4 Apr 2026

அன்புள்ள அத்தானே, அடகு வைத்த சித்தானே!

அன்புள்ள அத்தானே, அடகு வைத்த சித்தானே!

மனிதன் ஒரு சமூக விலங்கு. அதிலும் குறிப்பாக, அடுத்தவன் நகையை வைத்துத் தன் கடனை அடைக்கத் துடிக்கும் ஒரு விசித்திரமான விலங்கு.

சம்பவம் மிக எளிது.

ஒரு நெருங்கிய உறவினர் வருகிறார், முகத்தில் அவசரம் என்கிற ஒப்பனையைப் பூசிக்கொண்டு.

மூணே மாசம். வட்டியோட தந்துடுறேன், என்று ஒரு பிட்டைக் கிளப்புகிறார்.

நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

உங்கள் மனைவியின் நகையை (பாவம் அந்தப் பெண்!) அடகு வைத்து அவருக்குப் பணம் தருகிறீர்கள்.

இங்கே நீங்கள் செய்த பிழைகள் இரண்டு.

ஒன்று, மனைவியின் நகையைத் தொட்டது. இது தற்கொலைக்குச் சமம்.

மற்றொன்று, உறவினர் சொல்லை நம்பியது. இது அதைவிடக் கொடுமை.

சரி அடுத்தடுத்த சம்பவத்துக்கு வருவோம்.

மூன்று மாதம் முடிகிறது.

அந்த உறவினர் என்ன செய்ய வேண்டும்? நகையை மீட்டுக் கொடுக்க வேண்டுமே!

அவர் செய்வாரா? செய்ய மாட்டார்.

நீங்கள் என்ன செய்வீர்கள்?

அவருக்குப் போன் போடுவீர்கள்.

போன் போட்டால் அவர் என்ன செய்வார்? அவர் போன் எடுக்கும் பழக்கத்தையே விட்டிருப்பார்.

வாட் நெக்ஸ்ட்?

பாமா விஜயம் போல அவர் வீட்டுக்கு விஜயம் செய்வீர்கள்.

வீட்டுக்குச் சென்றால், என்னைத் தொந்தரவு செய்யாதே, என்று அவர் எகிறுவார்.

கடன் கொடுத்தவன் வாசலில் பிச்சைக்காரனைப் போல நிற்க, வாங்கியவன் ஏதோ உலக வங்கித் தலைவர் ரேஞ்சுக்குப் பந்தா காட்டுவான்.

என்ன ஒரு கிளைமாக்ஸ்! ஆனால், இதுதான் உலக நியதி.

கடைசியில் நகை ஏலத்துக்குப் போகும் நிலைக்கு வரும்.

பாவம் நீங்கள் என்ன செய்வீர்கள்?

நீங்கள் எங்கோ முட்டி மோதிப் பணத்தைப் புரட்டி நகையை மீட்டிருப்பீர்கள்.

இப்போது அவரோடு பேச்சுவார்த்தை இருக்காது.

முடிந்தது சோலி. உறவு காலி.

இப்போது உங்களுக்குச் சில நீதிகள் சொல்லப்பட வேண்டியிருக்கிறது. அவையாவன,

ஒருவனிடம் இருக்கும் உறவைத் துண்டிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், அவனுக்குக் கடன் கொடுங்கள். மிக விரைவாக அந்த இலக்கை அடையலாம்.

ஆரம்பத்திலேயே முடியாது என்று சொல்லியிருந்தால், அவர் உங்களை கஞ்சன் என்று திட்டியிருப்பார். இப்போது ஏமாளி என்று நினைத்துச் சிரிக்கிறார். கஞ்சனாக இருப்பது ஏமாளியாக இருப்பதை விட எவ்வளவோ கௌரவமானது.

உங்கள் சக்திக்கு மீறி கடன் வாங்கிப் பிறருக்குக் கொடுப்பது என்பது, அடுத்தவன் குளிர்காய உங்கள் வீட்டின் கூரையைப் பிடுங்கிக் கொடுப்பதற்குச் சமம்.

இது போன்ற உறவினர்களுக்குப் பணம் தேவைப்படும்போது, இல்லை என்று சொல்லிவிட்டு ஒரு காபி வாங்கிக் கொடுத்து அனுப்பிவிடுங்கள். உறவு வேண்டுமானால் கொஞ்சம் கசக்கும், ஆனால் உங்கள் மனைவியின் கழுத்தில் நகை ஜொலிக்கும்.

பணம் போனால் வரும். ஆனால், போன பணம் வராமல் போனால், அதுதான் அது போன்ற உறவினர்!

இந்த அனுபவம் உங்களுக்கு அப்படியே செட் ஆகியிருந்தால், கீழே கமென்ட் பாக்ஸ் இருக்கிறது, அதில் சொல்லுங்கள். நான்கு பேருக்கு உங்களால் ஞானஸ்நானம் கிடைக்கட்டும்.

*****

No comments:

Post a Comment