13 May 2026

ரீல்ஸும் காலப் பெருவழியின் துவாரங்களும்!

ரீல்ஸும் காலப் பெருவழியின் துவாரங்களும்!

சோஷியல் மீடியாவில் ஒரு நிமிடம் என்பது ஒரு மணி நேரமாக உருமாறும் வித்தைக்கு, காலம்தான் பொறுப்பேற்க வேண்டும், நாம் அல்ல. உண்மையில் காலம் என்பது ஒரு ரப்பரைப் போன்றது. நீங்கள் ரீல்ஸ் பார்க்கும்போது அது சுருங்குகிறது, ஒரு வேலையைச் செய்யத் துவங்ககினால் அது முடிவின்றி நீள்கிறது.

நமது மூளை ஒரு வினோதமான ஆவணக்காப்பாளர். நீங்கள் போனைத் தூர வைத்துவிட்டு, சரி, உருப்படியாக எதையாவது சிந்திப்போம், என்று கண்ணை மூடினால், அது பழைய கோப்புகளைத் தூசி தட்டி எடுக்கிறது.

வெயிலோடு உறவாடி கிரிக்கெட் விளையாடி எட்டு வருடங்கள் கருத்துப் போனதை, அடுத்தத் தெரு அனிதாவுக்காக ஆறு வருடங்கள் செக்குமாடு போலச் சுற்றித் திரிந்ததை, குரூப் 4 தேர்விற்காக நான்கு வருடத்தைப் புத்தகங்களில் புதைத்துக் கொண்டதை, கர்நாடக சங்கீதம் கற்றுக் கொள்கிறேன் என்று போய் இரண்டு வருடங்கள் கர்ப்ப காலத்தில் இருந்ததை எல்லாம் அப்படியே பவர் பாய்ண்டை விட அழகாக ஸ்லைடு போட்டுக் காட்டும்.

வெயிலோடு உறவாடிய அந்த இந்திய கிரிக்கெட் கனவுக்காலம் உங்களைக் கறுப்பாக்கியிருக்கலாம், ஆனால் வெயிலைத் தாங்கும் தோல் பதனிடுதலை அதுதான் செய்தது.

அடுத்தத் தெரு அனிதாவுக்காகச் சுழன்று சுற்றிய  ஆறு வருடங்கள் வீண் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அந்த ஆறு வருடங்களில் நீங்கள் பொறுமை எனும் பேராற்றலைக் கற்றுக் கொண்டது நிஜம்.

குரூப் 4 இன் நான்கு வருடங்களும், கர்நாடக சங்கீதத்தின் இரண்டு வருடங்களும் பயனற்றதல்ல. வாழ்க்கையின் நிலையாமையை நீங்கள் அப்போது உணரவில்லை என்றாலும், இப்போது ரீல்ஸ் பார்க்கும்போது ஏற்படும் அதே அர்த்தமற்ற உணர்வை அப்போதே முன்கூட்டியே பயிற்சி செய்திருக்கிறீர்கள்.

இதனால் சொல்ல வருவது என்னவென்றால், குற்ற உணர்வு என்பது ஒரு போதை மருந்து. வீணடித்த காலத்தை நினைத்து வருத்தப்படுவது என்பது, அடுத்த சில மணிநேரங்களை வீணடிப்பதற்கான ஒரு முன் அனுமதிச் சீட்டு.

வாழ்க்கையையே வீணடித்துவிட்டோம் என்ற மிகப்பெரிய துக்கம் வரும்போது, அதைத் தாங்கிக் கொள்ள ஒரு சிறிய துக்கம் தேவைப்படுகிறது. அந்தச் சிறிய துக்கத்தை ஸ்க்ரோல் செய்வதன் மூலம் நாம் அடைகிறோம்.

முழு வாழ்க்கையையும் வீணடித்தவனுக்கு, அடுத்த ஒரு மணிநேரம் என்பது ஒரு ஜுஜுபி. ஏற்கனவே கப்பல் மூழ்கிவிட்டது, இப்போது ஸ்பூனால் தண்ணீரை வெளியேற்றி என்ன பயன்? என்று நினைத்துக்கொண்டு ரீல்ஸ் பார்க்கும் அந்தத் தருணம் இருக்கிறதே, அதுதான் ஆகச்சிறந்த நிர்வாண நிலை.

காலத்தை வீணடித்துவிட்டோமே என்று கவலைப்படுவதும் ஒரு வகையான கால விரயம்தான். நீங்கள் கவலைப்படும் அந்தப் பத்து நிமிடத்தில் இன்னும் இருபது ரீல்ஸ்கள் பார்த்திருக்கலாம்.

ஒட்டுமொத்த வாழ்க்கையும் வீணாகிவிட்டது என்று தோன்றுகிறதா? சந்தோஷம். ஏனெனில், வீணாவதற்கு இனிமேல் உங்களிடம் வாழ்க்கை மிச்சமில்லை என்ற நிம்மதி உங்களுக்குக் கிடைக்க வேண்டும்.

வாழ்க்கை என்பது ஒரு ரீல்ஸ் வீடியோ போன்றதுதான். நீங்கள் அதை ரசித்தாலும், ரசிக்காவிட்டாலும் அது ஓடிக்கொண்டே இருக்கும். முடிவில் வாட்ச் அகைன் என்று கேட்க யாருமில்லை. எனவே, கிரிக்கெட், அனிதா, குரூப் 4, கர்நாடக சங்கீதம், ரீல்ஸ் என எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுங்கள். எல்லாம் ஒரே கிணற்றில்தான் விழுகின்றன.

இப்போது அடுத்த ரீல்ஸைத் தள்ளுங்கள். காலம் உங்களுக்காகக் காத்திருக்காது, ஆனால் இன்ஸ்டாகிராம் அல்காரிதம் காத்திருக்கும்!

*****

No comments:

Post a Comment