மெமரி டயட் – மூளைக்கு ஒரு ஜிம்!
நமக்கு
இருக்கும் ஆகப்பெரிய பயங்களில் ஒன்று வயதான காலத்தில் நம் நினைவுகளை அல்சைமர் போன்ற
நோய்களிடம் பறிகொடுத்துவிடுவோமோ என்பதுதான். ஆனால், கவலைப்படத் தேவையில்லை. நம் மூளை
ஒரு விசித்திரமான தசை. அதைச் சரியாகப் பயிற்றுவித்தால், 70 வயதிலும் அது 20 வயது போலச்
செயல்படும்.
நீங்கள்
ஒன்றை இன்று புதிதாகக் கற்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அடுத்த 24 மணி நேரத்திற்குள்
அதைத் திரும்ப நினைவுபடுத்திப் பார்க்காவிட்டால், அதில் பெரும்பகுதி காற்றில் கரைந்துவிடும்.
இதைத்தான் விஞ்ஞானிகள் மறதி வளைவு என்கிறார்கள்.
முதல்
24 மணி நேரம் மிகவும் முக்கியம். அதன் பிறகுதான் நினைவுகள் மெல்ல மெல்ல விடைபெறுகின்றன.
30 வயதில் நம்மால் 83% முகங்களைச் சரியாக அடையாளம் காண முடியும். ஆனால் 70 வயதில் அது
75% ஆகக் குறைகிறது. இந்தச் சரிவைத் தடுக்க சில வழிகள் உண்டு.
அதற்கு
மூளைக்கு என்ன சாப்பாடு கொடுக்கிறோம் என்பது முக்கியம்.
வைட்டமின்
E மற்றும் போலேட் சத்துகள் மூளைக்கு முக்கியம். கீரை வகைகள், பிரக்கோலி, முட்டைக்கோஸ்
ஆகியவற்றில் இவை அதிகம்.
ஏன்
போலேட் மூளைக்கு அதிகம் தேவை என்றால், இது ரத்தத்தில் இருக்கும் ஹோமோசிஸ்டைன் என்ற
அமினோ அமிலத்தின் அளவைக் குறைக்கிறது. இந்த அமிலம் அதிகமானால் இதய நோய் வரும். அத்துடன்
மூளை நரம்பு செல்கள் தற்கொலை செய்துகொள்ளும்.
மூளையின்
நிறைவாற்றல் தொடர்பான ஆய்வு ஒன்றில், சிலரிடம் ஒரு பொருளின் பெயரை எழுதச் சொன்னார்கள்,
சிலரை அந்தப் பொருளை வரையச் சொன்னார்கள். முடிவில் பார்த்தால், வரைந்தவர்களுக்குத்தான்
அந்தப் பொருட்கள் மிகத் துல்லியமாக நினைவிருந்தது.
இதற்குப்
பின்பும் ஓர் அறிவியல் காரணம் இருக்கிறது. அது என்னவென்றால், நீங்கள் எழுதும்போது மூளையின்
ஒரு பகுதிதான் வேலை செய்கிறது. ஆனால் வரையும்போது, அந்தப் பொருளின் வடிவம், அதன் தன்மை
எனப் பல விஷயங்களை மூளை ஒன்றாகச் சேர்த்து கோடிங் செய்கிறது. அதனால் வரைந்து படிப்பது
அதிக பலன் தரும். தமிழகப் பள்ளிகளில் உயர் தொடக்க நிலை மற்றும் உயர்நிலைப் படிப்புகளில்
மன வரைபடம் மூலம் பாடத்தைக் கற்பிக்க மற்றும் கற்கச் சொல்வதன் பின்னணி இதுதான்.
மற்றுமொரு
மூளைக்கு நல்ல பயிற்சி என்னவென்றால், ஒரு காலக்கெடு கொடுத்து பழைய தகவல்களைத் தோண்டி
எடுக்கச் சொல்வது. உதாரணத்துக்கு மூன்று நிமிடத்திற்குள் இந்தியாவின் முப்பத்தெட்டு
மாநிலங்களின் பெயர்களையும் கடகடவென்று சொல்வது. இது போன்ற பயிற்சிகள் மூளை நரம்புகளுக்கு
ஒரு நல்ல ஸ்ட்ரெச்சிங் எக்சர்சைஸ் போன்றது.
மேலும்,
நினைவாற்றலை வளர்க்க இன்னும் சில சின்னச் சின்ன டிப்ஸ்கள் சொல்லப்படுகின்றன. சூயிங்கம்
மெல்லுவது கவனத்தை அதிகப்படுத்துவதாக ஆய்வுகள் சொல்கின்றன.
நீங்கள்
ஞாபகம் வைக்க வேண்டிய விஷயத்தோடு ஒரு வேடிக்கையான கற்பனைப் படத்தை இணைத்துக் கொள்வதும்
நினைவாற்றலுக்கு உதவும். உதாரணத்துக்குத் தக்காளி என்று ஞாபகத்தில் வைக்க வேண்டுமானால்,
ஒரு தக்காளி ஹெல்மெட் போட்டுக்கொண்டு பைக் ஓட்டுவது போலக் கற்பனை செய்யுங்கள். அது
மறக்கவே மறக்காது!
அப்புறம்
ஒரு சின்ன ரிக்வெஸ்ட். இவ்வளவையும் படித்து விட்டு, இதை ஒரு நான்கு பேருக்காவது ஷேர்
செய்ய மறந்து விடாதீர்கள். அது ஒரு நான்கு பேருக்காவது நினைவாற்றலை வளர்க்க உதவும்
அல்லவா!
*****

No comments:
Post a Comment