16 Aug 2026

அடங்காத யானையும் அடங்காத அழகும்!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 7

அடங்காத யானையும் அடங்காத அழகும்!

அந்தி சாயும் அந்தப் பொன்மாலைப் பொழுதில், பூங்காவின் அமைதியான ஒரு மரத்தடி பெஞ்சில் உட்கார்ந்திருந்தார்கள் அவனும் அவளும்.

செவ்வானத்தின் லேசான சிவப்பு வெளிச்சமும் மரங்களின் நிழலும் அவர்கள் மீது படிந்திருந்தது.

அவன் தன் கையிலிருந்த கடிகாரத்தில் பார்த்தான். நேரம் ஆறு பதினைந்து. பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை மெல்ல குறையத் தொடங்கியிருந்தது.

எதிரே உட்கார்ந்திருந்தவள் தன் சுண்டு விரலால் தரையில் விழுந்திருந்த ஒரு காய்ந்த இலையை நகர்த்திக் கொண்டிருந்தாள். பார்த்தவுடனே ஒரு கணம் மூச்சை அடைக்க வைக்கும் அழகு.

திடீரென்று வீசிய சில்லென்ற மாலைக் காற்று, அவளுடைய நெஞ்சோரச் சேலையைச் சற்றே அசைத்துப் பார்த்தது. அவ்வளவுதான்.

அவன் பார்வையைத் திருப்பாமல் அவளையே பார்த்தான்.

"என்ன அப்படிப் பார்க்கறீங்க? பார்வை நியூரான்கள் எல்லாம் என் மேலயே குவியுற மாதிரி இருக்குதே!" அவள் தன் கைகளைக் குறுக்கே கட்டியபடி அவனைக் கூர்மையாகப் பார்த்தாள்.

அவன் புன்னகைத்தான். "இல்லை. ஈராயிரம் வருஷத்துக்கு முன்னாடி வாழ்ந்த ஒரு விஞ்ஞானி பற்றி யோசிச்சேன்."

"இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு விஞ்ஞானியா? யார் அது?"

"திருவள்ளுவர்."

"அவர் எப்போ விஞ்ஞானியானார்? அவர் தமிழ்ப் புலவராயிற்றே!"

"தமிழ்ப் புலவர் மட்டுமா? மாபெரும் காதல் விஞ்ஞானி."

"காதல் விஞ்ஞானியின்னே வெச்சுப்போம். அப்படி என்னப்பா அவர் காதல்ல புதுசா கண்டுபிடிச்சிட்டார்? "

"அவர் மூன்றாம் பாலில் எழுதியிருக்கிற ஒவ்வொன்றும் காதல் அறிவியலுக்கான சூத்திரம் தெரியுமா?"

"ஒரு சூத்திரத்தைத்தான் சொல்லுங்களேன் கேட்போம்."

"மதம் பிடிச்ச, யாருக்கும் அடங்காத ஒரு பெரிய போர் யானை. அதுக்கு முகப்படாம் போடுவாங்களே. எதுக்குத் தெரியுமா?"

"அதோட வெறித்தனமான பார்வையை மறைக்கறதுக்காகவும், பார்க்கறவனுக்குப் பயம் வரக்கூடாதுங்கறதுக்காகவும்."

"அதே மாதிரிதான்...

"கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்

படாஅ முலைமேல் துகில்."          (குறள், 1087)

அப்படின்னு சூத்திரம் எழுதுறார் திருவள்ளுவர்."

அவள் புருவத்தை உயர்த்தினாள். கண்கள் சற்றே விரிந்தன.

அவள் சில வினாடிகள் அமைதியானாள்.

பூங்காவின் தூரத்து மின்விளக்குகள் ஒவ்வொன்றாக எரியத் தொடங்கின.

அவளுடைய உதட்டின் ஓரத்தில் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது.

"வள்ளுவரோட சூத்திரம் இருக்கட்டும். நீங்க என்ன நினைக்கிறீங்க?" என்று கண்களைச் சிமிட்டினாள்.

"நான் என்ன நினைக்கிறேன்னா, அந்த யானைக்கு முன்னாடி நிக்கறவனுக்குத் தைரியமும் வேணும், தப்பிச்சு ஓடாத மனசும் வேணும். ஏன்னா, மத யானையைவிட இந்த அழகுதான் அதிவேகமாத் தாக்கும்!"

அவள் கலுக்கென்று சிரித்தாள்.

அவளுடைய சிரிப்பொலி அந்த மாலை நேரத்துப் பூங்காவின் அமைதியைக் கலைத்து, அந்த அரைகுறை வெளிச்சத்தில் பிரகாசமாகப் பரவியது.

-          சூத்திரங்கள் தொடரும்!

*****

No comments:

Post a Comment