31 Jan 2017

வீட்டில் பத்து


வருத்தம்
தனது பிள்ளைகள் கார்டூன் சேனல்களிலே மூழ்கிக் கிடப்பதாக வருத்தப்பட்டுக் கொண்டாள் வாட்ஸ் அப்பில் மூழ்கிக் கிடந்த வசந்தா.
*****
லைக்
அட்டிகையுடன் இருக்கும் போட்டோவைப் போட்டிருந்த அம்சாவிற்கு பேஸ்புக்கில் லைக் போட்டிருந்தான் செயின் திருடன் சேகர்.
*****
வீட்டில் பத்து
வீட்டில் பத்து இட்டிலிகள் சாப்பிடும் கோபால், ஹோட்டலில் விலைப்பட்டியலைப் பார்த்ததும் நான்கு இட்டிலிகளோடு நிறுத்திக் கொண்டான்.
*****

30 Jan 2017

யாசக மெளனம்


நொடி
"த்ப்பூ" என
துப்பினாய்
வண்ணத்துப் பூச்சி பறந்தது!
"அச்" என
தும்மினாய்
மலர் மலர்ந்து விழுந்தது!
*****

யாசக மெளனம்
பிச்சைக்காரனிடம் போட
பலரிடமும் இருக்கிறது
யாசக மெளனம்!
*****

நினைத்துக் கொண்டிருப்பதாக
பேசப் போகும்
வார்த்தைக்காக
நெடுநேரம் காத்திருந்தேன்
மெளனமாக இருப்பதாக
நினைத்துக் கொண்டிருந்த வேளையில்
அப்படியே நினைத்துக் கொள்வதாகுக
என
கிளம்பி விட்டான்
அந்த ஊமை!
*****

கையேந்தி பவன் டூ பைவ் ஸ்டார் ஹோட்டல்


கையேந்தி பவன் டூ பைவ் ஸ்டார் ஹோட்டல்
கையேந்தி பவனில் காலை உணவை முடித்துக் கொண்டு பைவ் ஸ்டார் ஓட்டலுக்குச் சென்று கொண்டிருந்தான் அங்கு பணியாற்றும் குமரன்.
*****
குறையொன்றுமில்லை
பாம்பைப் பார்த்த பரமன், தனக்கு ரெண்டு காலும் இல்லை என்ற குறையை மறந்தான்.
*****
மாட்டிகிட்டான் கபாலி
கான்ஸ்டபிள் கனகாவைக் காதலிக்கப் போய் மாட்டிக் கொண்டான், நான்கு வருடங்களாய்ப் போலீசுக்கு டிமிக்கிக் கொடுத்துக் கொண்டிருந்த கபாலி.
*****

போராடப் போராடப் பெரிதாகும் போராட்டம்


போராடப் போராடப் பெரிதாகும் போராட்டம்
            உண்மை எதுவோ அதைப் பேசுங்கள். கேளுங்கள். மனதின் மரியாதை அதற்கு அதிகமாக இருக்கும்.
            அனுபவரீதியான விளக்கங்களை அலட்சியப்படுத்தாதீர்கள். கேளுங்கள். அதை அப்படியே ஏற்றுக் கொண்டு விடாதீர்கள். அதன் பின்புலங்களை ஆராயுங்கள். எப்படி இப்படி ஒரு எண்ணம் ஏற்பட்டது என்பதை அதன் அத்தனை பின்னணியோடும் அலசிப் பாருங்கள்.
            அதைத்தான் மனம் எதிர்பார்க்கிறது.
            உண்மையில் மனதின் சிக்கல்கள் அதிகரித்து விட்டன. அதில் சிக்கிக் கொண்டு மனிதர்கள் போராட ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் தங்களுக்குள் போராடுவதைப் பெருமையாகவும் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். பேசவும் ஆரம்பித்து விட்டார்கள். அதன் மூலம் சிக்கல்களைப் போக்கி விடலாம் என்று நினைக்கிறார்கள்.
            போராடப் போராடப் பெரிதாகும் சிக்கல் மனச்சிக்கல் என்பது போகப் போகத்தான் தெரியும்.
            அதற்கான மருந்து எளிமையானது. இயல்பானது. நேர்மையானது.
            வேடிக்கையாக இருந்தாலும் அதற்கான மருந்து என்பது எளிமையோடு இருப்பது, இயல்போடிருப்பது, நேர்மையாக இருப்பது என்பதுதான்.
*****

பத்திரமாய் இருக்கும் சாவி


பத்திரமாய் இருக்கும் சாவி
ஒரு கோப்பை மதுவில்
உன் நினைவுகளைப்
புதைத்து வைத்திருக்கிறேன்!
கோப்பைத் திறக்கும்
சாவியைப் பூட்டிய பின்
உன்னிடமே
ஒரு பொழுதில்
தூக்கி எறிந்து விட்டேன்!
எந்தப் பூட்டின் சாவி
என்று தெரியாமல்
நீயும்
அதைப் பத்திரமாய் வைத்திருக்கிறாய்,
எந்தப் பூட்டையும்
திறந்து பார்க்கும்
முயற்சியைச் செய்யாமலே!
*****
ஒரு முத்தம்
காற்று நிற்கும் பொழுதில்
சூரியச் சுடர் அணையும் பொழுதில்
சுற்றும் பூமி
சுழற்சி மறக்கும் பொழுதில்
ஒரு முத்தம் தா!
காற்றாய் வீசுவேன்
உனக்கு மட்டும்
சூரியச்சுடராய் ஒளிர்வேன்
உன் கண்களுக்கு மட்டும்
பூமியாய்ச் சுற்றுவேன்
உன்னை மட்டும்
நான்!
*****

ஞாபகம்


முடிவு
நவீன் பிரேக் அப்பிற்குத் தயாராகிறான் என்பதை அறிந்த சுமி, அபார்ஷன் செய்யும் முடிவை தள்ளி வைத்தாள்.
*****
ஞாபகம்
வண்டி மோதும் போது, ஞாபகம் வந்தது ஹெல்மெட்டைப் போடாமல் வந்தது.
*****
முடிவு
"இனிமேல் தவறு செய்வதில்லை!" என்று முடிவு செய்து கொண்டான் ஜெயிலில் இருந்து தப்பித்த ஆயுள் தண்டனைக் கைதி பைரவன்.
*****

வெளிச்சத்தின் நிறம்


அனுபவம்
கடந்த முறை நடந்த
கசப்பான அனுபவத்தை
மறந்து
இம்முறையும் செய்கிறான்!
புது அனுபவம்
கசப்பாகும் போது
அது பழைய அனுபவமாகி விடுகிறது!
நேரப் போகும்
புது அனுபவம்
கசப்பாகவோ, இனிப்பாகவோ
எதுவெனத் தெரியாத
எதிர்பாராததாக இருக்கிறது!
எத்தனை முறை
நேர்ந்தாலும்
எதிர்பார்ப்போடு செல்கையில்
கசப்பதில்லை அனுபவங்கள்!
*****

வெளிச்சத்தின் நிறம்
நீ காணும் கருப்பு
"இருட்டு!"
என்றாய்!
"கருப்புதான்!"
என்றேன் நான்!
"எப்படி?" என்றாய்.
"அப்படியானால்
வெளிச்சத்தின் நிறம் சொல்!"
என்றேன் நான்.
ஓடி விட்டாய் நீ.
*****