வேளாண்மையின் விசித்திரக் கூத்துகள்
மனிதன்
பிறக்கிறான்; அழுகிறான்; அழுது முடித்ததும் பசிக்கிறது என்கிறான். பசித்தால் எதை உண்பது?
'அரிசிச் சோறு' என்கிறது தமிழ்ச் சமூகம்.
ஆனால்,
அந்த அரிசி எப்படி வருகிறது? நிலத்திலிருந்து அல்லவா?
"இல்லை,
அது சூப்பர் மார்க்கெட் பிளாஸ்டிக் பையிலிருந்து வருகிறது, ஜிபே அல்லது ஆன்லைனில் ஆர்டர்
செய்தால் வருகிறது!" என்று நம்பும் ஒரு தலைமுறையை நாம் மிக வெற்றிகரமாக உருவாக்கி
வைத்திருக்கிறோம்.
சமீபத்திய
அதிர்ச்சி செய்தி இதுதான் : தமிழ்நாட்டில் அரிசி விலை கிலோவுக்கு 15 ரூபாய் முதல்
30 ரூபாய் வரை ஏறிவிட்டதாம். மக்கள் பேரதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்களாம்.
இத்தனை
காலம் தூங்கிவிட்டு, திடீரென்று விழித்துக்கொண்டு "ஐயோ, அரிசி விலை ஏறிவிட்டதே!"
என்று அலறுவது தமிழனின் தொன்று தொட்ட பாரம்பரியப் பொழுதுபோக்கு.
"எல்
நினோ வந்துவிட்டது, மழை பெய்யவில்லை, காவிரி டெல்டாவில் வறட்சி!" என்று வழக்கம்
போல இயற்கை மீது பழியைப் போட்டுவிட்டுத் தப்பித்துக்கொள்ள நிர்வாகங்களோடு சேர்ந்து
ஊடகங்களும் தயாராக இருக்கின்றன.
இயற்கை
பாவப்பட்டது. அது பதில் பேசாது. அதனால் எல்லாப் பழியையும் அதன் மீது சுமத்திவிடலாம்.
அது ஒன்றும் சொல்லாது.
ஆனால்
உண்மை என்னவென்றால், இயற்கை செய்த துரோகத்தை விட, நாம் வேளாண்மைக்குச் செய்த துரோகம்தான்
மிகப் பெரியது.
கடந்த
பல தசாப்தங்களாக, கட்டமைப்புச் சிக்கல்களையும் உற்பத்திக் குறைபாடுகளையும் நாம் அழகாகப்
பராமரித்து, வளர்த்து, சீராட்டி வந்திருக்கிறோம். இப்போது அதற்கான வட்டி வசூலிக்கப்படும்போது,
"ஐயோ, வட்டி இவ்ளோ அதிகமா?" என்று மூக்கைச் சிந்திக்கொண்டிருக்கிறோம்.
சுருங்கும் நிலமும், வீங்கும் வீண்கனவுகளும்
ஒரு
காலத்தில் 'சோழநாடு சோறுடைத்து' என்றார்கள். இப்போது 'சோழநாடு ரியல் எஸ்டேட் உடைத்து'
என்று மாற்றி எழுத வேண்டும்.
புள்ளிவிவரங்களைப்
பார்த்தால் தலைச்சுற்றும். 1970களில் தமிழ்நாட்டின் நெல் சாகுபடிப் பரப்பு 27 லட்சம்
ஹெக்டேராக இருந்தது. 2025இல் அது எவ்வளவு தெரியுமா? வெறும் 19 லட்சம் ஹெக்டேர். சுமார்
8 லட்சம் ஹெக்டேர் நிலம் எங்கே போயிற்று? வேற்றுகிரகவாசிகளா தூக்கிக் கொண்டு போய்விட்டார்கள்?
இல்லை. நாம்தான் அதை 'நகரமாக்கல்' என்ற பெயரிலும், 'ப்ளாட் போட்டு விற்றல்' என்ற பெயரிலும்
தார்ச் சாலைகளாகவும், சிமெண்ட் காங்க்ரீட் காடுகளாகவும் மாற்றி வைத்திருக்கிறோம்.
இந்திய
அளவில் மொத்தச் சாகுபடிப் பரப்பளவும், நெல் சாகுபடிப் பரப்பளவும் உயர்ந்து கொண்டிருக்கிறதாம்.
ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் அது சுருங்கிக் கொண்டே போகிறது. இதன் விளைவு என்ன?
நம்முடைய
வயிற்றுப் பசியைத் தீர்த்துக்கொள்ள நாம் அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகாவிடம்
கையேந்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். "நாங்கள் திராவிடக்
கம்பீரம், தமிழன் பாரம்பரியம், நாகரிகத்தின் தொட்டில்" என்று மேடையில் பேசுவதற்கு
வேண்டுமானால் நாம் தம்பட்டம் அடிக்கலாம், ஆனால் தட்டில் சோறு விழ வேண்டும் என்றால்
பக்கத்து மாநிலத்துக்காரன் தயவு தேவைப்படுகிறது.
தேசிய
அளவில் நெல் உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 1970களில் முன்னணியில் இருந்தது.
இப்போது அது 5 சதவீதத்திற்குள் சுருங்கிவிட்டது. பஞ்சாப்பும் ஹரியானாவும் வேளாண்மைக்கு
முக்கியத்துவம் கொடுத்து, நவீன தொழில்நுட்பத்தையும் பாசன வசதிகளையும் புகுத்தி,
2025 இல் ஹெக்டேருக்கு 4,400 கிலோவுக்கும் அதிகமாக விளைச்சலைப் பெருக்கிக்கொண்டிருக்கின்றன.
நாமோ இன்னும் ஹெக்டேருக்கு 3,300 கிலோ என்ற அளவிலேயே பல ஆண்டுகளாகத் தேங்கிக் கிடக்கிறோம்.
ஏன்
இந்தத் தேக்கம்? ஏனென்றால், நமக்கு அரசியல் பேச நேரம் இருக்கிறது, சினிமா பார்க்க நேரம்
இருக்கிறது, ஆனால் நிலத்தை எப்படி வளப்படுத்துவது என்று யோசிக்க நேரமில்லை.
விவசாயி என்பவன் தியாகியா, லூஸா?
தமிழ்
சினிமாவில் விவசாயியை எப்படி காட்டுவார்கள்? கிழிந்த வேட்டி, கையில் கலப்பை, கண்ணீரோடு
வானத்தைப் பார்க்கும் முகம். அவன் ஒரு 'தியாகி' என்று பட்டம் கொடுப்பார்கள். ஆனால்
நிஜ வாழ்க்கையில்? அவனை ஒரு முட்டாளாகவே நிர்வாகங்கள் நடத்துகின்றன.
சாகுபடியில்
லாபமே இல்லை என்றால் ஒருவன் ஏன் அந்தத் தொழிலைச் செய்ய வேண்டும்? 1975 முதல் 2022 வரையிலான
தரவுகளின்படி தமிழ்நாட்டு விவசாயிகள் நெல் சாகுபடி மூலமாக லாபம் ஈட்டிய ஆண்டுகள் எத்தனை
தெரியுமா? வெறும் 15 ஆண்டுகள் மட்டுமே!
குறிப்பாக,
2001 ஆம் ஆண்டுக்குப் பிறகு, கடந்த 25 ஆண்டுகளில் வெறும் மூன்று ஆண்டுகள் மட்டுமே விவசாயிகள்
லாபம் பார்த்திருக்கிறார்கள்.
யோசித்துப்பாருங்கள்,
25 வருடத்தில் 22 வருடம் நஷ்டம் தரும் ஒரு தொழிலை உலகத்தில் வேறு யாராவது செய்வார்களா?
எந்தக் கார்ப்பரேட் கம்பெனியாவது நடத்துமா? உடனே மூடிவிட்டு ஓடியிருப்பார்கள். ஆனால்
விவசாயி செய்கிறான். அதை நாம் 'விவசாயத்தின் மீது அவனுக்கு இருக்கும் பாசம்' என்று
சொல்லி ஏமாற்றுகிறோம். உண்மையில் அது பாசம் அல்ல, வேறு தொழில் தெரியாத அவனது கதியற்ற
நிலை.
