7 Apr 2026

குழந்தையின்மை – மௌனத்தின் வலி!

குழந்தையின்மை – மௌனத்தின் வலி!

விசேஷம் ஏதும் உண்டா?

இந்த ஒரு வரி கேள்விக்குள்ளே எத்தனை ஈட்டிகள் ஒளிந்திருக்கின்றன என்பது அதை எதிர்கொள்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.

அவர் ஓர் ஆளுமைமிக்க தைரியமான பெண்மணி (யார் என்கிற விவரம் வேண்டாமே!) அத்துடன் தேர்ந்த பேச்சாளர், தன்னம்பிக்கை எழுத்தாளர். குரலை வைத்தே மனிதர்களின் உணர்ச்சிகளைக் கணிப்பவர். ஆனால், அவரே தன் கருச்சிதைவு மற்றும் தோல்வியடைந்த ஐவிஎஃப் சிகிச்சைகள் பற்றிப் பேசும்போது தடுமாறுகிறார்.

விஷயம் என்னவென்றால், நம் சமூகத்தில் தாய்மை என்பது ஒரு டீபால்ட் செட்டிங். அது தானாக நடக்காவிட்டால், சமூகம் பதற்றமடைகிறது. அந்தப் பதற்றத்தில் அவர்கள் உதிர்க்கும் வார்த்தைகள் ஆறுதலை விட அதிக ரணங்களையே ஏற்படுத்துகின்றன.

இதை மேம்போக்காகப் பார்ப்பதை விட, சற்று டெக்னிக்கலாகப் பார்ப்போம்.

இன்று ஏழு தம்பதிகளில் ஒருவருக்குக் கருவுறுதலில் சிக்கல் இருக்கிறது என்கிறது மருத்துவம்.

ஐவிஎஃப் முறையில் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு சராசரியாக 25 சதவீதம்தான்.  மீதி 75 சதவீதம் தோல்விதான் மிஞ்சுகிறது.

இது வெறும் கணக்கு அல்ல, பலருடைய கண்ணீர்.

மேற்படி நாம் சொன்ன அந்தப் பெண்மணி, தன் அனுபவத்தில் சந்தித்த மனிதர்கள் சொன்னதையெல்லாம் கேட்டால் கண்களல்ல, கண்ணீரே கண்ணீர் வடிக்கும்.

ஒரு விருந்தில் தட்டில் உணவை நிரப்பிக்கொண்டே, வருத்தப்படாதீங்க, கண்டிப்பா அடுத்த முறை நடக்கும், என்று போகிற போக்கில் அந்தப் பெண்மணியைப் பார்த்துச் சொல்லிவிட்டுப் போனாராம் ஒரு நபர். கருச்சிதைவு என்பது ஏதோ பஸ்ஸைத் தவறவிடுவது போன்ற விஷயமா என்ன? அப்படித்தான் தோன்றியிருக்கிறது அந்த நபருக்கு.

கருமுட்டை மாற்றப்பட்ட பிறகு ஒரு நண்பர் சொன்னாராம், அந்தச் செல்கள் ஒன்னும் பெருசில்லை, அது உயிராக வாய்ப்பு குறைவுதான் என்று. அறிவியல்பூர்வமாக அவர் சொல்வது உண்மையாக இருக்கலாம். ஆனால், பல மாத ஊசிகளுக்கும் வலிக்கும் பிறகு அந்தப் பெண்ணுக்கு அது வெறும் செல் அல்ல, அது ஒரு கனவு! இதைச் சரியாகப் புரிந்து கொள்பவர்கள் பூஜ்ஜியம்தான்.

நடப்பதெல்லாம் நன்மைக்கே, உனக்குக் கொடுப்பினை அவ்வளவுதான் என்று இன்னொருவர் சொல்லியிருக்கிறார். இது ஒரு ரகமான க்ளிஷே. ஆறாத புண்ணில் மிளகாய்ப் பொடி தூவுவதற்குச் சமம்.

அப்படியானால், எது சரியான ஆறுதல்?

அந்தப் பெண்மணியிடம் விஷேஷம் பற்றிக் கேட்கின்ற போது, அவர் கண்கள் கலங்குவதைக் குறிப்பறிந்து சொல்லப்படும், ஐ ஆம் சாரி என்பது ஒரு முழுமையான வாக்கியம். இதற்குப் பின்னால் ஒட்டுக்கள் தேவையில்லை.

பல நேரங்களில் நிச்சயம் நடக்கும் என்ற போலி நம்பிக்கையை விட, உன் வலியில் நானும் பங்கெடுக்கிறேன் என்கிற மௌனமே சிறந்தது.

அந்தப் பெண்மணி ஓர் அழகான உதாரணத்தைச் சொல்கிறார். ஒரு தம்பதி தாங்கள் கருவுற்றிருக்கும் செய்தியை அவரிடம் சொல்லும்போது, இந்தச் செய்தி உன்னை வருத்தப்பட வைக்கலாம் என்று எங்களுக்குத் தெரியும், என்று நிதானமாகச் சொன்னார்களாம். அந்தத் தர்மசங்கடத்தைப் புரிந்து கொள்வதே ஒரு பெரிய அன்புதான்.

கடைசியாக, அந்த ஐவிஎஃப் கிளினிக் வரவேற்பாளர் சொன்ன,  உங்களை இத்தனை வருஷமா பார்க்கிறேன். ஒருத்தர் மேல ஒருத்தர் எவ்வளவு அன்பா இருக்கீங்க? குழந்தை இல்லாமலேயே நீங்கள் இருவரும் முழுமையானவர்கள் தான், என்கின்ற ஆறுதலும் மேம்பட்டதுதான்.

வாழ்க்கை என்பது ஏதோ ஸ்கோர்போர்டு வைத்து விளையாடும் விளையாட்டு அல்ல. குழந்தை இல்லை என்பதற்காக ஒரு வாழ்வு அர்த்தமற்றதாகி விடுவதில்லை.

மனிதர்களுக்குத் தேவைப்படுவது அதிகப்படியான கேள்விகள் அல்ல, கொஞ்சம் காது கொடுத்துக் கேட்கும் பொறுமையும், சில மௌனமான கைகுலுக்கல்களும்தான்.

மௌனத்தின் வலி புரிந்தவர்கள் அமைதியான ஆறுதலை எப்படிக் கொடுப்பது என்றுதான் யோசிப்பார்களே தவிர, மனக்குறையை ஒருபோதும் கிளறி விட்டு விட மாட்டார்கள்.

*****

No comments:

Post a Comment