18 Aug 2026

ஒரு சுழற்சியின் மௌன சாட்சியம்

ஒரு சுழற்சியின் மௌன சாட்சியம்

நாம் வாழும் இந்தக் காலத்தில் சொற்களுக்குப் பஞ்சம் ஏதும் இல்லை. மேடைகளிலும், செய்தித் தாள்களிலும், ஊடகங்களின் மின்னல் திரைகளிலும் சொற்கள் அலை அலையாய்ப் பெருகி வழிகின்றன. ஆனால், அந்தச் சொற்களுக்குப் பின்னே இருக்கும் அறிவுத் தெளிவு என்னவென்று ஆராய்ந்து பார்த்தால், கைக்குச் சிக்குவது வெறும் பாசி பிடித்த நுரை மட்டும்தான்.

சிறுபிள்ளைத்தனமான தர்க்கம்

அண்மைக் காலமாகச் சமூக வலைதளங்கள் என்றழைக்கப்படும் அந்த விசித்திரமான கண்ணாடிக்கூண்டுகளில் ஒரு குரல் உரக்கக் கேட்கத் தொடங்கியிருக்கிறது. “ஆற்றுத் தண்ணீரை ஏன் கடலுக்கு அனுப்பி வீணடிக்கிறீர்கள்?” என்பதுதான் அந்த மேதாவிலாசமான கேள்வி. கேட்பதற்கு எளிய, ஒரு வியாபாரியின் தராசுப் புத்திக்கு சட்டென்று புரியக்கூடிய கேள்விதான். நாம் குடிக்காத நீர், நாம் பயிர் செய்யாத நீர், நமக்கு எவ்வித லாபமும் தராத நீர் கடலில் போய் விழுந்தால் அது வீண்தானே? என்ற சிறுபிள்ளைத்தனமான தர்க்கம் அதன் பின்னால் ஒளிந்திருக்கிறது.

வீதிச் சண்டைப் போக்கு

ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், அதுவும் நாட்டின் உயர்நீதிமன்றமும் நடுவர் மன்றமும் வழங்கிய தீர்ப்புகளையெல்லாம் தனக்குக் கீழே இருக்கும் வெறும் காகிதங்களாகக் கருதும் ஓர் அதிகார பீடத்தில் இருக்கும் மனிதர், மிகச் சாதாரணமான ஒரு வீதிச் சண்டையாளனைப் போலப் பேசுகிறார், “கடந்த ஆண்டு நாங்கள் திறந்துவிட்ட நீரை நீங்கள் கடலில் கலந்து வீணடித்துவிட்டீர்கள். எனவே இனித் தண்ணீர் தர முடியாது.”

எவ்வளவு எளிமையான சுயநலம்! இயற்கை உருவாக்கிய ஒரு நீர்வழிப்பாதையை, பல்லாயிரம் ஆண்டுகளாக உயிர்களைச் சுமந்து வரும் ஒரு ஜீவநதியை, ஏதோ தன் வீட்டுக் குழாயில் வரும் தண்ணீரைப் போலவும், அதைத் திறந்து மூடும் சாவியைத் தன் பாக்கெட்டில் வைத்திருப்பதாகவும் நினைத்துக் கொள்ளும் மனித அகந்தையின் உச்சம் இது. நதியின் விதியைத் தீர்மானிக்கும் அதிகாரம் மனிதனுக்கு என்று வந்தது?

இயற்கையின் சுழற்சியும் மனிதனின் சிறுமையும்

புவியின் மேற்பரப்பில் நான்கில் மூன்று பங்கு நீரால் சூழப்பட்டிருக்கிறது. இந்த நிலப்பரப்பை நாம் கடல் என்றும் பெருங்கடல் என்றும் நம் வசதிக்காகப் பெயரிட்டு அழைக்கிறோம். நன்னீர் கடலைச் சென்று அடைவது ஏதோ ஒரு விபத்தோ அல்லது திட்டமிடப்படாத தவறோ அல்ல. அதுதான் இயற்கையின் ஆதி விதி.

கடல்நீர் சூரியனின் வெப்பத்தால் ஆவியாகிறது; அந்த ஆவி மேகக் கூட்டங்களாக மாறுகிறது; காற்றழுத்த மாறுபாடுகளால் அந்த மேகங்கள் திசைநோக்கி நகர்கின்றன; புயலும், பருவமழையும் தரணியெங்கும் உருவாகின்றன. இந்த விசித்திரமான, அதேசமயம் மிகத் துல்லியமான இயந்திரத்தை இயக்கியது யார்? மனிதனின் எந்தப் பொறியியல் துறை இதற்கு வழிகாட்டியது?

