16 Sept 2026

தேனாறும் பாலாறும் ஓட....

புத்தகக் கண்காட்சிக்கு வந்தும் புத்தகங்களை வாங்குவதை விட பஜ்ஜி, போன்டா, சமோசா, பப்ஸ், பர்க்கர் என வாங்குபவர்களைப் பார்க்கும் போது என்ன தோன்றுகிறது?

அறிவுப்பசியை எப்போதும் வயிற்றுப் பசி ஜெயித்து விடும் என்றுதான் தோன்றுகிறது. அத்துடன்,

“பசிக்கு உணவில்லாத போது சிறிது

படிப்புக்கும் ஈயப் படும்”

குறளை மாற்றி எழுதவும் தோன்றுகிறது.

*****

ஆன்லைன், கிண்டில், பிடிஎப், ஆப் என்று எவ்வளவோ வந்துவிட்ட பிறகும், இன்னும் புத்தகக் கண்காட்சி என்பது தேவையா?

ஓடிடி வந்த பிறகு திரையரங்கங்கள் இல்லையா! ஸ்விக்கி, சொமாட்டோ வந்த பிறகும் வீட்டில் சமைப்பது இல்லையா! ஆன்லைனில் ஆயிரம் படிப்புகள் வந்தாலும் பள்ளிக்கூடம் சென்ற படிக்கவில்லையா! எத்தனை பாராசிட்டாமல்கள் வந்தாலும் நிலவேம்புக் குடிநீர் இல்லையா! ஆயிரம் தொலைக்காட்சித் தொடர்கள் வந்தாலும் இன்னும் அக்கம் பக்கத்துக் கதைகளைப் புரளி பேசுவது இல்லையா! ஆக, எவ்வளவு வந்தாலும், செல்பி எடுப்பதற்காகவே புத்தகங்கள் வாங்கினாலும் சரி, வாங்கி வைத்த புத்தகங்களைப் படிக்காமல் வீட்டில் அடுக்கி வைத்து ஆன்லைனில் படித்தாலும் சரி, இந்த ஆண்டு பத்து புத்தங்களாகவது படிப்பேன் என்று சபதம் எடுத்து அது நிறைவேறாமல் போனாலும் சரி, புத்தகக் கண்காட்சி என்பது எல்லா காலத்துககும் தேவைதான்.

*****

கத்திரிக்கோல் எத்தனையாவது வகை நெம்புகோல் தெரியுமா?

அரசியல் ஆதாரப்புள்ளி மையத்தில் இருந்தால் அது சென்சார் போர்டின் முதல் வகை நெம்புகோல். மற்றபடி, அது இயல்பாகவே முதல் வகை நெம்புகோல்தான் என்பதை அறியும் போது அது அறிவியல் அதிசயமாகத் தெரிகிறதா அல்லது அரசியல் அதிசயமாகத் தெரிகிறது என்ற கேள்விக்கான பதிலை உங்களிடமே விட்டு விடுவதுதான் நல்லது இல்லையா?

*****

இன்னும் எத்தனைத் தேர்தலில்தான் ஓட்டுக்கு ஐநூறு, ஆயிரம் என்றே கொடுத்துக் கொண்டு இருப்பார்கள். இவர்கள் அப்டேட் ஆகவே மாட்டார்களா?

விரைவில் ஐநூறு டாலர், ஆயிரம் டாலர் என்று அப்டேட் ஆகி, வெகுவிரைவிலேயே ஐநூறு பிட்காய்ன், ஆயிரம் பிட்காய்ன் என்று அப்டேட் ஆகியே தீருவார்கள். இதில் ஒரு விசயம் பாருங்கள்! ஆம் நீங்கள் நினைப்பது சரிதான், பட்டுவாடா சுலபம் பாருங்கள்.

*****

தமிழகத்தில் தேனாறும் பாலாறும் ஓட என்ன செய்ய வேண்டும்?

