திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்
சூத்திரம் – 10
கண்களில் ஒரு மதுபானக் கடை!
இருள்
கவியத் தொடங்கிய இனிய வேளை.
அவனும்
நண்பனும் பூம்புகார் கடற்கரையில் நடந்து கொண்டிருந்தனர்.
நண்பன்
திடீரென்று தன் இருப்பில் செருகி மறைத்து வைத்திருந்த வெளிநாட்டு மதுவை ஒரு மடக்குக்
குடித்தான். வேலையின் கவலைகளையெல்லாம் மறந்து அவன் முகம் சற்று தளர்வடைந்தது. ஒருவிதப்
போதை அவன் கண்கள் வழியே பரவியது.
அவன்
இதை எதிர்பார்க்கவில்லை.
"இதுக்குதான்டா
உன் கூட வரவே யோசிக்கிறேன்!" என்றான்.
நண்பன்
அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே, "மச்சி! இந்த ஜானி வாக்கரை குடிக்கிறப்போ
வர்ற கிக்கு இருக்கே, அது குடிக்கிறவனுக்குத்தான் தெரியும். பக்கத்துல சும்மா வர்ற
உனக்கு கண்டிப்பா புரியாது! கொஞ்சம் அதெ அனுபவிச்சுப் பாருடான்னா கேட்க மாட்டேங்றீயே!"
என்றான் பெருமிதத்தோடு.
அவன்
புன்னகைத்தபடி "இனி ஜானி வாக்கரோடு வர்றதா இருந்தா என்னோட வாக்கிங் வராதே."
என்றான்.
அப்போது,
அவர்கள் எதிரே அவள் தன் தோழிகளோடு வந்து கொண்டிருந்தாள்.
சடரென்று
ஒரு விபத்தைப் போல அவளது பார்வையும் அவனுடைய பார்வையும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன.
அவள்
தன் கலைந்த கூந்தலை ஒதுக்கியபடி, அவனைப் பார்த்து மிக மெலிதாக, அன்பும் கனிவும் நிறைந்த
ஒரு புன்னகையைச் சிந்தினாள்.
அந்த
ஒரே ஒரு பார்வையில், நாள் முழுவதுமான களைப்பு மறைந்து அவனது முகத்தில் ஓர் ஒளி பிறந்தது.
அவன்
முகம் அப்படியே மாறியது. அவனது கண்கள் மின்னின. உதடுகளில் சொல்ல முடியாத ஓர் ஆனந்தப்
புன்னகை மலர்ந்தது. உலகையே மறந்து, அவளது அன்பில் அவன் மெய்மறந்து காதல் போதையில் தள்ளாடிப்
போய் நின்றான்.
"நைஸ்
டூ மீட் யூ. பீச் காற்று ரொம்ப பீஸ்புல்லா இருக்குல்ல." அவ்வளவுதான் எளிமையாக
விசாரித்து விட்டு, அவள் தோழிகளோடு கலகலவெனச் சிரித்தபடி கிளம்பி விட்டாள்.
ஜானி
வாக்கரை மீண்டும் மறைபிரதேசத்தில் வைத்திருந்த நண்பன் இதை ஆச்சரியத்தோடு பார்த்தான்.
"மச்சி!
நான்தான் சரக்கு அடிச்சிருக்கேன். எனக்குத்தான் போதை ஏறணும். ஆனா நீ எதுவுமே குடிக்காமலேயே,
அவ உன்னை ஒரு தடவை பார்த்த உடனே உன் மூஞ்சில போதை ஏறுன மாதிரி தள்ளாடுறீயேடா, எப்படிரா?
" என்றான் குழப்பத்துடன்.
"நீ
குடிக்கிற மதுவோ, போதைப்பொருளோ அதை உண்டால்தான் தற்காலிகக் கிறக்கத்தைத் தரும். ஆனா,
காதல் இருக்கே. கண்டாலே போதும்டா ஜானி வாக்கரைத் தாண்டின போதைதான். "
"உன்னோட
இந்த லாஜிக்கல் பார்முலா சூப்பரா இருக்கேடா!"
"இது
என்னோடா தர்க்க சூத்திரம் இல்லடா. திருவள்ளுவரோட காதல் சூத்திரம்."
"ரெண்டாயிரம்
வருஷத்துக்கு முன்னாடி வாழ்ந்த மனுஷன் எப்படிடா இப்படி ஒரு சூத்திரத்தை எழுதுனாரு?"
"அதனாலத்தான்
அந்தப் புலவரைத் தெய்வப் புலவர்ங்றாங்க. அவர் எழுதுன அந்தக் காதல் சூத்திரம் இதுதாண்டா.
"உண்டார்கண் அல்லது அடுநறாக் காமல்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று." (குறள், 1090)
எப்படிடா
இருக்கு?"
"நான்
இந்த ஜானி வாக்கரை மறைச்சு வெச்சிருக்கிறதுக்காக அந்த ஞானி டாக்கர்கிட்டெ மன்னிப்புக்
கேட்டுக்கிறேன்டா" நண்பன் தன்னுள்ளே மறைவிலிருந்த
பாட்டிலை எடுத்துக் கடற்கரை மணலில் வீசினான்.
இதைப்
பார்த்த்தும், நிஜமாகவே அவன் முகம் இப்போது காதலியின் பார்வையைக் கண்டதை விட அதிக மகிழ்ச்சியில்
ஜொலிக்க, நண்பன் தொடர்ந்தான், "செமயா சொன்ன மச்சி! சரக்கு உடம்பைக் கெடுத்துக்
குடிக்கிறவனை அழிக்கும். ஆனா காதல், அது பார்த்தாலே போதும் சரக்கை விட பெரிய போதையை
அளிக்கும். மனுஷன மனுஷனா வாழ வைக்கும். வாழ்க்கையையும் அழகாக்கும்! இப்படிப்பட்ட போதையை
வெச்சுக்கிட்டாடா நம்ம பசங்க டாஸ்மாக்கைத் தேடி அலையுறானுங்க?" என்று கூறிச் சிரித்தான்
நண்பன்.
"அவனுங்களுக்கு
உனக்குக் கிடைக்குற மாதிரி ஜானி வாக்கர் கிடைக்குணுமே! அதான் கிடைக்கிறதைத் தேடி போறானுங்க."
என்று கலாய்த்தான் அவன்.
"அப்படி
இல்லடா! அவனுங்களுக்கு நீ எனக்கு எப்படி எடுத்துச் சொன்னீயோ அப்படி இந்த 1090 ஆவது
குறளை எடுத்துச் சொல்ல ஆள் இல்லாமத்தான்டா டாஸ்மாக்கத் தேடி அலையுறானுங்க." என்றான்
நண்பன்.
உண்டால்தான்
மயக்கும் கள். கண்டாலே மயக்கும் காதல்.
- சூத்திரங்கள் தொடரும்!
*****

No comments:
Post a Comment