மலைகள் என்பவை வெறும் பாறை இடுக்குகள் அல்ல; அவை இந்த மேகக் கூட்டங்களின் பயணத்தை மறித்து, அதை அமுதமாக மாற்றித் தரும் மந்திரக் கூடங்கள். சரிவுகளில் வழியும் மழைத்துளிகள், தங்களுக்குள் ஒரு பாதையை அமைத்துக் கொண்டு, நிலத்தின் தாகத்தைத் தணித்து, வண்டல் மண் என்னும் ஊட்டச்சத்தைச் சுமந்துகொண்டு போய் டெல்டா நிலங்களில் சேர்க்கின்றன. அந்த வண்டல்தான் மனிதனின் உணவுப் தேவையைப் பூர்த்தி செய்கிறது. நிலத்திற்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்து முடித்த பிறகு, நதி தன் தாயான கடலைச் சென்றடைகிறது. இது ஒரு பூரணமான வட்டம்.

அந்த வட்டத்தைச் பாதியில் உடைத்து, நீ என் எல்லைக்குள் மட்டுமே ஓட வேண்டும், கடலைத் தொடக் கூடாது என்று வேலி போட நினைப்பது, தாயையும் சேயையும் பிரிக்கும் பேதைமை அன்றி வேறென்ன?

முகத்துவாரமும் பல்லுயிர்ப் பெருக்கமும்

ஆற்று நீரை அதன் பாதையிலேயே தடுத்து, முற்றாக ஓர் இடத்தில் தேக்கி நிறுத்திவிட்டால் என்னவாகும்? நதி தன் இயல்பான ஓட்டத்தை இழக்கும். ஓடாத நதி, நதியே அல்ல; அது வெறும் சாக்கடை அல்லது இறந்துபோன குட்டை.

ஆறும் கடலும் சங்கமிக்கும் அந்த முகத்துவாரம் இருக்கிறதே, அது இயற்கையின் மிக விசித்திரமான ஒரு பரிசோதனைக் கூடம். அங்கே உப்பு நீரும் நன்னீரும் ஒன்றையொன்று தழுவிக்கொள்கின்றன. அந்தச் சந்திப்பில் உருவாகும் பல்லுயிர்த் தன்மை உலகத்தில் வேறு எங்குமே காண முடியாத ஒன்று. அங்கே வாழும் உயிரினங்களுக்கு ஒரு சிறப்பு வரம் உண்டு. அவையால் உப்பு நீரிலும் வாழ முடியும், நன்னீரிலும் நீந்த முடியும்.

நாம் ஆற்று நீரின் வரவைத் தடுத்துவிட்டால், அந்த முகத்துவாரத்தின் சமநிலை குலைந்துபோகிறது. நன்னீரின் அழுத்தம் குறையும் போது, கடல்நீர் சத்தமில்லாமல் நிலத்திற்குள் புகத் தொடங்குகிறது. நிலத்தடி வழியாகக் கடல்நீர் பல கிலோமீட்டர் தூரத்திற்கு உள்ளே வந்துவிட்டால், அந்த நிலம் உவர் நிலமாகிவிடும். விவசாயமும் பொய்த்துப் போகும்; நுண்ணுயிர்கள் முதல் பேருயிர்கள் வரை அனைத்தும் அழியும். கடல் ஓரத்தில் இருக்கும் மாவட்டங்களின் வாழ்க்கையே சுடுகாடாக மாறும்.

இதையெல்லாம் விட, அலையாத்திக் காடுகள், பவளப்பாறைகள், நன்னீர் மீன்கள் என ஆற்று நீரின் சத்துக்காகக் காத்திருக்கும் கோடானுகோடி உயிரினங்களின் நிலையை யார் யோசிப்பது?

மனிதன் எனும் சுயநலப் பிராணி

இயற்கை இந்த பூமிக்கு எல்லைக் கோடுகளை வரையறுக்கவில்லை. நதிக்குக் கர்நாடகா என்றும் தெரியாது, தமிழ்நாடு என்றும் தெரியாது; அது புவியீர்ப்பு விசையின் திசையில், தன் இயற்கை அமைப்பின் வழியே கடலை நோக்கி ஓடும் ஒரு ஜீவ நதி. ஆனால், மனிதன் தன் அரசியல் அதிகாரத்தாலும், குறுகிய மாநிலப் பற்றினாலும் இயற்கையின் வழியைச் சிறைபிடிக்க நினைக்கிறான்.

“எங்கள் நிலத்தில் விழும் மழை நீர் எங்களுக்கு மட்டுமே சொந்தம்; அது நிரம்பி வழிந்தால் மட்டுமே அடுத்தவனுக்குத் தருவோம்; அதை நீங்கள் கடலில் கலந்து வீணடித்துவிட்டீர்கள்” என்று வாதிடும் மேலதிகாரத் தர்க்கம், மனித சுயநலத்தின் மிக மோசமான முகம். நதியை ஒரு பொதுச் சொத்தாகப் பார்க்காமல், தன் வீட்டுக் குழாயில் வரும் தண்ணீராகக் கருதும் இந்த மனப்போக்கு, புவிசார் அறிவியலையே கேலி கூத்தாக்கக் கூடியது.