அந்த அளவுக்குத் தமிழகத்தில் தேனையோ, பாலையோ உற்பத்தி செய்ய முடியாது என்பது முதல் விசயம். அப்படியே உற்பத்தி செய்தாலும் பாலாறு ஓடுவது கூட சாத்தியம், தேனாறு ஓடுவது சாத்தியமில்லை, ஏனென்றால் தேனின் பாகுத்தன்மை அதிகம் என்பதால் பாலைப் போல ஓட வாய்ப்பில்லை என்பது இரண்டாவது விசயம். ஒரு லிட்டர் தண்ணீர் 20 ரூபாய் விற்கும் தமிழகத்தில் பாலாறு ஓடினால் பாலின் நிலைமை என்னவாகும் என்பதை யோசிக்க வேண்டியிருப்பது மூன்றாவதுவிசயம். சரிதான் ஆகிற செலவு ஆகட்டும் என்று பாலாறை ஓட விட்டால், இங்கிருக்கும் ஆறுகளில் அடைத்திருக்கும் பிளாஸ்டிக், பாலிதீன் கழிவுகள் பாலை ஓட விடுமா என்பது நான்காவது விசயம். இவை எல்லாவற்றையும் கடந்து பாலாறு ஓடினால் பால் விற்பனையாளர்களின் கதி அதோ கதியாகும் என்பது ஐந்தாவது விசயம். இப்போது ஐந்து விசயங்களையும் மனதில் வைத்துக் கொண்டு சொல்லுங்கள், தமிழத்தில் பாலாறும் தேனாறும் ஓட வேண்டுமா, ஒழுங்காகக் காவிரியில் கர்நாடகம் தரும் தண்ணீர் ஓடினால் மட்டும் போதுமா என்று?

*****

நிலவுக்கு என்ன திமிர்?

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 38

நிலவுக்கு என்ன திமிர்?

அந்தப் பவளமல்லி மரத்து நிழலில் நின்றுகொண்டு அவள் வானத்து நிலவைப் பார்த்துச் சொன்னாள், "இதோட நிறம் என்ன தெரியுமா? சாம்பல். ஆனா பாரேன், சூரியன்கிட்ட கடன் வாங்குன வெளிச்சத்துல என்ன ஒரு பந்தா, நம்ம அரசியல்வாதிங்க மாதிரி!"

அவன் சிரித்தான். "ஏன் நிலவு மேல இத்தனை கோபம்?"

"கோபம் இல்ல. ஆதங்கம். என்னோட முகத்துல இருக்கிற இந்த ஒரிஜினல் எக்ஸ்பிரஷனை உன்னால இந்த நிலவுல பார்க்க முடியுமா? இது ஒரு டெட் பிளானட். அதுல காதலும் இல்ல, கலக்கமும் இல்ல. ஆனா, இந்த நிலவுக்குக் கவிஞர்கள் கொடுக்குற பில்டப் இருக்கே? ரொம்ப ஓவர்!"

அவன் புன்னகைத்துக் கொண்டே சொன்னான், "உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? திருவள்ளுவர் எப்போவோ உன்னோட மனசைப் படிச்சுட்டார். அவர் சொல்றாரு, ஏய் நிலவே! உன்னால என் காதலியோட முகத்தை மாதிரி ஒளியைக் கொடுக்க முடியுமா? முடியலன்னா, உன்னோட காதலை விட்டுவிட்டு மரியாதையா ஒதுங்கிப் போ அப்படின்னு."

அவள் புருவத்தை உயர்த்தினாள், "வள்ளுவரே எனக்கு முன்னடியே இப்படியெல்லாம் சொல்லியிருக்கிறாரா?"

"சந்தேகமே வேண்டாம்! உன்னோட முகத்துல இருக்கிற பிரகாசம் வெறும் போட்டான் பார்ட்டிகிள்ஸ் இல்ல; அதுல எமோஷன்ஸ் இருக்கு. நிலவுல அது இருக்கா? நாசாவே அந்த நிலவுக்குப் போய் பார்த்துட்டு அங்க ஒன்னும் இல்லன்னு சொல்லிட்டாங்க."

அவள் அவன் தோளில் செல்லமாகத் தட்டினாள், "இன்றைக்கு எதையாவது சொல்லி உன்னை வம்புக்கு இழுக்கலாம்ன்னு பார்த்தா, நீயென்ன வள்ளுவரையும் அறிவியலையும் கொண்டு வந்து அசரடிக்கிறீயேடா!"

