8 Apr 2026

டூயல் சிம் மூளைக்காரன்!

டூயல் சிம் மூளைக்காரன்!

சுசீந்திரன் மனைவிக்கு ஒரு விசித்திரமான ஆசை. கடல் தாண்டிப் போய், ஏரோபிளேன்ல நாலு மணி நேரம் பறக்க வேண்டும். பொதுவாக, நான்கு மணி நேரம் அந்தரத்தில் தொங்குவதை ஒரு சாதனையாகக் கருதும் மனிதாபிமானம் கொண்டவர் அவர்.

சுசீந்திரனுக்கு வாங்கும் சம்பளமோ வீட்டு வாடகைக்கும், மளிகைக் கடைக்காரரின் சாபத்துக்கும் சரியாக இருந்தது.

ஆசைகள் நியாயமானவைதான், ஆனால் அந்த ஆசைகளுக்கு பெட்ரோல் ஊற்றப் பணம் வேண்டுமே!

அப்போதுதான் சுசீந்திரனின் டூயல் சிம் மூளை வேலை செய்தது.

ஸ்ட்ரெய்டடாகக் களத்தில் இறங்கினான்.

தன் அலுவலகப் பணிக்கு மத்தியில் சேலை, வேஷ்டி, லுங்கி என்று மொத்தமாக வாங்கி வந்து, சைடு பிசினஸ் ஆரம்பித்தான்.

அலுவலகம் போகும் நேரங்களில் அவனின் அந்த மனைவி கல்லாவைக் கவனித்துக்கொண்டார்.

நண்பர்கள் சொன்னார்கள், நீ பேச்சுக்காரன்யா, பேசிப் பேசியே லுங்கியைத் தலைப்பாகையா கட்ட வச்சிடுவ என்று.

சுசீந்திரனின் டூயல் சிம் மூளையானது போகப்போக டிரிபிள் சிம் அளவுக்கு வேலை செய்ய ஆரம்பித்தது.

சினிமாவுக்குப் போனால் கூட, ஒரு கோணிப்பையில் நாலு வேஷ்டி, ஐந்து லுங்கி, ஆறு புடவையை எடுத்துக் கொண்டு போய் தியேட்டர் வாசலில் நிற்பான்.

படம் ஆரம்பிக்க ஒரு மணி நேரம் முன்னால் போய் இரண்டு வேஷ்டியையாவது விற்றுவிட்டு, அந்த லாபத்தில் பாப்கார்ன் வாங்கி மனைவிக்குக் கொடுப்பான். அவனுக்கு நோ பாப்கார்ன். அதை சேமிப்பில் வரவு வைத்துக் கொள்வான்.

இப்படியாகச் சேர்த்தப் பணத்தில் பத்து வருடங்களில் மனைவியின் ஆசையை நிறைவேற்றும் அளவுக்குக் கொழுத்த பணக்காரனான் சுசீந்திரன்.

மக்களை வசியப்படுத்தத் தெரிந்தவனுக்கு வானம் மட்டுமல்ல, விமான டிக்கெட்டும் வசப்படும் என்பதை நிரூபித்த சுசிந்திரன், இப்போது மனைவியோடு விமானத்தில் பறந்து கொண்டிருந்தான்.

சும்மா இல்லாமல், அங்கும், பக்கத்து சீட்டில் இருப்பவரிடம் ஒரு வேஷ்டியை விற்க முயற்சி செய்து கொண்டிருந்தான் சுசீந்திரன். விமானத்திலிருந்து இறங்கி, டாக்ஸியில் செல்வதற்குச் செலவுக்கு ஆகுமே அந்த வேட்டி விற்ற லாபம்!

*****

No comments:

Post a Comment