குறைந்தபட்ச உயிரோட்டம்

ஒரு நதி உயிருடன் இருக்க வேண்டும் என்றால், அதில் எப்போதும் குறிப்பிட்ட அளவு நீர் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். இதைச் சூழலியலாளர்கள் சூழலியல் நீரோட்டம் என்பார்கள். ஆனால் மனிதன் என்ன செய்கிறான்?

ஆற்றின் குறுக்கே ஒன்றன்பின் ஒன்றாக அணைகளைக் கட்டி, சொட்டு நீரைக் கூட கீழே விடாமல் தேக்குகிறான். இதனால், ஆற்றுப் படுகைகள் வறண்டு, மணல் கொள்ளையால் ஆழமாக்கப்பட்டு, இறுதியில் சாக்கடை நீரும் கழிவுகளும் மட்டுமே ஓடும் வெறும் "கழிவுநீர்க் கால்வாய்களாக" நதிகள் உருமாறுகின்றன.

தன் சொந்தப் பயன்பாட்டிற்கு அப்பாற்பட்டு, சூழலியல் சமநிலையைப் பேண நதிக்குத் தேவைப்படும் நீரைத் தருவதற்குக்கூட மனித மனமும் அவனது சட்டங்களும் மறுக்கின்றன.

பயன்பாடு என்ற குறுகிய பார்வை

மனிதன் இயற்கையில் உள்ள எல்லாவற்றையும் தன் "பயன்பாட்டுத் தராசில்" மட்டுமே வைத்துப் பார்க்கிறான். ஒரு மரம் பலன் தந்தால் அது பயன்பாடு; பலன் தராவிட்டால் அது வெறும் விறகு. ஒரு நதி வயலுக்கு நீர் பாய்ச்சினால் அது பயனுள்ளது; அது கடலில் போய் விழுந்தால் அது "வீண்". இயற்கையில் எதுவுமே வீணில்லை என்ற அடிப்படை உண்மை அவனுக்குப் புரிவதில்லை.

கடலில் கலக்கும் ஆற்று நீர்தான் கடலின் உப்புத் தன்மையைக் கட்டுப்படுத்துகிறது; அதுதான் கடல் வாழ் உயிரினங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொண்டு சேர்க்கிறது; அதுதான் கடல்நீரின் வெப்பநிலையைச் சீராக வைத்து, மழை தரும் மேகங்களை உருவாக்குகிறது. இந்த நுட்பமான சங்கிலித் தொடரை உடைக்கும் மனிதன், இறுதியில் தன் சொந்த நிலத்தடி நீரையே உவர்நீராக மாற்றி, குடிநீருக்காகக் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்படுகிறான்.

மனிதனின் இந்தப் பேராசையும், இயற்கையைத் தான் வென்றுவிட்டதாகக் கருதும் அகந்தையுமே இன்றைய அனைத்து நீர்ச் சிக்கல்களுக்கும், பருவநிலை மாற்ற அச்சுறுத்தல்களுக்கும் மூலக்காரணமாக அமைந்திருக்கிறது.

உலக நாடுகளின் அனுபவமும் பேராசையின் விலையும்

நாம் ஏதோ புதியதாக ஒரு தவற்றைச் செய்யவில்லை. மனிதனின் பேராசை உலகெங்கிலும் ஒரே மாதிரிதான் தொழிற்படுகிறது. வியட்நாம், கம்போடியா, பாகிஸ்தான், இராக், உஸ்பெகிஸ்தான், ஈரான், அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற பல நாடுகளில் உள்ள டெல்டாப் பகுதிகள் இன்றைக்குப் பாலைவனமாக மாறிக் கொண்டிருக்கின்றன. காரணம்? ஆற்று நீரை முற்றாகத் தடுத்து ஆங்காங்கே அணைகளைக் கட்டியதுதான்.

அணைகள் கட்டப்பட்டு, முகத்துவாரங்களுக்கு நீர் வருவது நின்றவுடன், கடல்நீர் நிலத்திற்குள் புகுந்தது. விவசாய நிலங்கள் உப்பாக மாறின. மகசூல் வீழ்ச்சியடைந்தது. இன்றைக்கு அந்த நாடுகள் நிலத்தைச் சீரமைக்கப் பில்லியன் கணக்கில் பணத்தைக் கொட்டிக்கொண்டிருக்கின்றன. இயற்கையை வென்றுவிட்டதாக நினைத்த மனிதன், முடிவில் தன் சொந்தச் செலவிலேயே தன் கல்லறையைத் தோண்டிக் கொண்ட கதையாக இது முடிந்தது.

