பிழைக்கத் தெரிந்தவன் பிழைப்பான் – ஏஐ எனும் எமதர்மன்!
உலகம் இப்போது ஜெட் வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது
என்று நினைத்தால் அது தவறு. உலகம் இப்போது ஏஐ வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது.
நேரம் மிச்சம், காசு மிச்சம் என்று முதலாளிகள்
ஏஐயைக் கட்டிப்பிடித்துக் கொஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். பாவம், ஊழியர்கள்தான் லே ஆப்
என்ற ஒற்றைச் சொல்லில் வாசலில் நிற்கிறார்கள்.
கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 98 டெக் நிறுவனங்கள்
சேர்ந்து 92,272 பேரை டாடா சொல்லி வீட்டுக்கு அனுப்பியிருக்கின்றன. பெரிய முதலைகள்தான்
இப்படி என்றால், இப்போது சின்னச் சின்ன ஸ்டார்ட் அப் குட்டிகளும் ஊழியர்களைக் கடிக்கத்
தொடங்கிவிட்டன.
ஏஐ என்பது ஒரு புத்திசாலியான குழந்தை. அந்தப்
புத்திசாலி குழந்தை பலருடைய பிழைப்பில் மண்ணை அள்ளிப் போடுகிறது.
முன்பெல்லாம் 100 பேர் தேவைப்பட்ட ஒரு வேலைக்கு
ஏஐயைப் பயன்படுத்தினால் பத்து பேரே போதும் என்று ஆகி விட்டது நிலைமை.
ஒரு லட்சம் வரை செலவழித்துப் பார்த்த வேலையை
ஏஐயைக் கொண்டு பத்தாயிரத்தில் முடித்து விடலாம்.
இன்னும் பழைய பெருமை பேசிக்கொண்டு, புதுசாக
எதையும் கற்காமல் இருந்தால் அவர்களுக்கு எல்லாம் ஏஐ ஆப்பைத் அதாவது ஆப் அல்ல, நிஜமான
ஆப்பைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது.
பிபிஓ, கஸ்டமர் சப்போர்ட், டிக்கெட் சிஸ்டம்
எல்லாம் இப்போது ஏஐயின் கையில். கோடிங் மற்றும் டேட்டா என்டரி பக்கம் இனிமேல் ஆட்களே
தேவைப்பட மாட்டார்கள் போலிருக்கிறது.
நிதி ஆயோக் ஓர் அறிக்கை கொடுத்திருக்கிறது.
2031 இல் டெக் துறையில் ஊழியர் எண்ணிக்கை 80 லட்சத்திலிருந்து 60 லட்சமாகக் குறையுமாம்.
இந்த அறிக்கை குறிப்பிடும் எண்ணிக்கை குறைவுதான். ஆனால், இது அதிகமாகவே இருக்கும் என்று
பீதியைக் கிளப்புகிளார்கள் டெக் துறையில் பழம் தின்று கொட்டைப் போட்ட கோட்டைவான்கள்.
பல மாதங்கள் கஷ்டப்பட்டு ஐடி நிறுவனங்கள் உருவாக்கும்
ரிப்போர்ட்டை ஏஐ பதினைந்து நிமிடங்களில் பக்காவாகக் கொடுக்கிறது.
விசயம் இதுதான்.
ஏஐ என்பது ஒரு தீராத பசி கொண்ட பூதம். அது
நிமிடத்துக்கு நிமிடம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் டிகிரி முடித்துவிட்டேன்,
எனக்கு எல்லாம் தெரியும், எப்போது வேலை தரப் போகிறீர்கள் என்று உட்கார்ந்திருந்தால்,
ஏஐ வந்து கோவணம் வரை உருவி விட்டுப் போய் விடும்.
அடிப்படை அறிவு என்பது எழுதுதல், படித்தல்,
கணக்கிடுதல் என்பதோடு ஏஐ அடிப்படைகளை அறிந்திருத்தல் என்பதாகத்தான் இருக்கும். இனி
ஏஐ காலத்தின் கட்டாயம். இல்லையென்றால், எல்லாவற்றுக்கும் ஏஐ என்ட் கார்டு போட்டு ஒரு
கோடிங் எழுதி விடும். எனவே அப்டேட் ஆகா விட்டால் அவுட்தான்.
*****

No comments:
Post a Comment