திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்
சூத்திரம் – 8
ஏகே – 47 வகை நெற்றி!
பனி உறைந்த எல்லை.
மைனஸ் பத்து டிகிரி.
உள்ளே அதைவிடக் குளிர்ந்த மனிதன்.
அமெரிக்க படையே வந்தாலும் அவனுக்கு
ஐஸ்கிரீம் சாப்பிடுவது போன்ற உணர்வுதான். அத்தனை கூல்.
அவனை ஒரு ராணுவ அதிகாரி என்று
சொல்வதைக் காட்டிலும், பெர்பெக்ட் கில்லிங் மெஷின் என்று சொல்வதுதான் பொருந்தும்.
பனிப்புயல், நள்ளிரவுத் தாக்குதல்,
எதிரிகளின் கூச்சல் என எதுவுமே அவனது இதயத் துடிப்பை நிமிடத்திற்கு எழுபத்திரண்டிலிருந்து
எழுபத்தி மூன்றாக உயர்த்தியதில்லை. எதிரில் ஆயிரம் பேர் வந்தாலும், ஒரு கப்பில் டீ
குடித்துக்கொண்டே அவர்களை ரத்த சட்டினிக்குத் தேங்காய் திருகுவதைப் போலத் திருகி விடுவான்.
சுருக்கமாகச் சொன்னால், அவனுக்குப்
பயம் என்பதைப் பற்றி ஒரு தத்துவார்த்தக் குழப்பம் கூட வந்ததில்லை.
அப்போது,
"கேப்டன், எல்லைக்கோட்டுல
மூவ்மென்ட். எதிரிங்க ரொம்பப் பேரு." வேகமாக உள்ளே வந்த லெப்டினன்ட்டின் குரலில்
ஒரு சிறிய பூகம்பம்.
அவன் பைனாகுலரை லேசாகத் திருப்பிப்
பார்த்தான். பிறகு தன் கைக்கடிகாரத்தை ஒரு வினாடி உற்றுப் பார்த்துவிட்டுச் சொன்னான்,
"அவனுங்க வர்ற கோணமும் சரியில்லை.
அவனுங்க பாடி லாங்குவேஜ், அதுவும் சரியில்லை. அஞ்சே நிமிஷம். வெறும் அஞ்சே அஞ்சு நிமிஷம்.
அப்புறம் அங்க ஆள் இருக்க மாட்டாங்க. அமைதி மட்டும்தான் இருக்கும்."
அவன் குரலில் இருந்த அந்த அசாதாரண
அலட்சியம், சுற்றியிருந்த வீரர்களுக்குத் எனர்ஜியைக் கொடுத்ததோ இல்லையோ, இவன் மனுஷனா
இல்லை எமனா என்ற அதிர்ச்சியைக் கொடுத்தது.
அப்போது நேரம் இரவு 11:50.
பதுங்கு குழியிலிருந்து வெளியேறும்
நொடி. முகாமின் சாட்டிலைட் வைபை நெட்வொர்க்கில் அவனது போன் லேசாக முணுமுணுத்தது.
வாட்ஸ்ஆப்.
அனுப்பியது சந்தேகத்திற்கு இடமின்றி
அவள்தான்.
அவன் போனைத் திறந்தான்.
ஒரு சுயபடம், அதாகப்பட்டது செல்பி.
வெளிர்நீலப் புடவை. நெற்றியில்
ஒரு குட்டிச் சூரியன் போலவோ அல்லது வட்ட நிலா போலவோ ஒரு பொட்டு. அதற்கு மேல் பெரிதாக
ஒன்றும் இல்லை. ஆனால், அந்த நெற்றியின் ஒளியும், அதிலிருந்த அந்த ஒற்றைப் புள்ளியும்
அவனது சகல ராணுவத் வீரத்தையும் ஒரு நொடியில் தொடர்பு எல்லைக்கு அப்பால் தள்ளியது.
கீழே அவள் தட்டியிருந்த வரிகள்,
"கேப்டன் பார்டரில் இருக்கும்
நேரம். கனவில் கூட என் முகம் வராது. வாட்ஸ்ஆப்பில் வந்திருக்கும் இந்த முகத்தைப் பார்க்கவும்
நினைக்கவும் ஒரு நொடி நேரமாவது இருக்குமோ என்னவோ?"
