தங்கத்தைத் தேடித் துணி பொறுக்கிய திருடர்களின் சோகக் கதை!
பூட்டை
உடைப்பது என்பது ஒரு கலை. அதுவும் பட்டப்பகலில், அதுவும் வேலூர் குடியாத்தத்தின் பரபரப்பான
ஆற்றோரம் பகுதியில், பூட்டை உடைத்து உள்ளே நுழைய தனித் திறமை வேண்டும். இப்படித் திறமையையும்
நேரத்தையும் முதலீடு செய்து உள்ளே நுழைந்த கொள்ளையர்களுக்குக் காத்திருந்தது ஒரு மாபெரும்
வரலாற்று அதிர்ச்சி!
கதையின்
நாயகர் செல்வம், காந்தி ரோட்டில் ஒரு ஜெராக்ஸ் கடை நடத்தி வருபவர். வேலை நிமித்தமாக
அவர் சென்னைக்குப் பயணமாகியிருந்தார். அவருடைய மனைவி உண்ணாமலை வழக்கம் போல ஜெராக்ஸ்
கடையைக் கவனிக்கச் சென்றுவிட, வீட்டில் எஞ்சியிருந்தது செல்வத்தின் 75 வயதுத் தாயார்
கண்ணம்மாள் மட்டுமே. மதிய வேளையில் பாட்டியும் வீட்டைப் பூட்டிவிட்டு மெல்லக் கடைப்
பக்கம் நடைபோட, வீட்டின் பூட்டு "யாரும் இல்லையே, வந்து பாரேன்" என்று கொள்ளையர்களுக்கு
அழைப்பு விடுத்திருக்கிறது.
பூட்டியிருந்த
கதவைக் கண்டதும் கொள்ளையர்களின் நெஞ்சில் நிச்சயமாக ரயில்கள் ஓடியிருக்கும்.
"இன்றைக்குக் குறைந்தபட்சம் ஐம்பது பவுன் தங்கம், இரண்டு லட்ச ரூபாய் ரொக்கம்,
ஒருவேளை அதிர்ஷ்டம் இருந்தால் வைரம்!" என்றெல்லாம் கற்பனைக் குதிரைகளைத் தட்டிவிட்டபடி,
பூட்டை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்திருக்கிறார்கள்.
உள்ளே
நுழைந்ததும் அவர்கள் பார்வையில் பட்டது ஒரு பீரோ. கொள்ளை அத்தியாயத்தின் உச்சக்கட்டக்
காட்சி இதுதான். பூட்டை உடைத்த கையோடு பீரோவையும் திறந்துவிடலாம் என்று சகல வித்தைகளையும்
இறக்கியிருக்கிறார்கள். ஆனால், அந்தப் பீரோவோ கொள்ளையர்களின் முயற்சிக்குச் சற்றும்
மசியாமல், இரும்புக் கோட்டையாக வீறுகொண்டு நின்றிருக்கிறது.
அங்கேதான்
அந்தத் தர்மசங்கடமான கேள்வி பிறந்திருக்கிறது. "இவ்வளவு கஷ்டப்பட்டுப் பூட்டை
உடைத்து உள்ளே வந்த பிறகு, வெறும் கையோடு திரும்பினால் திருட்டுத் தொழிலுக்கே பெரும்
அவமானம் அல்லவா?"
மனதைத்
தேற்றிக்கொண்ட கொள்ளையர்கள் சுற்றும் முற்றும் பார்த்திருக்கிறார்கள். தங்கம் கிடைக்கவில்லை
என்றால் என்ன, இரும்பு இருக்கிறதே! வீட்டில் வைத்திருந்த சுமார் 60 கிலோ எடை கொண்ட
இரும்புச் சட்டங்களை முதலில் கண்ணில் ஒற்றிக்கொண்டு அள்ளியிருக்கிறார்கள்.
அடுத்து,
"வெறும் இரும்பை மட்டும் தூக்கிச் சென்றால் என்ன மரியாதை?" என்று யோசித்திருக்க
வேண்டும். நேரே வீட்டு வாசலுக்கு வந்து, கொடியில் காயப்போட்டிருந்த துணிகளைப் பார்த்திருக்கிறார்கள்.
சூரிய வெளிச்சத்தில் சுகமாகாய் உராய்ந்து காய்ந்துகொண்டிருந்த துணிமணிகளை, ஒன்று பாக்கி
இல்லாமல் வாரிச்சுருட்டித் மூட்டையாகக் கட்டியிருக்கிறார்கள். ஒருவேளை, "அடுத்த
திருட்டுக்குப் போகும்போது போட்டுக்கொள்ளப் புதிய ஆடைகள் கிடைத்துவிட்டன" என்ற
திருப்தி அவர்களுக்கு இருந்திருக்கலாம்.
இரவில்
சென்னையிலிருந்து வீடு திரும்பிய செல்வத்திடம், பாட்டி கண்ணம்மாள் இந்த 'இரும்பு மற்றும்
துணி' திருட்டு மேஜிக்கைப் பற்றி விவரித்திருக்கிறார். செய்தி கேட்டு அதிர்ந்துபோன
செல்வம், இப்போது போலிசில் புகார் கொடுத்திருக்கிறார்.
பட்டப்பகலில்
நடந்த இந்த வீரம் செறிந்த சம்பவத்தைக் கேட்டு குடியாத்தம் மக்கள் வியப்பில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
தங்கம், பணம் திருடுபோகும் என்ற பயத்தில் வீட்டைப் பூட்டிச் சென்றவர்கள், இப்போது கொடியில்
காய்ந்து கொண்டிருக்கும் துணிகளைக் காப்பற்றத் தனிப் பாதுகாப்புப் படையை அமர்த்தலாமா
என்று யோசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். வேலூர் காவல் துறை இந்த 'ஆடை மற்றும் இரும்புப்
பிரியர்களை' தீவிரமாகத் தேடி வருகிறது.
ஒருவேளை
அவர்கள் திருட வந்தவர்கள் அல்ல, துணி துவைக்கும் வேலையை மிச்சப்படுத்த வந்த தொண்டுள்ளம்
கொண்டவர்களா அல்லது இரும்புக் கடைக்குச் சாமான்களைத் தேடி வந்தவர்களா என்பது காவல்
துறை விசாரணையில்தான் தெரியவரும்.
தங்கத்தைத்
தேடிச் சென்ற இடத்தில் துணிகளை அள்ளிய நவீனத் திருடர்களாக அவர்கள் ஆகியிருக்கிறார்கள்.
வாழ்க திருடர்கள்! வளர்க அவர்களது புதுமையான சிந்தனைகள்!
*****

No comments:
Post a Comment