3 Apr 2026

மெமரி – ஒரு முள்ளும், மலரும்!

மெமரி – ஒரு முள்ளும், மலரும்!

மரணப் படுக்கையில் இருக்கும் மனிதனிடம் போய், உடல்நிலை எப்படி இருக்கிறது? என்று விசாரிப்பது ஆகச்சிறந்த மொக்கையான விஷயம்.

அதற்குப் பதில் அவரை ஒரு மென்டல் வெக்கேஷன் அழைத்துச் செல்லலாம்.

உங்களுக்குக் கிடைத்த முதல் பாராட்டு எது? எதற்காகப் பாராட்டினார்கள்? நீங்கள் பெற்ற முதல் பரிசு எது? அது உங்களுக்குப் பிடித்திருந்ததா? நீங்கள் சாப்பிட்டதிலேயே மிகச் சிறந்த சாப்பாடு எது? உங்கள் லைப் பார்ட்னரை முதன்முதலில் பார்த்த அந்தத் தருணம் ஞாபகம் இருக்கிறதா? இப்படிக் கேள்விகள் கேட்டு அவரை அவரது கடந்தக் காலத்திற்குள் டார்ச் அடித்து பார்க்க வைப்பதுதான் மெண்டல் வெக்கேஷன்.

கேள்விகளைக் கேட்டதும், மரணப் படுக்கையில் இருக்கும் அந்த நோயாளியின் கண்களில் ஒரு மின்னல் வெட்டும். வலி தற்காலிகமாக மறையும். ஞாபகம் என்பது ஒரு டைம் மெஷின். அது நம்மைத் துயரத்திலிருந்து தூக்கி, எங்கோ ஒரு அழகான இடத்திற்கு அழைத்துச் செல்கிறது.

ஒருமுறை இரண்டாயிரம் பேர் இருந்த ஒரு சபையில் ஒரு பரிசோதனை செய்தார்கள். “கண்களை மூடிக்கொள்ளுங்கள். மூச்சை ஆழமாக இழுங்கள். உங்களுக்குப் பிடித்தமான, இப்போது உயிரோடு இல்லாத ஒருவரை உங்கள் அறைக்குள் அழையுங்கள். அவர் சிரிப்பைப் பாருங்கள். அவர் முடியைத் தொடுங்கள். அவரோடு பேசுங்கள்”, என்று சொன்னார்கள்.

பாதி தியானத்திலேயே அந்த அறையில் விசும்பல் சத்தம் கேட்டது. முதிர்ந்த ஆண்கள், பெண்கள் என அனைவரும் அழுதுகொண்டிருந்தார்கள். நினைவுகள் நம்மை எங்கோ ஓர் உலகத்துக்கு அழைத்துச் செல்கிறது, அழச் செய்கிறது, சந்தோஷிக்கச் செய்கிறது, துக்கிக்கச் செய்கிறது. நிச்சயமாக ஏதோ ஒன்றைச் செய்கிறது.

மிருகங்களுக்கும் நமக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. சால்மன் மீன் முட்டையிட ஆற்றின் எதிர்த்திசையில் நீந்துகிறது. அணில் தான் ஒளித்து வைத்த விதையைத் தேடுகிறது. அதெல்லாம் வெறும் இன்ஸ்டிங்க்ட். ஆனால், இறந்தவர்களை மீண்டும் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறோமே, அந்த ஞாபகம்தான் நம்மை மனிதனாக வைத்திருக்கிறது.

இப்போது வயதான சிலருக்கு அல்சைமர் நோய் வந்து விடுகிறது. இது ஒரு கொடூரமான மறதி நோய். ஒரு மனிதனுக்கு இரண்டு முறை மரணம் என்றால் அது இந்த நோய்தான். அல்மைசர்களுக்கு முதலில் அவர்களுடைய நினைவுகள் அழிந்து போகும் போது ஒரு மரணம். பிறகு உடல் ரீதியாக நிகழும் ஒரிஜினல் மரணம்.

இது போன்ற நிலையில் அவருக்கு ஆத்மார்த்தமான ஒருவர் என்ன செய்ய முடியும்? அவருக்குத் தன்னைத் தெரியவில்லை, யாரையும் தெரியவில்லை என்பதே ஒருவருக்கு எவ்வளவு துயரம் தரும் ஒன்று. ஆனால், இவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க ஒரு வழியும் இருக்கிறது. அது ஞாபகம். அல்சைமர்கள் மறந்து விடுகிறார்கள் என்றாலும், எல்லாவற்றையும் அல்ல, ஒரு சில அவர்களோடு ஒட்டியிருக்கின்றன. அதன் மூலம் ஓர் உயிர்ப்பித்தல் சாத்தியமாகிறது.

