது. அங்கிருந்த வேலையாட்கள் பண்ணையத்தைச் சுற்றிக் காண்பிப்பதில் எந்தக் குறையையும் வைக்கவில்லை.

இருபது அடிக்கு ஆழமான குளங்களை அங்கங்கே வெட்டி வைத்திருந்தார். காட்டுயாணம், ஆத்தூர் கிச்சடி சம்பா, பூங்கார், மாப்பிள்ளை சம்பா என்று பயிர் பண்ணியிருந்தார். இதெல்லாம் சிறிய அளவில். பெரிய அளவில் கோ 55 என்கிற ரகத்தைப் போட்டிருந்தார். அந்த நிலத்தைப் பார்த்ததுமே புரிந்தது அவர் களைக்கொல்லி, ரசாயன உரம் வரை அத்தனையையும் அதில் பயன்படுத்தியிருப்பது. அப்பாவும் அதைப் பார்த்தார். நான் என்ன கேட்கப் போகிறேன் என்பது அவருக்குப் புரிந்து விட்டது.

நான் பண்ணையத்து வேலையாட்களைப் பார்த்துக் கேட்டேன், கோ 55 பயிரிட்டிருந்ததைப் பார்த்து விட்டு, ஏன் இதை இயற்கை முறையில பண்ணலையா என்று.

அந்தக் கதைய ஏன் சார் கேக்குறீங்க? போன வருஷம் கருப்புக் கவுணியப் போட்டு பருவம் தப்புச்சோ, கணக்கு தப்புச்சோ எது தப்புச்சோன்னு தெரியல. பதினைஞ்சு ஏக்கராவுல போட்டு பதினைஞ்சு ஏக்கராவுலயும் கதிர் வராமப் போயி டிராக்டர்ர விட்டு அழிக்குறாப்புல போயிடுச்சு. அஞ்சு லட்சமோ, பத்து லட்சமோ நஷ்டம்ன்னு சொல்லுவாரு ஒன்றியம். அதான் இந்த வருஷம் செஞ்ஞாயிறு வேளாண் விரிவாக்க மையத்துலேந்து இந்த ரகத்தை வௌவிச்சுக் கேட்டாங்க. அதாங் செஞ்சுக் கொடுக்குறாப்புல. போன வருஷம் டிராக்டர்ர விட்டு அடிக்கிறப்போ அவுங்களும் வந்துப் பார்த்தாங்க. ரொம்ப நஷ்டப்பட்டுப் போயிட்டாருன்னு இதெ கொடுத்திருக்காங்க என்றனர்.

பண்ணையத்தை நன்றாகத்தான் வைத்திருந்தார் முடிகொண்ட நாதர். ஒரு பக்கம் பல வகை மரங்களைக் கொண்ட தோப்பு இருந்தது. பழங்காலத்துப் பண்ணை வீட்டைச் சுற்றி நான்கு மாடுகள் அவற்றின் கன்றுகள் இருந்தன. ஏகப்பட்ட கோழிகள் மேய்ந்து கொண்டிருந்தன. சாண எரிவாயு அடுப்பு, எருக்குழி எல்லாம் அருமையாகத்தான் வைத்திருந்தார். எல்லாவற்றுக்கும் வேலையாட்கள்.

இதுக்கெல்லாம் ரொம்ப செலவு ஆவுமே என்றேன். அரசியல்ல ஒரு பக்கம் வருது. இன்னொரு பக்கம் இப்படிப் போவுது. புள்ளைங்க எல்லாம் பெரிய பெரிய வேலையில இருக்குதுங்க. பணம் அவருக்கு ஒரு பெரிய விசயம் இல்ல. ஏதோ பொழுதுபோக்கா இதெ பண்ணிக்கிட்டு இருக்காருங்க. ஊருல இவரு ஒருத்தர்தான் இப்படி. வேற யாரும் இந்தப் பக்கம் எட்டிப் பாக்குறதில்ல.

ஐயாவ்வ இன்னிக்குப் பாக்க முடியாதா என்றேன்.