"விசயம் இருக்கு. அன்னைக்கு நீ முகத்துல என்ன க்ரீம் யூஸ் பண்ணுவன்னு கேட்டேனே. ஞாபகம் இருக்கா?"

"ம். அதுக்கு என்ன இப்போ திடீர்னு? நான்தான் க்ரீம்லாம் யூஸ் பண்றதில்லன்னு சொன்னேனே!"

"மேட்டரே அதுலதான் இருக்கு. இன்றைக்கு வானத்தைப் பாரேன் பௌர்ணமி நிலா. அது சூரியனோட வெளிச்சத்தைக் கிரீம் போல பூசிக்கிட்டுத்தான் இப்படி பந்தா பண்ணுது. நீ சொல்றாப்புல பில்டப் கொடுக்குது. அப்படிக் கொடுத்தாலும், அதால உன்னோட முகத்துக்கு ஈடு கொடுக்க முடியல பாரேன். திருவள்ளுவர் இங்க இருந்திருந்தா இப்போ அதைத்தான் சொல்லியிருப்பார்.

"மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்

காதலை வாழி மதி."                                   (குறள், 1118)

அப்படின்னு!"

"போதும்டா. வள்ளுவரைக் கூப்பிட்டு வந்து என்னை வர்ணிக்கிறேன்னு, ஒரே அடியா என்னை ஒரு வழி பண்ணிடாதே!" என்று அவள் சொன்னாலும், அவள் முகத்தில் வழிந்த அந்தச் சின்ன வெட்கப் புன்னகை, அந்தப் பௌர்ணமி நிலாவை விட பல நூறு மடங்கு அதிகமாகவே ஒளிர்ந்தது.

அவர்களின் இந்த உரையாடலைக் கேட்டதாலோ என்னவோ, திடீரென்று வானத்தில் ஓர் அசம்பாவிதம் நிகழ்ந்தது!

நிலவு மெல்ல வானத்து மேகங்களுக்குள் இருந்து இறங்கி, அவர்களதுமுன்னே வந்து விட்டது. அதனிடமிருந்து ஒரு சன்னமான குரல் ஒலித்தது, "ஏய் மானிடர்களே! என்னை நீங்கள் ரொம்ப மட்டம் தட்டுவது எனக்குப் புரிகிறது. உலகமே என்னைப் புகழ்ந்து கவிதை பாடும் போது, நீங்களும் திருவள்ளுவரும் சேர்ந்து கொண்டு, என்னை என்னவோ கருவாட்டுக் கடை சரக்கைப் போல துச்சமாகப் பேசிக் கொண்டு இருக்கிறீர்களே?"

திடீரென்று இப்படி நிலவை அருகில் எதிர்பார்க்காத அவளுக்கு சற்று மயக்கம் கலந்த பயம் வந்து விட்டது.

ஆனால், அவன் சற்றும் அசரவில்லை. நிலவைப் பார்த்துப் பேசத் தொடங்கினான், "ஏய் நிலவே! உன்னை எல்லாரும் கொண்டாடுவது உண்மைதான். ஆனால், நீ மாதத்துக்கு பதினைந்து நாள் தேய்ந்துப் போயிடுற, நடுவுல மேகக் கூட்டம், அப்புறம் கிரகணம் எல்லாம் வந்து உன்னை முழுங்குது. உன்னால ஒரே மாதிரி எப்பவும் இவளோட முகம் மாதிரி ஒளிர முடியுமா? சரி அப்படி இப்படி ஏதோ கொஞ்சம்  மங்கலா தொங்கலா ஒளிர்றன்னு பார்த்தாலும், ஏ கடன்கார நிலவே! அது உன்னோடாதான்னா அதுவும் இல்ல, அது சூரியனோடது. ஆனா, இவளோட முகம், அந்த ஒளி எல்லாம் இவளோடது. யாருகிட்டேயும் கடன் வாங்கிட்டு வந்தது இல்ல தெரியுமா?"

