6 Oct 2026

மறைக்க முடியாத மையல்

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 58

மறைக்க முடியாத மையல்

ஐம்பது மாடிகள் கொண்ட மென்பொருள் நிறுவனம் அது.

அதன் நாற்பத்து ஐந்தாம் மாடியில் உள்ள கண்ணாடி அறை.

குளிர்சாதன இயந்திரம் சில்லென்று இயங்கிக்கொண்டிருந்தது.

"மேம்! அந்த கஸ்டமர் பிரசன்டேஷன் ஸ்லைட்ஸ் இன்னும் முடியலையா?"  புருவத்தை உயர்த்திப் பார்த்தான் அவன். அந்த மென்பொருள் நிறுவனத்தின் முதுநிலை செயல்திட்ட மேலாளர்.

"ஆ! வந்துட்டு இருக்கு சார். ஜஸ்ட் ஒன் செகண்ட்." மடிக்கணினியின் திரையை வெறித்தபடி பம்மி உட்கார்ந்திருந்தாள் அவள்.

அவளுக்குள் ஆயிரம் மின்கம்பிகள் ஒன்றையொன்று உரசிக்கொள்வது போல ஒரு பதட்டம்.

காரணம், அந்த பிரசன்டேஷன் பைல் கூடவே, மினிமைஸ் செய்து வைக்கப்பட்டிருந்த ஒரு வாட்ஸ்அப் வெப் விண்டோ. அதில் கடந்த இரண்டு மணி நேரமாக அவனுக்கும் அவளுக்கும் இடையே நடந்துகொண்டிருக்கும் டீப் சாட்டிங்.

அலுவலகத்தில் எல்லாரும் இவர்களைப் பார்த்தால், "அவள் ரொம்ப அமைதி. அவன் வேலையில் ரொம்ப கறாரானவன். இவர்களுக்குள் சரிப்பட்டு வராது" என்றுதான் நினைப்பார்கள்.

ஆனால், கடந்த ஒரு மாதமாக இவர்களின் அலுவலக எல்லைகளைத் தாண்டி, நள்ளிரவு தேநீர் நிலையங்களிலும், மதிய உணவு இடைவேளையின் ரகசிய மூலைகளிலும் காதல் எப்படித் துளிர்த்தது என்பது இவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்.

"ஏய் லூசு! நான் கேட்கிறதுக்கு நீ சரியா பதில் சொல்ல மாட்டேங்குற. நேத்து நான் அனுப்பின படம் பிடிச்சிருந்துச்சா?" அவன் மடிக்கணினியில் வாட்ஸ்அப் வெப்பில் தட்டச்சு செய்துவிட்டு, அவள் மேஜையை நோக்கி லேசாகக் குனிந்தான்.

நெஞ்சுத் துடிப்பு மளமளவென்று ஏறியது. அலுவலகத்தின் அத்தனை சக ஊழியர்களும் தங்களையே பார்ப்பது போலிருந்தது அவளுக்கு.

"சார்! ப்ளீஸ் ஆபீஸ்ல எல்லாரும் பாக்குறாங்க. அப்புறம் பேசிக்கலாம்." என்று முணுமுணுத்தாள் அவள்.

முகமெல்லாம் வியர்த்துக் கொட்டியது.

அவ்வளவு காதல், கூடவே அந்த நாணம். அடக்க முயன்றாலும் முகம் சிவந்து, உதடு துடித்து, கைகள் நடுங்கி அந்த ரகசியத்தை உலகத்திற்குப் பறைசாற்றிக் கொண்டிருந்தது.

அவன் மெலிதாகச் சிரித்தான். அவன் முகத்தில் இருந்த அந்த ராஜதந்திரப் புன்னகை சட்டென்று மறைந்து, அவனுக்குள்ளும் இப்போது ஒரு நாணம் வந்து ஒட்டிக் கொண்டது.

"சரி. காதல் அப்படிங்கிறது என்ன? நாம மறைக்க முயன்றால் மறைஞ்சிருமா என்ன? பாரு, உன் கைகள் எப்படி நடுங்குது." என்று நாணத்தை மறைக்க முடியாமல் மெலிதாகச் சிரித்தபடியே அவனும் முணுமுணுத்தான்.

அவன் முணுமுணுத்தது அச்சுப் பிசகாமல் அப்படியே பலித்தது, அடுத்த ஐந்து நிமிடங்களில்.

கூட்ட அரங்கிற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. நிறுவனத்தின் செயல்திட்ட பணியாளர்கள் வந்து அமர்ந்திருந்தனர்.

அவள் பதட்டத்தோடு படவீழ்த்தியை இயக்கி, அந்தக் கூட்ட அரங்கின், பெரிய திரையில் தன் மடிக்கணினியின் திரையை விழச் செய்தாள்.

டிங்!

அறிவிப்புச் சத்தம்.

கூட்டரங்கில் இருந்த பெரிய திரையில் அந்தப் பிரசன்டேஷனுக்குப் பதிலாக பிரம்மாண்டமான எழுத்துக்களில் அவர்கள் சாட் செய்து கொண்டிருந்த வாட்ஸ்அப் வெப் திறந்திருந்தது.

அதில் அந்த அறிவிப்பு தோன்றியது.

"அந்தப் படத்தைப் பார்த்த நொடியிலிருந்து என் இதயத் துடிப்பு  ரிக்டர் ஸ்கேல்ல சிதறிடுறாப்புல வெடிக்குது."

கூட்ட அரங்கில் சிரிப்பொலி எழுந்தது.

அவள் முகம் தக்காளிப் பழம் போல சிவந்துபோனது. சுதாரிப்பதற்குள் அடுத்த அடுத்த அறிவிப்பு அங்கே தோன்றியது. அது அவன் அவளுக்கு அனுப்பியது.

"எனக்கும் அப்படித்தான். இது இந்த ஊருக்குத் தெரிஞ்சா என்ன, தெரியாட்டி என்ன? உன்னை மிஸ் பண்றதுக்கு நான் ரெடியா இல்ல."

அறை முழுவதும் கேலிப் புன்னகைகளும் கிசுகிசுக்களும் வியாபித்தன. யாருமே பிரசண்டேஷனைக் கவனிக்கவில்லை. அவள் விரல்கள் நடுக்கத்துடன் மவுஸைத் தேடி தடுப்பதற்குள், காதலின் ரகசியம் ஊரறிய மன்றுபட்டு நின்றது.

மறைக்க நினைத்த ரகசியம், சரியான தருணத்தில் தன் எல்லையைத் தாண்டி ஊர் நடுவே வெளிப்பட்டுவிட்டது. முகம் சிவந்து அவள் அங்கிருந்து ஓடியபோது, பின்னாலேயே ஓடினான் அவன்.

காதலில் எப்போதும் அப்படித்தான் நடக்கும்.

"நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்

மறையிறந்து மன்று படும்."                       (குறள், 1138)

வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சொன்னது. மாற்றம் ஒன்று மட்டுமே மாறாத இந்தப் பூமியில் இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தும் இந்தச் சூத்திரமும் மாறவே இல்லை.

-          சூத்திரங்கள் தொடரும்!

*****

No comments:

Post a Comment