14 May 2026

அகம், புறம், அந்தப்புரம் மற்றும் கழிப்பறை – ஓர் அலசல்!

அகம், புறம், அந்தப்புரம் மற்றும் கழிப்பறை – ஓர் அலசல்!

நம் ஆட்கள் பரிணாம வளர்ச்சியில் செல்போன் வரை வந்துவிட்டார்களே தவிர, செப்டிக் டேங்க் விஷயத்தில் இன்னும் கற்காலத்திலேயே இருக்கிறார்கள்.

மகாத்மா காந்திக்குத் தூய்மை என்பது ஓர் ஆன்மீக அனுபவம். எங்கே சுத்தம் இருக்கிறதோ அங்கே இறைமை இருக்கிறது, என்றார் அவர்.

ரயில்வே மூன்றாம் வகுப்புப் பெட்டிகளில் பயணம் செய்து, அங்கிருந்த சுகாதாரச் சீர்கேட்டைப் பற்றி அவர் பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக எழுதினார்.

இன்று அவர் மட்டும் உயிரோடு இருந்து, நம் ஊர் அரசுப் பேருந்து நிலையக் கழிப்பறைகளைப் பார்த்திருந்தால், மீண்டும் ஒரு சத்தியாக்கிரகத்தையே ஆரம்பித்திருப்பார்.

காந்தியின் பதினெட்டு ஆக்கபூர்வத் திட்டங்களில் தூய்மைக்கு ஒரு தனி இடம் உண்டு. வினோபா பாவே போன்ற அறிஞர்கள் எல்லாம் துப்புரவுப் பணியைச் சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே பார்த்தார்கள்.

ஆனால் நாம்?

சுதந்திரம் வாங்கிவிட்டோம், ஆனால் இன்னும் சுத்தம் வாங்கவில்லை.

இந்தியாவில் செல்போன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையை விட கழிப்பறை வசதி உள்ளவர்களின் எண்ணிக்கை குறைவாம். அதாவது, வாட்ஸ்அப்பில் குட் மார்னிங் மெசேஜ் அனுப்ப வசதி இருக்கிறது, ஆனால் காலைக்கடனை கழிக்கத்தான் வசதி இல்லை.

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது வானளாவிய கட்டடங்களிலோ, 5G வேகத்திலோ இல்லை. அந்த நாட்டின் பொது கழிப்பறையில் தண்ணீர் வருகிறதா என்பதில்தான் இருக்கிறது.

வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணி நம் ஊர் சாலைகளைப் பார்த்தால் வளர்ச்சி தெரியும், அதுவே ஒரு பொதுக் கழிப்பறைக்குள் நுழைந்தால் நிஜமான இந்தியா தெரியும்.

என் வீடு சுத்தமாக இருந்தால் போதும், தெரு குப்பையானால் எனக்கென்ன? இதுதான் நம் தேசிய தாரக மந்திரம். வீட்டைத் துடைப்பத்தால் பெருக்கி, அந்த குப்பையை அப்படியே அண்டை வீட்டார் வாசலில் தள்ளிவிடுவது ஒரு கலை. இந்தியக் கலை என்றே அதைச் சொல்லலாம்.

குப்பையைத் தொட்டியில் போடுவது ஏதோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிவது போல ஒரு சாகசச் செயலாக நமக்குத் தெரிகிறது.

பொதுச்சொத்தைப் பாதுகாப்பது என்பது நம் மரபணுவிலேயே இல்லை போலிருக்கிறது. ஒரு கழிப்பறை நன்றாகக் கட்டப்பட்டால், அடுத்த வாரமே அதன் கதவு அல்லது குழாய் மாயமாய் மறைந்துவிடுவது நம் ஊர் மர்மம்.

சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்குச் சுகாதாரத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால், பள்ளிக் கழிப்பறையிலேயே மூக்கைப் பிடித்துக்கொண்டு ஓடும் குழந்தைகளுக்கு நாம் எதைக் கற்றுக்கொடுக்கிறோம்?

தூய்மை என்பது ஏதோ ஒரு நாள் மட்டும் துடைப்பத்தைப் பிடித்துப் புகைப்படம் எடுக்கும் ஈவென்ட் அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை.

உங்கள் சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்திருங்கள், இல்லையென்றால் ஆண்டவன் அங்கே வருவாரோ இல்லையோ, டெங்கு கொசு கண்டிப்பாய் விஜயம் செய்யும்!

*****

No comments:

Post a Comment