நிலவு சற்றுத் தடுமாறியது. "இருந்தாலும், நான் விண்வெளியில் இருக்கிற பெரிய துணைக்கோளம்பா! என்னைப் பாராட்டா விட்டாலும் பரவாயில்லை. என்னைப் போட்டு இப்படிக் கலாய்க்கலாமா?" என்று அது அழ ஆரம்பித்து விட்டது.

அவன் விடாப்பிடியாக அழுத்தம் திருத்தமாகச் சொன்னான், "அதெல்லாம் எனக்குத் தெரியாது. என் காதலிக்கு ஈடாக நீ ஒளிர வேண்டுமானால், முதலில் உன் முகத்தில் களங்கம் மாதிரி இருக்கின்ற அந்தத் தழும்புகளை லேசர் சிகிச்சை செய்து எடு. அதுக்கப்புறம் வந்து பேசு! திருவள்ளுவர் சொல்ற மாதிரி, மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மதி!"

அவ்வளவுதான்! அவனின் இந்த வெறித்தனமான பதிலைக் கண்டு பயந்துபோன நிலவு, சட்டென்று மேகத்திற்குள் ஓடி ஒளிந்துகொண்டது.

"பாவம்டா நிலா! அதைப் போய் இப்படி நோஸ் கட் பண்ணி ஓட விட்டுட்டீயே! அதோட மனசு என்ன பாடுபடும்?" அவள் முகம் வாடியது.

"இப்போ வாடுறப்போ கூட, உன்னோட முகத்தை அந்த நிலா பீட் பண்ண முடியலையே! " என்று அவன் சொல்ல, "ச்சீ! போடா!" என்று அவன் மார்பில் ஒரு குத்து விட்டாள். பின் என்ன நினைத்தாளோ அவன் மார்பை ஆரத் தழுவிக் கொண்டாள்.

-          சூத்திரங்கள் தொடரும்!

*****

15 Sept 2026

செருப்பின் இருப்பு

செருப்பின் இருப்பு

கிழிந்தவற்றோடு வந்த

எல்லோருடையதையும்

தைத்து முடிந்த பிறகு

கடையடைத்து விட்டு

சென்ற போது

பார்த்தேன்

கிழிந்த செருப்பை

லஜ்ஜையின்றி மாட்டிக் கொள்ளும்

செருப்பு தைப்பவர்

*****

இருக்கு ஆனா இல்ல!

மிளகாய் இருக்கு

மல்லி இருக்கு

நல்லெண்ணெய் இருக்கு

தேங்காய் எண்ணெய் இருக்கு

அரைச்ச மாவு இருக்கு

உடைச்ச உளுந்து இருக்கு

வெங்காயம் இருக்கு

தக்காளி இருக்கு

பூண்டு இருக்கு

உருளை இருக்கு

எல்லாம் இருக்கு

இன்னும் என்ன பார்க்கிறீங்க

என்கிறார் வியாபாரி

பையில் பணம் இருக்கான்னுதான்

என்கிறாள்

ஜிஎஸ்டி தெருவில் வசிக்கும் பாட்டி

*****

அழகின் முழுமை நிலவா, அவள் முகமா?

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 37

அழகின் முழுமை நிலவா, அவள் முகமா?

சந்திரனில் களங்கம் இருக்கலாம்; அது அதன் இயல்பு மற்றும் அந்த அழகின் ஒரு பகுதி என்றெல்லாம் தர்க்கம் பேசிக்கொண்டிருக்கலாம். ஆனால், அவளைப் பார்க்கும்போது, அந்தக் கோட்பாடே அடிபட்டுப் போய்விடுகிறது. அவள் முகத்தில் எந்தக் களங்கமும் இல்லை என்ற கோட்பாடே எஞ்சுகிறது. அவன் இப்படி ஆழமாக யோசித்துக் கொண்டிருந்தான்.

"என்ன யோசனை?" என்றாள் அவள், தேநீர் கோப்பையை நீட்டியபடியே.

அவள் கையிலிருந்து  கோப்பையை வாங்கும் போது அவனது விரல்கள் தயக்கத்தோடு அவள் விரல்களை லேசாகத் தொட்டன. எப்போதுமே அப்படித்தான். கல்லூரி நாட்களில் தொடங்கிய இந்தத் தயக்கம், இன்னும் மாறவில்லை.