அவனது கைகள் லேசாக நடுங்கின.
இதுவரை எந்த எதிரியின் ஏவுகணையும்
செய்யாத ஒரு வேலையை, அந்த ஐந்து அங்குல திரை செய்துவிட்டது.
அவனுடைய சகல தாக்குதல் திட்டங்கள்,
தோளில் தொங்கிய நவீனத் துப்பாக்கியின் எடை, நெஞ்சில் இருந்த முரட்டுத்தனமான சித்தாந்தம்
எல்லாமே ஆல் அவுட்.
"கேப்டன்! எதிரிங்க ரொம்ப
பக்கத்துல வந்துட்டாங்க. ஆர்டர்?" லெப்டினன்ட் உத்தரவிற்காகப் பரபரத்தான்.
அவன் கண்களில் சற்று முன் இருந்த
அந்த ஆட்கொல்லி மனிதன் இப்போது தலைமறைவாகியிருந்தான்.
"கேப்டன்! என்னாச்சு? அத்தனை
எதிரிங்களோட முகங்களைப் பார்த்ததும் உங்க முகம் ஒரு மாதிரி இருக்கே? பயந்திட்டீங்களா?"
"பயமா? எனக்கா? பயம்தான்டா
என்னைப் பார்த்து பயப்படணும்!"
"இல்ல கேப்டன்! உங்க முகத்துல
நெஜமாவே ஒரு பயம் தெரியுது. உங்க கை நடுங்குது. கால்ல உதறல் தெரியுது. உங்கள நான் இப்படிப்
பார்த்ததில்ல."
"இந்தக் கேப்டனை ஆயிரம்
துப்பாக்கி, லட்சம் பீரங்கி, கோடி ஏவுகணை வந்தாலும் பயமுறுத்த முடியாதுடா. ஆனா, அவளோடு
அந்த முகம். அந்த நெற்றி. அதுல இருக்குற ஒரு பொட்டு. பொட்டுன்னு என்னைப் போட்டுத் தள்ளிடுச்சுடா."
"புரிஞ்சிடுச்சு கேப்டன்.
இந்த உலகத்துல உங்களை, எங்களுக்கு வரப் போற அண்ணியோட முகம்தான் பயமுறுத்த முடியும்,
வேறெந்த பன்னியோட முகமும் பயமுறுத்த முடியாது."
"லோட் பண்ணுங்கடா எல்லாத்தையும்.
ஒருத்தன் உசுரோடு திரும்பக் கூடாது."
அவன் மெதுவாகப் போனைப் பாக்கெட்டில்
வைத்துவிட்டு, ஒரு நீண்ட மூச்சை இழுத்து விட்டான். பிறகு, விரல்கள் நடுங்க அவளுக்குத்
திரும்ப மெசேஜ் தட்டினான்,
"எதிரிகளோட திட்டமிட்ட தாக்குதலைக்
கூட அடிச்சுத் துவம்சம் பண்ணிடுவேன். ஆனால், உன்னோட இந்த திட்டமிடாத் தாக்குதலில் துவம்சமாகி
விட்டேன். இனி வார் டைம்ல இப்படி உன் முகத்தை அனுப்பி போர் புரியாதே."
மெசேஜை அனுப்பிவிட்டுத் துப்பாக்கியைக்
கையில் ஏந்தினான், எதிரிகளை எதிர்கொள்ள மட்டும் அல்ல, அவனுடைய அவளது நெற்றிப் பொட்டு
மட்டுமல்லாது, இந்தத் தேசத்தின் ஒவ்வொரு பெண்ணின் நெற்றிப் பொட்டும் அமைதியையும் பேரொளியையும்
எதிர்கொள்ள.
கதை எப்படி இருக்கிறது?
இதே கதைதான் இன்றைக்கு இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பும் நடந்திருக்கிறது. திருவள்ளுவர் சான்றாதரத்தோடு எழுதி வைத்து
விட்டார்.
"ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு." (குறள், 1088)
- சூத்திரங்கள் தொடரும்!
*****

No comments:
Post a Comment