20 Aug 2026

விழி வழி ஆக்ஸிடெண்டும் 108 ஆம்புலன்சும்

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 11

விழி வழி ஆக்ஸிடெண்டும் 108 ஆம்புலன்சும்

அது அந்தி மயங்கும் பொன்மாலைப் பொழுது.

அலுவலகத்தின் மூலையில் உட்கார்ந்திருந்தான் அவன்.

எதிரே அவள்.

அவள் அந்தச் செந்நிறப் பட்டில் தேவதை போலிருந்தாள்.

எதையும் பெரிதாகப் பொருட்படுத்தாத நவீன பெண் அவள்.

ஆனால், அவளது கண்கள். அது வேறு கதை.

அவன் தன் மடிக்கணினியை மூடிவிட்டு அவளைப் பார்த்தான். அவள் தேநீரை உறிஞ்சியபடியே அவனை ஒரு கணம் ஏறெடுத்துப் பார்த்தாள்.

அந்த முதல் பார்வையில் ஒரு கூர்மை இருந்தது. ஓர் அலட்சியம், ஒரு சின்ன ஏளனம், நெஞ்சைக் குத்தும் லேசான நிராகரிப்பு. அவனுக்குள் ஏதோ ஒன்று சரக்கென்று தைத்தது. இதயத்துடிப்பு சட்டென எகிறியது. அது பார்வையா அல்லது நெஞ்சில் இறங்கிய நஞ்சா என்று தெரியாத அளவுக்கு அவனுக்குள் ஒரு சுகமான வலி படர்ந்தது.

"அடப்பாவமே, இவளிடம் மாட்டிக்கொண்டு நாம் படப்போகும் பாடு பெரியது போலிருக்கே!" என்று அவனுக்குள் ஒரு லேசான பயமும், வழிப்பும் உருவானது. அது ஒரு நோய் மாதிரி அவனைத் தொற்றிக்கொண்டது.

அவன் முகத்தைச் சுளித்து, பார்வையைத் திருப்ப முயன்றான்.

அடுத்த நொடி, அவள் தன் பார்வையின் கோணத்தை லேசாக மாற்றினாள். இமைக்கடையில் ஒரு குறும்பு மின்னியது. அவளது உதட்டின் ஓரத்தில் மெல்லிய புன்னகை அரும்ப, அதே கண்கள் இப்போது அவனை ஒரு வசியப்பார்வை பார்த்தன. "பயப்படாதே, நான் உன்னவள்தான்" என்று சத்தமில்லாமல் சொன்னது அந்த இரண்டாவது பார்வை.

முந்தைய நொடியில் நெஞ்சில் ஏறிய அதே வலி, இந்த நொடியில் அப்படியே பனி போல விலகி ஓடியது. உடம்பெல்லாம் ஒரு சுகமான சிலிர்ப்பு. வலி நிவாரணி போல இருந்தது இந்தப் பார்வை.

அவன் மனதுக்குள் சிரித்துக்கொண்டான். வள்ளுவன் அன்றைக்கே எழுதிவைத்துவிட்டுப் போன காதல் ப்ரோகிராம் இதுதான் போல!

ஒரே ஜோடி கண்கள் தான். ஆனால் அதற்குள் இரண்டு வெவ்வேறான லென்ஸ்கள்.

முதல் பார்வை என்பது மனதை உயிரோடு வதைக்கும் ஒரு நோய். இரண்டாவது பார்வை என்பது அந்த நோயை உடனடியாகக் குணப்படுத்தும் அருமருந்து.

"என்ன யோசனை?" என்றாள் அவள், தன் மொபைலை மேஜை மீது வைத்தபடி.

"ஒன்றுமில்லை. இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடி ஒருத்தர் உன் கண்களைப் பத்தி அப்படியே கோடிங் எழுதி வச்சிட்டுப் போயிருக்கார், அதைத்தான் நினைச்சேன்" என்றான் அவன், தேநீர் கோப்பையைக் கையில் எடுத்தபடியே!

"இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடி ஏதுடா கோடிங்? அப்போ நான் பிறக்கவே இல்ல. அப்போ எப்படிடா என் கண்ணைப் பத்தி கோடி எழுத முடியும்?" என்றாள் அவள்.

"இதுதான் அந்தக் கோடிங்.

"இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு

நோய்நோக்குஒன்று அந்நோய் மருந்து."   (குறள், 1091)

எப்படி இருக்கு?"

அவள் கன்னங்கள் நாணத்தால் சிவந்தன. கண்கள் அவனை அப்படியே விழுங்கி விடுவது போலச் சுருங்கின.

-  சூத்திரங்கள் தொடரும்!

*****

No comments:

Post a Comment