"ஒன்னுமில்ல. உன்னைப் பார்த்தேன். ஒண்ணு தோணுச்சு!" என்றான்.

"என்னது நிலவு மாதிரி இருக்கேன்னாவா? ரொம்பப் பழசு மிஸ்டர் இன்ஜினியர். வேற ஏதாவது புதுசா யோசிங்க!" என்றபடி அவள் சிரித்தாள். அந்தச் சிரிப்பில் சிதறிய வெளிச்சம் அவனது கம்ப்யூட்டர் மானிட்டர் லைட்டை விடப் பிரகாசமாக இருந்தது.

அவள் பொய் சொல்லவில்லை. நிலவு தேய்கிறது, வளர்கிறது, அதிலுள்ள பள்ளங்களால் முழுவதும் வெண்மையாகப் பிரகாசிக்க முடியாமல், சில இடங்களில் கரும்புள்ளிகள் தெரிகின்றன. சில நாட்களில் மேகத்திற்குள் ஒளிந்துகொள்கிறது. ஆனால் அவள் அப்படியல்ல. வாழ்க்கையின் கடினமான சூழல்களில், குறிப்பாக அவனது முதல் ஸ்டார்ட்அப் பெயிலியர் ஆனபோது, இரவோடு இரவாக அவன் கோட் எழுதிக்கொண்டிருந்தபோது, உற்சாகத்தின் அடையாளமாக அவனது அருகில் சிரித்த முகத்துடன் நின்றாளே தவிர, அவள் முகத்தில் தோல்வியின் ஒரு சிறு நிழல் கூட விழுந்ததில்லை.

"நிலவுக்கே களங்கம் உண்டு. ஆனா உனக்கு?"

"எனக்கு என்ன? முகப்பரு வந்துடுச்சுன்னு சொல்ல வர்றீங்களா?" என்று அவள் கண் சிமிட்டிய விதம் காதலின் அக்மார்க் முத்திரை.

"இல்லை மிஸ் என்ஜினியர்! நிலா தன் களங்கத்தோடுதான் அழகாக இருக்கிறது என்கிறார்கள். ஆனால், நீ அந்த இலக்கணத்தையெல்லாம் மாற்றிவிட்டாய். களங்கமே இல்லாத பரிபூரண அழகு என்றால் அது உன் முகம் மட்டும்தான். கோடானுகோடி பிக்சல்கள் சேர்ந்து உருவாக்க முடியாத பெர்பெக்ட் கோட் நீ."

"இப்படியே என்னைப் பார்த்துகிட்டே யோசிக்கிட்டே இருந்தீங்கன்னா, டீயும் ஆறிடும். கோடிங்கும் போயிடும்." என்றாள் அவள் சிரித்துக் கொண்டே.

"என்ன பண்ணுறது? அந்தக் காலத்துப் புலவர் ஒருத்தர் இப்படி உன்னையும் நிலவையும் பத்தி மாத்தி மாத்தி யோசிக்க வெச்சுக்கிட்டே இருக்காரே!" என்றான் அவன்.

அவள் புருவம் உயர்ந்து, விழி விரிந்தது. "நெனைச்சேன். என்ஜினியருக்கு மூளை எப்பவும் இப்படி வேலை செய்யாதே. யாருப்பா அந்தப் புலவர் பெருமான்? என்னையும் நிலவையும் பத்தி உன்னை ஏதேதோ யோசிக்க வெச்சிருக்காரே?"

"வேற யாரு? நம்ம திருவள்ளுவர்தான். 

"அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல

மறுவுண்டோ மாதர் முகத்து."                  (குறள், 1137)

அப்படின்னு அவர் ஒரு சூத்திரம் எழுதி வெச்சிருக்காரு தெரியுமா? அதாவது, நிலவுக்கே கரையும் வளரும் கோளாறு இருக்கு; அதுல மறுவும் இருக்கு. ஆனா, இந்தப் பெண்ணின் முகத்திலோ நிலவைப் போல முழுமை இருக்கு, ஆனா அந்த மறுவும் கூட இல்லை. அப்படின்னா நிலவை விட உன் முகம் ரொம்ப ரொம்ப பெர்பெக்ட்ங்றார். சரிதானே லாஜிக்?"