கொஞ்சம் கஷ்டந்தான். எப்போயும் சுத்துப் பயணத்துலத்தான் இருப்பாங்க. நான் வேணும்னா போன் போட்டுத் தரட்டா என்றார் பணியாட்களில் ஒருவர்.

சரி போடுங்க என்றார் அப்பா.

முடிகொண்டநாதர் பேசினார். விவரங்களை ஒவ்வொன்றாகக் கேட்டுக் கொண்டார்.

ரொம்ப சந்தோஷ்ம்ன்னேன். பாருங்க. பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், மீன் அமிலம் இன்ன என்ன வேணுமோ நம்மகிட்டெ எல்லாம் கொறைஞ்ச விலையில வாங்கிக்கலாம். ஒங்கள மாரி இளைஞர்களெல்லாம் இயற்கை விவசாயத்துக்கு வந்தாத்தான் நாடு உருப்படும்னேன். வேற என்னத்தெ எங்கிட்டெ எதிர்பாக்குறீங்க? வெத நெல்லு? டிரெய்னிங்? என்னத்தெ வேணும்? என்றார்.

நானும் இயற்கை முறையிலத்தான் பண்ணுறேங்கய்யா. நான் தயார் பண்ணுற நெல்லை வித்துத் தர முடியுமா? என்று நான் நேரடியாகவே விசயத்துக்கு வந்தேன்.

அது வந்து தம்பி, அதே நீங்கத்தான் பாக்கணும். நீங்க எப்படி வெளைவிக்குறீங்கன்னு எனக்குத் தெரியாது. இயற்கை விவசாயம்ன்னு சொல்லிட்டு நீங்க ரசாயனத்தைப் போட்டு வெளைவிச்சுக் கொடுக்கலாம். அதெ நான் எப்படி கண்டுபிடிக்க முடியும்? ஒருவேளை நீங்க நேர்மையாவும் பண்ணலாம். இங்கேயிருந்து நீங்க இயற்கை வேளாண்மைக்குத் தேவையான இடுபொருளை வாங்கிக்கலாம். வெதை நெல்லை வாங்கிக்கலாம். நான் வித்துல்லாம் தர முடியாது. அதுக்கு வாய்ப்பு இல்லீங்க ராஜா என்றார்.

எனக்கு ஏமாற்றமாக இருந்தது. சரிங்க நாங்க கௌம்புறோம் என்றேன்.

தம்பி இவ்ளோ தூரம் வந்துட்டீங்க. இருந்து ஆத்தூர் கிச்சடி சம்பாவுல பண்ணுன சாப்பாட்டைச் சாப்பிட்டுப் போங்க. பெறவு நம்ம பாரம்பரிய நெல்லை விட மாட்டீங்க என்றார்.

ரொம்ப நன்றிங்க. எங்க வூட்டுல மூணு வேளை சாப்பாடே அந்த நெல்லுதாங்க. நாங்க கௌம்புறோம் என்றேன்.

பரவாயில்ல தம்பி. அடிக்கடி வந்துகிட்டுப் போயிட்டு இருங்க என்றார்.

நான் போனைக் கொடுத்து விட்டுக் கிளம்ப ஆயத்தமானேன்.

என்னப்பா இங்கேயும் ஒனக்கு விடியல் கெடைக்கலையா என்றார் அப்பா.

உங்களுக்குப் பண்ணையத்தைப் பார்த்த திருப்தி கெடைச்சுதுல்ல. அது போதும்பா என்றேன் நான்.

என்னத்தெ திருப்தி? களைக்கொல்லிய அடிச்சு வெச்சிருக்கான் பாவி. வௌங்குவானா அவன்? பேரு மட்டும் என்னவோ இயற்கை வேளாண் பண்ணையம்ன்னு எழுதி வெச்சருக்கான். இயற்கைன்னா அவனுக்கு என்னான்னு தெரியுமா என்று பொரிந்து தள்ளினார்.