கூலி
உயர்வு, டிராக்டர் வாடகை, நீர்ப்பாசனச் செலவு, உரம், பூச்சிக்கொல்லி விலை என எல்லாமே
ராக்கெட் வேகத்தில் ஏறி விட்டன. ஆனால் நிர்வாகங்கள் நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதார
விலை ஆமை வேகத்தில் கூட நகர மறுக்கிறது. விளைவு? விவசாயி கடன் சுமையில் மூழ்குகிறான்.
கடன் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான் அல்லது நிலத்தை விற்றுவிட்டு நகரத்துக்கு
வாட்ச்மேன் வேலைக்கு வருகிறான்.
அரிசியோடு முடியப்போவதில்லை இந்த
நாடகம்!
"சரி
போனால் போகிறது, அரிசி விலைதானே உயர்ந்தது, நாம் சப்பாத்தி சாப்பிட்டுக்கொள்வோம்"
என்று அலட்சியமாக நினைத்தால், உங்களை விட அறிவாளி யாரும் இருக்க முடியாது. இந்தப் பிரச்சினை
அரிசியோடு நிற்கப்போவதில்லை.
இந்தியாவின்
மொத்த உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு எந்தெந்தப் பயிர்களில் எல்லாம் கொடூரமாக வீழ்ச்சியடைந்துள்ளது
தெரியுமா?
நெல்
உற்பத்திப் பங்கு 8.62% இலிருந்து 5.64% ஆகக் குறைந்துள்ளது. துவரை உற்பத்திப் பங்கு
2.13% இலிருந்து 1.19% ஆகச் சரிந்துள்ளது. எண்ணெய் வித்துக்கள் 9.31% இலிருந்து
3.01% ஆகக் கொடூர வீழ்ச்சி கண்டுள்ளது. நிலக்கடலை உற்பத்தி 15.82% இலிருந்து
10.23% ஆகக் குறைந்துள்ளது. பருத்தி உற்பத்தி 3.20% இலிருந்து 0.94% ஆக தரை தட்டியுள்ளது.
கரும்பு உற்பத்தி 10.18% இலிருந்து 3.59% ஆகச் சுருங்கியுள்ளது.
மக்காச்சோளத்தைத்
தவிர வேறு எந்தப் பயிரிலும் தமிழ்நாட்டிற்குப் பெருமைப்பட்டுக்கொள்ள எதுவுமில்லை. இதற்கும்
எல் நினோதான் காரணமா? வானம் மழை தராததால் பருத்தி விளையவில்லையா? கரும்பு சுருங்கியதா?
இல்லை,
நம்முடைய கொள்கை வீழ்ச்சி அது. தொலைநோக்குப் பார்வை இல்லாத திட்டங்களும், நடைமுறைஎதார்த்தம்
தெரியாமல்திட்டங்களும்சேர்ந்து உருவாக்கிய பேரழிவு இது. நாளைக்கு பருப்பு விலை கிலோ
300 ரூபாய், நல்லெண்ணெய் லிட்டர்500 ரூபாய் என்று ஏறும்போது, மக்கள் மீண்டும் 'பேரதிர்ச்சி'
அடைவார்கள். தொலைக்காட்சி விவாதங்களில் எச்சில் தெறிக்கப் பேசுவார்கள். பிறகு வழக்கம்
போல மறந்துபோய் அடுத்த சினிமா பட ரிலீஸுக்குக் கொடி பிடிப்பார்கள்.
பணவீக்கப் பிசாசும், நிர்வாகத்தின்
தூக்கமும்
2026
மே மாதத் தரவுகளின்படி, இந்தியாவின் சராசரி பணவீக்கம் 3.93% ஆக இருக்கும்போது, தமிழ்நாட்டின்
பணவீக்கம் 5.11% ஆக உயர்ந்து நிற்கிறது. ஏன்? ஏனென்றால் உணவின் விலை ஏறிவிட்டது.
ஒரு
மாநிலத்தில்வேளாண் உற்பத்தி குறைந்தால், உணவிற்காக வெளிமாநிலங்களை நம்பியிருந்தால்,
பணவீக்கம் ஏறாமல் என்ன செய்யும்? உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்காமல் நாம் என்ன செய்யப்
போகிறோம்?