"ஓஹோ! அந்தக் காலத்துப் புலவர்களுக்கு வேற வேலையே இருந்திருக்காது போல. லாஜிக்கை அப்புறம் பிடிப்போம். முதல்ல, நிலவுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?"

அவன் அவளது நிலா போன்ற முகத்தைப் பார்த்தான். அந்த அறையின் மங்கலான வெளிச்சத்திலும் அவள் முகம் ஒரு மெல்லிய நிலவொளியைப் போலப் வெண்ணிறமாகத் ஜொலித்தது. "நிலா, உன் முகம் இந்த ரெண்டும் வானத்திலதானே இருக்கு!"

"ஹேய்! என்னாச்சுப்பா உனக்கு? நிலா வானத்துலங்றது ஓகே. என் முகம் இங்கதான் இருக்கு. அறிவியல்படி அதுவும் வானத்துல ஒரு பகுதிதான்னு சொல்லி ஜமாய்க்கக் கூடாது. ஓர் என்ஜினியர் லாஜிக் மிஸ்டேக் பண்ணக் கூடாது."

"திருக்குறள்ல லாஜிக் மிஸ்டேக்கா? வாய்ப்பே இல்ல. அந்த நிலா வானத்துலன்னா, உன் முகநிலா என்னோட மனவானத்துலதானே?"

"ரொம்ப ரொமான்டிக் ஆகிடாதீங்க. வீட்டுக்குக் கிளம்ப நேரமாச்சு." என்றவள்  அவனது தோளில் சாய்ந்துகொண்டாள்.

ஜன்னல் வழியாக வெளியே தெரிந்த முழு நிலவு அவர்களுடன் பேசாமல் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தது. இந்த உலகில் தர்க்கமும் கவிதையும் நெகிழ்ந்து குழைந்து வளைந்து நெளிந்து சந்தித்துக் கொள்ளும் ஓர் இடம் என்றால் அது காதல்தான்.

-           சூத்திரங்கள் தொடரும்!

*****

14 Sept 2026

அடுத்த ஒன் லைன்!

ரொம்ப ரொம்ப புதுமையாக விலையில்லா அதாவது இலவச தேர்தல் வாக்குறுதி ஒன்று?

விலையில்லா அதாவது இலவச நிம்மதி ஒவ்வொருவருக்கும் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதல் கோப்பில் முதல் கையெழுத்திட்டு வழங்கப்படும் என்று அறிவிப்பதுதான். இதை மட்டும் தேர்தல் வாக்குறுதியாக வழங்கிவிட்டால், பிறகு செத்தான்ட சேகருதான். அதென்ன செத்தான்டா சேகரு என்றால் அங்குதானே அது கிடைக்கிறது என்பது கூட காரணமாக இருக்கலாம்.

*****

மிக்சி, டிவி, கிரைண்டர் போன்றவற்றை இலவசமாகக் கொடுக்கும் போது என்ன தோன்றியது?

சீக்கிரமே மின் கட்டணம் உயரப் போகிறது என்று. விரைவில் தோற்றம் உண்மையாகவும் ஆகிப் போனது.

*****

ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகைக் கொடுப்பது அரசுக்கு இழப்பைத்தானே ஏற்படுத்தும்?

விலைவாசி அதிகரித்து, மக்களின் வாங்கும் சக்தியும் அதிகரித்து, அதனால் கிடைக்கும் ஜிஎஸ்டியும் அதிகரித்தால் ஆயிரம் ரூபாய் இழப்பு என்பது ஜூஜூபீயாகப் போய் விடும் வாய்ப்பும் இருக்கிறது. ஆக இந்தக் கேள்விக்கான பதிலை ஒரு கேள்வியாக இப்படியும் முடிக்கலாம், மக்கள் பத்தாயிரம் செலவு செய்தால் கூட போதும் 8 சதவீத, 18 சதவீத ஜிஎஸ்டி வரி விகிதங்களில் ஆயிரம் என்பது அசால்ட்டாக வந்து விடாதா என்ன?

