1 Apr 2026

கத்தியின்றி ரத்தமின்றி மூளைக்குள் ஒரு டூயட்!

கத்தியின்றி ரத்தமின்றி மூளைக்குள் ஒரு டூயட்!

நம் மண்டையோட்டுக்குள்ளே இருக்கும் மூளை ஒரு மகா சமுத்திரம். அதன் மேலடுக்கை வருடிக் கொடுப்பது எளிது. ஆனால், மிக ஆழத்தில் இருக்கும் ஹிப்போகாம்பஸ் போன்ற இடங்களைத் தொட வேண்டுமானால், இதுவரை ஒரே வழிதான் இருந்தது. அது மண்டையைத் திறந்து, ஒயர்களை உள்ளே விட்டு ஒரு அறுவை சிகிச்சை செய்வது.

இப்போது இதற்கு ஒரு ஷார்ட்கட் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அதற்குப் பெயர் இன்டர்ஃபியரன்ஸ். அதன்படி இரண்டு வெவ்வேறு அலைவரிசை கொண்ட மின்சாரத்தை மூளைக்குள் வெவ்வேறு கோணங்களில் பாய்ச்சுகிறார்கள். அவை இரண்டும் மூளையின் ஒரு குறிப்பிட்ட ஆழமான புள்ளியில் சந்திக்கும்போது, அங்கே ஒரு புதிய குறைந்த அதிர்வு உருவாகிறது. இதைத்தான் டெம்போரல் இன்டர்பெரன்ஸ் என்கிறார்கள்.

எளிமையாகச் சொன்னால், இரண்டு ரயில்கள் வெவ்வேறு வேகத்தில் வரும்போது, அவை சந்திக்கும் இடத்தில் உண்டாகும் அதிர்வு போன்றது இது. இந்த அதிர்வு மூளை நரம்புகளைத் தட்டி எழுப்புகிறது அல்லது அடக்கி வைக்கிறது.

ஏன் இது முக்கியம் என்றால், மண்டையைத் துளைக்க வேண்டிய அவசியமில்லை. அதனால் லாபம் அதிகம். இதனால் அல்சைமர் எனும் மறதி நோய்க்கு சிகிச்சை, எபிலெப்ஸி எனும் காக்காய் வலிப்பு நோய்க்கு சிகிச்சை, ஸ்ட்ரோக் வந்தவர்களுக்கு மறுவாழ்வு என இதன் லாபப் பட்டியல் நீள்கிறது. அத்துடன் இதற்கான உபகரணங்கள் விலை குறைவு. ஒரு சாதாரண எலக்ட்ரோட் தொப்பியைப் போட்டுக்கொண்டே சிகிச்சையைத் தொடரலாம்.

காக்காய் வலிப்பு இருப்பவர்களுக்கு இந்த முறையில் ஹிப்போகாம்பஸைத் தட்டிவிட்டு, அவர்களின் தூக்கத்தை சீராக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள்.

வயதானவர்களின் மூளையைத் தூண்டி அவர்களை விரல்களால் வேகமாகத் தட்ட வைத்திருக்கிறார்கள். இது பக்கவாதம் வந்தவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

ஆனால், வெளியே கத்தி வைக்கவில்லை என்பதால் இதை பின்விளைவு இல்லாதது என்றெல்லாம் சொல்ல முடியாது. மூளைக்கு உள்ளே ஏதோ மாற்றம் நடக்கிறது அல்லவா! இது தொடர்பான ஆய்வுகள் இன்னும் ஆரம்பக் கட்டத்தில்தான் இருக்கின்றன. ஒரு லேபில் நடப்பது இன்னொரு லேபில் ரிசல்ட் தருவதில்லை. இருந்தாலும், இது ஒரு ஓப்பன் சோர்ஸ் தெரபியாக மாற வாய்ப்பிருக்கிறது.

அதன்படி சீக்கிரம் ஒரு தொப்பி ரெடியாகும். அதை மாட்டிக்கொண்டு தூங்கினால், மறுநாள் காலையில் அல்சைமர் காணாமல் போய், ஞாபக சக்தி சூப்பர் மேனாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆக அறிவியல் வளர்கிறது. நாம்தான் இன்னும் பழைய ஞாபகங்களோடு இருக்கிறோம் இல்லையா!

*****

No comments:

Post a Comment