4 Apr 2026

இருபதாயிரம் டாலருக்கு ஒரு ரோபோ!

இருபதாயிரம் டாலருக்கு ஒரு ரோபோ!

இவ்வாண்டு நடந்த சீன புத்தாண்டு விழாவைப் பார்த்தீர்களா?

67 கோடி பேர் பார்த்த அந்த டிவியின் நிஜ ஹீரோக்கள் குழந்தைகளுடன் சேர்ந்து குங்ஃபூ செய்த ரோபோக்கள். குங்ஃபூவைச் சும்மா பிசிறு தட்டாமல் செய்கின்றன!

இப்போதைய ரோபோட்டிக் உலகில் இதுதான் ஹாட் நியூஸ்.

ஹாங்க்சோ நகரின் யூனிட்ரீ கம்பெனி செய்த மேஜிக் அது.

அமெரிக்காவும் ஐரோப்பாவும் இத்தனை காலம் கோலோச்சிய ரோபாட்டிக்ஸ் ஏரியாவில் சீனா இப்போது ஒரு பெரிய கட் அவுட் நட்டுவிட்டது. உலகச் சந்தையில் பாதிக்கும் மேல் சீன கம்பெனிகளான யூனிட்ரீயும் அஜிபாட்டும்தான் கையில் வைத்திருக்கின்றன.

கடந்த வருடம் மட்டும் 11,000 ஹியூமனாய்டு எனும் மனித உருவ ரோபோக்களை ஏற்றுமதி செய்திருக்கிறார்கள். 20,000 டாலர் இருந்தால் நீங்கள் கூட ஒன்றை ஆர்டர் செய்யலாம்!

இப்போதைக்கு இந்த ரோபோக்கள் தண்ணீரை ஊற்றுவது, மேஜையைத் துடைப்பது, அக்ரோபாட்டிக் சாகசங்கள் செய்வது என அசத்துகின்றன.

கேல்பாட் போன்ற நிறுவனங்கள் கடைகளில் விற்பனைப் பிரதிநிதிகளாகவும் இவற்றை இறக்கிவிட்டன.

அமெரிக்க ரோபோக்களை எடுத்துக் கொண்டால், டெஸ்லாவின் ஆப்டிமஸ் ரோபோ ஒரு வீட்டு வேலைக்காரன், குழந்தையைக் கவனிக்கும் நர்சு, பி.ஏ என சகலகலாவல்லவனாக வலம் வருகிறது.

என்றாலும், இப்போதைக்கு டெஸ்லா பேக்டரிகளில் பொருட்களைத் தூக்குவது போன்ற ஒரே மாதிரியான வேலைகளுக்குத்தான் இவை பயன்படுகின்றன. ஒரு ஆல்-இன்-ஆல் ரோபோ வர இன்னும் பல வருடம் ஆகும்.

ரோபோக்களுக்கு ஒரு சிக்கல் இருக்கிறது. ஒரு வாக்யூம் கிளீனர் அல்லது ரோபோ டாக்ஸிக்கு விதிகள் தெரியும். ஆனால், பாத்திரங்களை அடுக்கி வைப்பதோ அல்லது கதவு கைப்பிடியைத் திருப்புவதோ அவற்றுக்கு மகா கஷ்டம்.

மனிதர்கள் செய்யும் சாதாரண வேலைகளில் இவை இன்னும் 30 முதல் 50 சதவீதம்தான் தேறியிருக்கின்றன. இன்னும் தேற வேண்டியிருக்கிறது. நிஜ உலகம் கணிக்க முடியாதது. அங்கேதான் ரோபோக்கள் தடுமாறுகின்றன.

சாட் ஜிபிடி எப்படி இன்டர்நெட்டில் இருக்கும் கோடிக்கணக்கான வார்த்தைகளைப் படித்துப் பண்டிதரானதோ, அதேபோல் ரோபோக்களும் டேட்டாவை விழுங்கி அறிவாளியாகும் என்பதுதான் தியரி.

ஆனால் மொழிக்கு இருப்பது போல ரோபோக்களுக்குப் படிக்க இன்டர்நெட் கிடையாது. மனிதர்கள் மோஷன் கேப்சர் உடைகளை அணிந்து ஒரு குங்ஃபூ கிக்கை ஆயிரக்கணக்கான முறை செய்து காட்டித்தான் அவற்றுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்.

ஒரு ரோபோ பிளம்பர் அல்லது ரோபோ நர்சு வர இன்னும் காலம் இருக்கிறது.

ஹியூமனாய்டு ரோபோக்கள் இனிதான் வரப்போகின்றன, ஆனால் மற்ற ரோபோக்கள் இப்போதே கலக்குகின்றன.

உக்ரைன் ராணுவம் யூனிட்ரீயின் ரோபோ நாய்களைப் பயன்படுத்தி டிரோன்கள் போக முடியாத சுரங்கங்களை வேவு பார்க்கிறது.

கார் அசெம்பிளிங் முதல் அறுவை சிகிச்சை வரை ரோபோக்களின் கைகள் பல வருடங்களாக வேலை செய்கின்றன.

சீனாவின் மேட் இன் சைனா 2025 பாலிசிப்படி 2,95,000 ரோபோக்களைத் தொழிற்சாலைகளில் நிறுவியிருக்கிறார்கள்.

சீனாவிலுள்ள ஜீக்கர் கார் தொழிற்சாலையில் விளக்குகளை அணைத்துவிட்டு மனிதர்களே இல்லாமல் ரோபோக்களால் ஒரு நாளைக்கு 800 கார்களைத் தயாரிக்க முடியும்! ஒரு நிமிஷத்துக்கு ஒரு கார் அசெம்பிள் ஆகிறது.

உற்பத்தித் திறனில் சீனா நம்பர் ஒன் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், சீனாவிடம் இன்ஜினியரிங் பலம் இருக்கிறது, சப்ளை செயின் இருக்கிறது.

ஆனால், ரோபோக்களின் மூளையான கட்டிங் எட்ஜ் இன்டலிஜென்ஸ் ஏரியாவில் இன்னும் அமெரிக்காதான் லீடிங். ரோபோ கைகால்கள் சீனாவாக இருந்தாலும், அதன் புத்திசாலித்தனம் இன்னும் சிலிகான் வேலியிடம்தான் இருக்கிறது!

இன்று உங்கள் வீட்டு ரோபோ உங்களிடம் காபி கேட்க ஆரம்பித்தால், அதுதான் உண்மையான ரோபாட்டிக்ஸ் புரட்சி!

அது இருக்கட்டும். இப்போதைக்கு 20,000 டாலர் இருந்தால் சீனா ரோபோவை நீங்கள் டெஸ்ட் செய்து பார்க்கலாம்!

****

No comments:

Post a Comment