நம் நாட்டின் எண்களைப் பாருங்கள். கோதாவரி ஆற்றில் இருந்து மட்டும் ஓராண்டில் சுமார் 2,850 டி.எம்.சி தண்ணீர் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. பிரம்மபுத்திரா நதியிலிருந்து ஓராண்டில் சுமார் 22,000 டி.எம்.சி தண்ணீர் கடலைச் சென்றடைகிறது.

இந்த எண்களைப் பார்த்தவுடனே, நம் ஊர் அரசியவாதிகளுக்கும், சுயநலச் சிந்தனையாளர்களுக்கும் ரத்த அழுத்தம் எகிறக்கூடும். "அவ்வளவு தண்ணீரும் வீணாகிறதே!" என்று புலம்புவார்கள். ஆனால், அந்தத் தண்ணீர்தான் வங்காள விரிகுடாவின் உப்புத் தன்மையைச் சமநிலையில் வைத்திருக்கிறது. அந்தத் தண்ணீர்தான் இந்தியப் பெருங்கடலின் தட்பவெப்ப நிலையைத் தீர்மானிக்கிறது. அது இல்லையென்றால், நமக்கு மழை தரும் பருவக்காற்றே உருமாறிப்போகும் என்பதை இந்த நுண்மதி படைத்த மனிதர்கள் உணர மறுக்கிறார்கள்.

முன்னோர்களின் வழியும் இன்றையத் தீர்வும்

நம் முன்னோர்கள் அறிவிலிகள் அல்லர். அவர்கள் ஆற்றுக்குக் குறுக்கே மாபெரும் மதகுகளைக் கட்டி, நீரை ஒரே இடத்தில் சிறைபிடிக்க நினைக்கவில்லை. மாறாக, நதி வழியும் பாதையெங்கும் ஏரிகளையும், குளங்களையும், குட்டைகளையும் வெட்டினார்கள்.

நதியில் வெள்ளம் பெருகும்போது, அந்த உபரி நீர் ஏரிகளுக்குச் சென்றது. நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது. நதியின் பிரதான ஓட்டம் தடைபடாமல் கடலை நோக்கிச் சென்றுகொண்டுதான் இருந்தது. நதிக்கும் கடலுக்குமான பந்தம் எந்தக் காலத்திலும் துண்டிக்கப்படவில்லை.

ஆனால் நாம் என்ன செய்கிறோம்? ஏரிகளையும் குளங்களையும் ஆக்கிரமித்துக் வீடுகளாகவும் தொழிற்சாலைகளாகவும் மாற்றுகிறோம். பிறகு, மழைக்காலத்தில் நீர் தேங்கும்போது, தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறதே என்று நதியின் மீது பழியைப் போடுகிறோம்.

இயற்கையின் இறுதித் தீர்ப்பு

அணை நிரம்பி வழிந்து, வேறு வழியே இல்லாமல் வழியும் நீரை மட்டும் மனமில்லாமல் கீழ்ப்பாசன மாநிலங்களுக்கு அனுமதிக்கும் ஒரு சில மாநில ஆட்சியாளர்களும், அவர்களுக்குச் சொம்பெடுக்கும் போராளிகளும் இயற்கையின் இந்த எளிய சுழற்சியைப் புரிந்துகொள்வார்களா என்பது சந்தேகம்தான்.

ஏனெனில், அதிகாரத்தின் பீடத்தில் அமர்ந்திருப்பவர்களுக்குத் தங்களின் பதவியும், அடுத்த தேர்தலுமே பிரதானமாகத் தெரிகிறதே தவிர, புவியின் எதிர்காலம் தெரிவதில்லை.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். இயற்கையை விஞ்சிய ஆசான் இந்த உலகத்தில் வேறு எவரும் இல்லை. அது மனிதனைப் போலக் காகிதங்களில் தீர்ப்பு எழுதுவதில்லை; உடனடியாக தண்டனையும் வழங்குவதில்லை. அது தன் பாடங்களை மெதுவாக, ஆனால் தீர்க்கமாக நடத்துகிறது.

காலத்தின் போக்கில் அது வைக்கும் தேர்வுகளில் மனிதன் தோற்றுப்போகும்போது, இயற்கை அறிவிக்கும் தீர்ப்பு மிகவும் கொடூரமானதாக இருக்கும். அப்போது கடலும் இருக்காது, நதியும் இருக்காது, அதைப் பங்கிட்டுக் கொள்ளச் சண்டையிட்டுக் கொண்டிருந்த மனிதனும் இருக்க மாட்டான். அப்போது, எஞ்சியிருக்கும் வெறும் வறண்ட ஆற்றுப் படுகையில், காற்று தன் மௌனமான புலம்பலை மட்டுமே ஒலித்துக் கொண்டிருக்கும்.

*****

No comments:

Post a Comment