நெடுங்காலமாகத்
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக் கொள்கையில் விவசாயத்திற்கு வழக்கம் போல இரண்டாம்பட்ச
இடமே கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது. தொழிற்சாலைகளுக்கு நிலம் கையகப்படுத்திய வேகத்தில்,
பாசனக் கால்வாய்களைத் தூர்வார நிர்வாகங்கள் முன்வரவில்லை. விளைவு? பாசனப் பரப்பு சுருங்கியது,
தரிசு நிலப் பரப்பு கூடியது, சாகுபடிப் பரப்பு குறைந்தது. இப்போது விலைவாசி விண்ணைத்
தொடுகிறது.
சில கசப்பான மருந்துகள்
நாம்
செய்ய வேண்டியது மிகப்பெரிய பிரம்ம வித்தை ஒன்றும் இல்லை. கொஞ்சம் மூளையையும், நியாயமான
மனசாட்சியையும் பயன்படுத்தினால் போதும்.
முதலில்
மேடைப் பேச்சு பேசும் நிர்வாகிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, உண்மையான சிறந்த வேளாண் நிபுணர்களைக்
கொண்ட ஒரு குழுவை அமைக்க வேண்டும். அவர்கள் தமிழ்நாட்டின் வேளாண்மையை வேகமாக முடுக்கிவிடுவதற்குக்
குறுகியகால, நீண்டகாலத் திட்டங்களை உருவாக்க வேண்டும்.
உண்மையான
நியாயமான கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாயிக்கு லாபம் கிடைத்தால்தான்
அவன் நிலத்தில் இறங்குவான். "நீ தியாகம் செய், நான் சாப்பிடுகிறேன்" என்றால்
எவனும் வர மாட்டான்.
நேரடி
நெல் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அங்கிருக்கும் ஊழலையும்
இடைத்தரகர்களின் தலையீட்டையும் தூக்கி எறிய வேண்டும். மழையில் நெல் நனைந்து முளைவிடும்
அவலத்தை நிறுத்த சேமிப்புக் கிடங்குகளின்எண்ணிக்கையையும் கொள்ளளவையும் பெருக்க வேண்டும்.
40,000
க்கும் மேற்பட்ட குளங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. பெரும்பாலான குளங்கள் இப்போது ஆக்கிரமிப்பில்
உள்ளன அல்லது தூர்வாரப்படாமல் தூங்கி வழிகின்றன. ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நீளமுள்ள
கால்வாய்களில் தூர்வாரும் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும். நுண்பாசன முறைகளான சொட்டுநீர்ப்
பாசனம், தெளிப்புநீர்ப் பாசனத்தைக் காகிதத்தில் மட்டும் காட்டாமல் நிஜத்தில் தீவிரப்படுத்தி,
பயிர் உற்பத்தியையும் நீர்ப் பயன்பாட்டுத் திறனையும் உயர்த்த வேண்டும்.
விழித்துக்கொள்வோமா அல்லது பட்டினி
கிடப்போமா?
தமிழ்நாட்டில்
தற்போது ஏற்பட்டுள்ள அரிசி விலை உயர்வு தற்காலிகமாகச் சந்தையில் ஏற்பட்டுள்ள மாறுபாடு
மட்டுமல்ல; அது நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்ட வேளாண் கொள்கையின் விளைவு.
நிர்வாகங்கள்
உடனடியாக வேளாண் உற்பத்தியைப் பெருக்கவும், நீர்ப்பாசனப் பரப்பளவை வலுப்படுத்தவும்,
விவசாயிகளின் வருமானத்தை உறுதி செய்யவும் திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறினால்,
அடுத்த சில ஆண்டுகளில் நாம் சோற்றுக்கு அலைவது உறுதி.
அப்போது
அரிசி விலை கிலோ 100 ரூபாய் ஆகும். மக்கள் முகநூலிலும் எக்ஸ் தளத்திலும் ஹேஷ்டேக் போட்டுப் போராடுவார்கள். நிர்வாகம்
நிவாரண உதவி அறிவிக்கும். ஆனால், தட்டில் சோறு இருக்காது!
விவசாயத்தைக்
காப்பாற்றுவது விவசாயிக்கான சலுகை அல்ல; அது நம்முடைய சொந்த வயிற்றுக்கான பாதுகாப்பு!
இதை உணர்ந்தால் சரி, இல்லையேல், வாழ்க ஜனநாயகம், வளர்க பட்டினி!
*****

No comments:
Post a Comment