8 Oct 2024

பகுதி நேரத் தொழிலாகி விட்ட விவசாயம்!

பகுதி நேரத் தொழிலாகி விட்ட விவசாயம்!

இப்போது திருவாரூர் மாவட்டமாகி விட்டாலும் இது ஒருங்கிணைந்த தஞ்சையின் ஒரு பகுதி. இங்கு விவசாயம்தான் முக்கியமான தொழில். விவசாயப் பெருங்குடி மக்களால் நிரம்பியிருந்த இப்பகுதி தற்போது நிறைய விவசாயிகளைக் கட்டிடத் தொழிலாளர்களாகவும், ஒப்பந்த தொழிலாளர்களாகவும், ஓசூர் மற்றும் திருப்பூர் என்று இடம் பெயரும் தொழிலாளர்களாகவும் மாற்றியிருக்கிறது.

கிராமங்கள் பலவும் வயதானவர்களால் நிரம்பியிருக்கின்றன. இளவயதில் இருப்போரின் எண்ணிக்கை மிகவும் குறைவு. பெரும்பாலான இளவயது மக்கள் நகரத்தை நோக்கி இடம் பெயர்ந்திருக்கின்றனர். கிராமங்களில் இருக்கும் இளவயது மக்களும் வேலைவாய்ப்பிற்காக நகரத்திற்குச் சென்று வருபவர்களாக இருக்கிறார்கள்.

விவசாயத்தை முழுநேரமாகச் செய்யும் தொழிலாளர்களை அநேகமாகத் திருவாரூர் மாவட்டம் இழந்து விட்டது. விவசாய நிலங்கள் வைத்திருக்கும் பலரும் வருமானத்திற்கு ஒரு தொழிலில் இருந்து கொண்டு, பகுதி நேரமாகத்தான் விவசாயத்தைச் செய்து வருகின்றனர். விவசாயத்தில் நிகழ்ந்து விட்ட எவ்வளவு பெரிய மாற்றம் இது. ஓர் எடுத்துக்காட்டைச் சொல்லலாம் என்றால் விவசாயத்தில் மிகவும் ஆர்வமாக இருந்த காமகோடி அண்ணன் திருவாரூரில் காவல்காரராக அதாவது வாட்ச்மேனாக இருக்கிறார். அத்துடன் தன்னிடம் இருக்கும் நிலங்களில் விவசாயத்தைப் பார்த்துக் கொள்கிறார். விவசாயப் பணிகள் தீவிரமாக இருக்கும் போது தேவைக்கேற்ப விடுப்பு எடுத்துக் கொள்கிறார்.

காமகோடி அண்ணன் விவசாயத்தை மட்டும் நம்பி இயங்கியவர். விவசாய வருமானத்தை மட்டும் வைத்துக் கொண்டு குடும்பம் நடத்தியவர். இனிமேல் அது இயலாது என்பதை உணர்ந்து நான்கைந்து ஆண்டுகளாக நகரத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் காவல்காரராகப் பணியாற்ற சென்று விட்டார்.

ஏன் அண்ணா இப்படி? என்றால், மாதம் எட்டாயிரம் சம்பளம் கொடுக்கிறான் தம்பி, குடும்பம் ஓடுகிறது. அத்தோடு விவசாய வருமானம் கிடைத்தால் எப்படியோ வாழ்க்கையை ஓட்டி விடலாம். அது மட்டும் காரணம் கிடையாது தம்பி! அங்கே கிடைக்கும் மாதம் எட்டாயிரம் வருமானம் நிரந்தரம், விவசாய வருமானம் நிரந்தரமில்லை என்கிறார். இனிமேலும் விவசாயத்தை மட்டும் நம்பி காலத்தை ஓட்ட முடியாது, இப்படி மாறினால்தான் விவசாயத்தையும் தொடர்ந்து செய்ய முடியும் என்கிறார்.