*****

நீங்கள் கடைக்குச் சென்று இட்லி, தோசை சாப்பிடும் போது முதலில் அதன் சுவையைப் பார்ப்பீர்களா? அல்லது அவற்றின் விலையைப் பார்ப்பீர்களா?

சுவையையோ, விலையையோ பார்ப்பதோ அந்தக் காலம். அதற்கு எவ்வளவு ஜிஎஸ்டி என்று முதலில் பார்ப்பதுதான் இந்தக் காலம்.

*****

இந்தியன், அந்நியன், சிவாஜி, எந்திரன் வரிசையில் ஷங்கரின் அடுத்த படத்தின் ஒன்லைன் எப்படி இருக்கும்?

ரோபோ ஆட்சி செய்தால் லஞ்சம் இருக்காது.

*****

தொடர்வண்டியில் ஒரு வெண்ணிலா!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 36

தொடர்வண்டியில் ஒரு வெண்ணிலா!

அன்று மழையிரவு.

திருவாரூர் தொடர்வண்டிச் சந்திப்பில் கடைசி பயணியர் தொடர்வண்டிக்காக காத்திருந்தனர் இருவரும்.

நனைந்த நடைமேடை.

குளிர்ந்த காற்று.

அவள் அந்த சிமெண்ட் இருக்கையில் அமர்ந்திருந்தாள். அவன் அவளருகே நின்று கொண்டிருந்தான். விளக்கொளியின் சாயல் அவள் முகத்தில் பட்டுத் தெறித்தது.

நிலா வானத்தில் மேகங்களுக்குள் மறைந்து ஓடிக்கொண்டிருந்தது.

அவள் அவன் அருகில், துளி கூடக் கலங்காமல், அதே நிலவின் வெளிச்சத்தைக் கடன் வாங்கியது போல அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனும் அப்படியே அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். சட்டென்று அண்ணாந்து மேலே வானத்தில் பௌர்ணமி நிலவைப் பார்த்தான்.

இரண்டும் சரியாக ஒரே அளவில், ஒரே வண்ணத்தில், ஒரே வெண்மையின் தீவிரத்தோடு இருந்தன. சுற்றியிருந்த ஆகாயத்தில் மின்னிய கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் ஏதோ திசையறியாமல், எந்தப் பக்கமாகவோ நகர்ந்துகொண்டிருந்தன.

"என்ன இது குழப்பம்?" முணுமுணுத்தான் அவன்.

"என்னது?" என்றாள் அவள், புருவங்களை உயர்த்தி.

"இல்ல. மேல இருக்கிற நிலவு எது, உன்னோட முகம் எதுன்னு இந்த விண்மீன்களுக்கே குழப்பம் வந்திருக்கும் போலிருக்கு. பாரு, நட்சத்திரங்கள்லாம் ஒரே இடத்துல இல்லாம கலகலன்னு நடுங்குதுங்க."

அவள் செல்லமாகச் சிரித்தாள். அந்தச் சிரிப்பின் அதிர்வில் வானத்து விண்மீன்கள் இன்னும் கொஞ்சம் பதறிச் சிதறின. "என்ன சில்மிஷம்? இன்னைக்கு ஆபீஸ் பிரசர் மூளைக்கு ரொம்ப வேலை கொடுத்துருச்சு போல."

"அப்படியெல்லாம் இல்லை. இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடி கவிஞர் ஒருத்தர் எழுதி வெச்சதை இப்போ வேற லெவல்ல உணர்ந்து பார்க்கிறேன்."

"அப்படியென்னப்பா ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடியே இன்னிக்கு லைவ்வா பீல் பண்றாப்புல எழுதி வெச்சிருக்காரு அந்தக் கவிஞர்?"

"அது என்னான்னா,

"மதியும் மடந்தை முகனும் அறியா

பதியின் கலங்கிய மீன்."                 (குறள், 1136)

அப்படின்னு செம ரொமாண்டிக்கா பீல் பண்ணியிருக்கார் கவிஞர்."

"ஹேய்! இது திருக்குறள்ப்பா!"