 ஒரு துண்டு மாம்பழம். மாம்பழம் எப்படி அவர்களை உயிர்ப்பிக்கும் என்றால், அது அவர்கள் மிக மிக விரும்பிச் சாப்பிடக் கூடியதாக இருக்கும். அதைக் கொண்டு சென்றாலே போதும், அவர்கள் தங்கள் ஞாபக உலகத்தோடு ஒரு தொடர்பைக் கொண்டு வருவார்கள்.

இளையராஜாவின் இசை. அது எப்படி உயிர்ப்பிக்கும் என்றால், அதுவும் அப்படித்தான் அவர்கள் அது மிக மிக நேசித்த, அதற்காகத் தங்களையே கொடுக்கக் கூடிய ஆத்மார்த்தமாக இருக்கும். அதைக் கேட்கும் போது அவர்கள் தங்கள் பழைய உலகில் உலவ ஆரம்பித்து விடுவார்கள். மெல்ல மெல்ல நினைவுகள் பூக்கத் தொடங்கும்.

 ஒரு மொக்கையான ஜோக் கூட சமயங்களில் உயிர்ப்பிக்கும். காரணம் அவர்கள் சிரிப்புக்கு ஏங்கியவர்களாக இருந்திருப்பார்கள். அவர்களை நினைவுகளில் மீட்க முடியும் என்றால் அது மொக்கையாக இருந்தால் என்ன, எப்படி இருந்தால் என்ன?

ஆரஞ்சுப் பழத்தை ஒரு நீண்ட சுருளாக உரித்து, ஒவ்வொன்றாகப் பகிர்ந்தளிப்பாரே அந்த மனிதர். அந்தச் சம்பவம் கூட அவர்களை உயிர்ப்பிக்கும். அவர் இப்போதும் அந்த நினைவுகளில் உயிரோடு இருக்கிறார். இப்படி அல்மைசர்களின் நினைவுகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் விசயங்களைக் கொண்டு அவர்களை இயன்ற வரை உயிர்ப்பிக்க முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அல்சைமர்களைப் பொருத்த வரை மறதி ஒரு வரம் இல்லை, சாபம்!

ஆனால் நினைவுகளும் எப்போதும் இனிமையானவை அல்ல. நம் ஆழ்மனதின் அடித்தட்டில் சில கசப்பான நினைவுகள் துடைப்பக் கட்டையோடு காத்துக் கொண்டிருக்கின்றன என்பது உண்மைதான்.

வாழ்க்கையின் ஆகப்பெரிய சாபம் என்னவென்றால், ஒருவரைப் பற்றிய நினைவை அவருக்கு அணுக்கமானவரே மறந்து விடுவதுதான். அது போன்ற சூழ்நிலைகளில் வாழ்க்கையின் அர்த்தமே அது முடிந்து போகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

இன்னும் சில தலைமுறைகள் கழித்து, இந்தப் பூமியில் ஒவ்வொருவரையும் பற்றி நினைக்க ஒரு ஜீவன் கூட இருக்காது. அன்றுதான் ஒரு மனிதன் உண்மையாகவே மரணமடைகிறான். அதுவரை இந்த அவசரமான, அழுத்தமான உலகில் உங்களைத் தாங்கிப் பிடிப்பது இந்த ஞாபகம் மட்டும்தான்.

அது ஒரு பரிசு. அதே சமயம் ஒரு சுமை. அது ஒரு ஆசீர்வாதம். அதே சமயம் ஒரு சாபம். நினைவை இப்படி எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.

இப்போது உங்கள் கண்களை மூடுங்கள். உங்கள் நினைவுகளை உலவ விடுங்கள். உங்கள் டைம் மெஷின் இன்று உங்களை எங்கே அழைத்துச் செல்கிறது என்று பாருங்கள். உங்களுக்குள் இத்தனை நினைவுகளா என்று நீங்களே மயக்கம் போட்டு விடுவீர்கள். அவ்வளவு நினைவுகளைச் சேமித்து வைத்திருக்கிறது இந்த மூளை. அதை அல்சைமரிடம் பறிகொடுப்பது கொடுமைதானே!

*****

No comments:

Post a Comment