இப்படித்தாம்பா நாட்டுல இயற்கை வெவசாயம்ங்றது நடக்குது. கேட்டாக்கா அங்கக வேளாண்மைம்பாங்க. ஆர்கானிக்ங்ற பேர்ல இவனுங்க பண்ணுறது இயற்கை வேளாண்மையே கிடையாதுப்பா. நாம்ம பண்ணுறதுதான் இயற்கை வேளாண்மை. இயற்கையா விளைவிச்சுக் கொடுக்குறதெ அப்படியே ஏத்துக்கிறோம். வருமானம் இல்லாட்டியும் நெறைவு இருக்குப்பா. அதெ ஏம்ப்பா காசுக்குக் கொடுத்துக்கிட்டு. இயற்கையா வெளைவிச்சு சாப்புடணும்ன்னு நெனைச்சா அவனவனும் நெலத்தை வாங்கி விவசாயத்தைப் பண்ணிக்கிடட்டும்ப்பா. நாம்ம ஒண்ணும் இவனுங்களுக்கு இயற்கையா வெளைவிச்சு கொடுக்குணும்ங்ற அவசியம் இல்லப்பா என்றேன்.

பெறவு என்ன பண்ணுறதா உத்தேசம் என்றார்.

இது வரைக்கு என்ன பண்ணிகிட்டு இருக்குறோமா அதுதாம்ப்பா. உழவு பாக்குறவனும் களை எடுக்குற சனங்களும் அறுவடை பண்ணுறவனும் சோலி முடிஞ்சதும் தானியமா எடுத்துக்குறாங்க இல்ல. அப்படியே எடுத்துக்கிடட்டும். காசு செலவு பண்ணி என்னால பண்ண முடியாது. ஆட்டுக்கிடை போடுற கீதாரியும்தான் இந்த அரிசிக்காக எத்தனெ நாளு வேணாம்னாலும் போட்டுத் தர்றாரு. பெறவு என்னப்பா? வேலை பாக்குற அத்தனெ பேரும் இந்த அரிசிக்கு அப்படி ஏங்குறாங்க. வேலையப் பாக்கட்டும். அவங்கவங்க கூலிய அவங்கவங்க பிரிச்சுக்கிடட்டும். நமக்குக் கிடைக்குறது கெடைக்கட்டும். பாத்துப்போம்ப்பா என்றேன்.

செலவுக்கு என்னத்தெ பண்ணுவே?

அதாங் ஒங்களுக்கும் அம்மாவுக்கும் முதியோர் உதவித்தொகை, எம் பொண்டாட்டிக்கு மகளிர் உரிமைத் தொகை, இருக்கவே இருக்கு நூறு நாளு வேலைச் சம்பளம். உளுந்து பயிறுல கெடைக்குறது மிச்சம்தானேப்பா. வெதை நெல்லு கையில இருக்கு. அதைத் தாண்டி செலவுக்கென்னப்பா? நான் என்ன புள்ளைங்கள பிரைவேட்டுப் பள்ளிக்கூடத்துலயா படிக்க வைக்குறேன் செலவுக்குப் பத்தாம போக? அரசாங்க பள்ளிக்கூடத்துலத்தாத்தானே படிக்க வைக்கிறேன். போதும்ப்பா. இனுமே என்னைய இந்த மாதிரி பண்ணையப் பாக்க மட்டும் கூப்புடாதீங்கப்பா. பெட்ரோல் காசு இருநூறு ரூவாய் தண்டம்ப்பா. இப்போ இருக்குற நெலமைக்கு எனக்கு இருநூறு ரூவா காசுங்றது பெரிய காசுப்பா என்றேன்.

நீ நல்லா வருவடா மவனே என்றுஅப்பா கட்டிக் கொண்டார். அவர் அழுவது என் சட்டையை நனைத்து மார்பைத் தொட்ட கண்ணீர் துளிகளின் ஈரத்தில் தெரிந்தது. அப்பா எனக்காக எப்போதும் ரொம்ப பரிந்துதான் போகிறார்.

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...