முழுநேரமாக விவசாயம் செய்த போது காமகோடி அண்ணன் எப்படி செய்திருப்பார்? தற்போது இது போல பகுதி நேரமாகக் செய்யும் போது எப்படி செய்து கொண்டிருப்பார்? நிச்சயம் வேறுபாடு இருக்கத்தானே செய்யும். அது குறித்தும் அண்ணனிடம் கேட்டேன், ஏதோ நடக்கிறது தம்பி! திருப்தி இல்லைதான். வேறு வழியில்லையே என்கிறார்.

விவசாயிகளை விவசாயத்தை விட்டு ஓட அடித்து விட்டோம் என்பதுதான் உண்மை. வேறு வேலையில் இருந்து கொண்டாவது விவசாயத்தில் தாக்குப் பிடிக்க வேண்டும் என்ற வைராக்கியம் உள்ளவர்களே காமகோடி அண்ணன் போலவாவது விவசாயத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். இதனோடு எதற்கு மல்லுகட்ட வேண்டும் என்று நினைத்த பலர் விவசாய நிலங்களை விற்று விட்டனர்.

முன்பு நகரப் பகுதிகளிலில் வீட்டுமனைகளாக மாறிக் கொண்டிருந்த விவசாய நிலங்கள், தற்போது கிராமப் புறங்களில் வீட்டு மனைகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. விவசாய நிலங்களை அலைபேசி கோபுரங்கள் அமைக்க, கிடங்குகள் அமைக்க குத்தகைக்கு விடுவோரும் இருக்கிறார்கள்.

மற்றொரு புறம் எளிய மக்கள், நடுத்தர மக்கள் என்று பலரிடம் இருந்த விவசாய நிலங்களைப் பெரும் வசதி படைத்த மனிதர்கள் கொத்து கொத்தாக வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த ஒன்றிய, மாவட்ட பொறுப்பாளர்கள் அநேகம். அவர்கள் பண்ணை முறையிலான விவசாய முறைகளைத் தொடர்கிறார்கள். மிக நவீனமாக அனைத்திற்கும் எந்திரங்களையும், ரசாயனங்களையும் கொண்டு அவர்கள் விவசாயம் செய்வதையும் பார்க்க முடிகிறது. அவர்கள் விவசாயம் செய்கிறார்கள் என்றாலும் அவர்களும் பகுதி நேர விவசாயிகள்தானே. ஆக பகுதி நேர விவசாயத்தை நோக்கி திருவாரூர் மாவட்டம் நகர்ந்து விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. இப்படி நிலங்களை வாங்கிப் போட்டு அவர்கள் ஏன் விவசாயம் செய்கிறார்கள் என்றால், அதன் பின்னுள்ள உண்மை வேறு மாதிரியானது. அவர்களுக்கு இப்போது வேலி கணக்கில், ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்வது என்பது அவர்களுக்கிடையேயான கௌரவமாக மாறியிருக்கிறது. ஒருங்கிணைந்த பண்ணையத்தை வைத்திருப்பது அவர்களது அடையாளமாக இருக்கிறது. மிகையான பணத்தை எதில் முதலீடு செய்வது என்பது புரியாமல் இப்படி ஒரு வழிவகையை அவர்கள் கண்டறிந்திருப்பதாகத் தெரிகிறது.

இவற்றையெல்லாம் நீங்கள் தெளிவான தரவுகளைக் கொண்டே முடிவு செய்யலாம். சில பத்தாண்டுகளில் விவசாய நிலங்கள் யாருக்கெல்லாம் கைமாறியிருக்கிறது என்கிற பத்திரப்பதிவு விவரங்களை ஆய்வு செய்தால் மேற்படி உண்மைகள் வெகு எளிதாகப் புலனாகும்.

*****

No comments:

Post a Comment

மட்டையான மட்டைப் பந்து!

மட்டையான மட்டைப் பந்து! நூற்று இருபது பந்துகள் விளையாடத் தெரிந்த அளவுக்கு ஐந்து நாள் போட்டி விளையாடத் தெரியாது அல்லது ஐந்து நாள் போட...