"சரிதான். உன்னோட முகமும் அந்த நிலாவும் ஒண்ணா ஒளிரும்போது, வானத்து மீன்களுக்கு எது நிலா, எது உன் முகம்னு கண்டுபிடிக்க முடியல. அதான் திகைச்சுப் போய் நிக்குதுங்க. ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடியும் அப்படித்தான் இருந்திருக்கு. இப்பயும் அப்படித்தான் இருக்கு. சில வானவியல் உண்மைகள் மாறாது போலிருக்கு."

அவள் அவன் கைகளைப் பிடித்துத் தன் அருகில் இருக்கையோரம் இழுத்துக் கொண்டாள். அவளது மூச்சுக்காற்று அவனது நெஞ்சில் பட்டுத் தெறித்தது.

"அப்ப நான்தான் நிலாவா?"

"இல்ல. நிலா ரொம்பக் குளிர்ச்சியானது. நீ என்னோட எரிமலை."

அவள் சட்டென்று கோபிப்பது போலப் புன்னகைத்தாள். அந்தப் புன்னகைக்கு ஒரு கிலோவாட் பவர் இருந்தது. "ரொம்ப பில்டப் கொடுக்காதீங்க மிஸ்டர்! விண்மீன்கள் கலங்குதோ இல்லையோ, உங்க லாஜிக்கல் பிரைன் இப்போ டோட்டலா கலங்கிப் போயிருக்குன்னு மட்டும் புரியுது."

அதே நேரம் ஊதல் ஒலியோடு பயணியர் தொடர்வண்டி நடைமேடை எண் ஒன்றுக்கு வந்தது.

இருவரும் ஓடிச் சென்று தொடர்வண்டியின் சன்னலோர இருக்கை ஒன்றைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தனர். அவள் தோள் அவன் தோளில் உரசியது.

தொடர்வண்டி மீண்டும் ஊதல் ஒலியோடு புறப்பட ஆயத்தமானது.

அவன் இப்போது தொடர்வண்டியின் சன்னல் வழியே வெளியே பார்த்தான். வானத்து நட்சத்திரங்கள் மினுமினுத்தன. வள்ளுவக் கவிஞர் சொன்னது போலத்தான், மேகக் கூட்டங்களுக்கு நடுவே எது நிலவு, இந்த நகரும் ரயிலின் வெளிச்சத்தில் எது அவளது முகம் என்று தெரியாமல் அந்த விண்மீன்கள் கூடத் தங்கள் பாதையைத் தொலைத்துவிட்டுத் திக்குமுக்காடிக்கொண்டிருந்தன.

"இப்போ மறுபடியும் சொல்லுங்க!" அவள் அவன் காதோரம் முணுமுணுத்தாள். அவளது மூச்சுக்காற்று அவன் கன்னத்தைத் தீண்டியது. "வானத்துல இருக்கறது யாரு?"

"நீதான்!" என்றான் அவளது விரல்களை இன்னும் இறுக்கமாகப் பற்றியபடியே.

அவன் விரல்களின் ரேகைகளில் அவள் கரைந்து கொண்டிருக்க, காதலின் மின்னழுத்தம் உச்சத்தைத் தொட்ட அந்த நொடியில், காலமும் திசைகளும் நின்றுபோக, பிரபஞ்சத்தின் அத்தனை விண்மீன்களும் குழம்பித் திணறுவதைப்போல, அவனும் அவளும் அந்தத் தொடர்வண்டியில் தங்களது காதல் தேசத்தில் தொலைந்து போயிருந்தனர்.

தொடர்வண்டி அந்த இரு காதலர்களையும் சுமந்தபடி இரு இணைகோட்டுத் தண்டவாளங்களுக்கு இடையே சிக்கு புக்கு சிக்கு புக்கு என விரைந்து கொண்டிருந்தது.

வானத்து விண்மீன்களும் தங்கள் நிலா அந்தத் தொடர்வண்டியில் ஏறி விட்டதோ என நினைத்து அந்தத் தொடர்வண்டியை மூர்க்கமாகப் பின்தொடர ஆரம்பித்தன.

-           சூத்திரங்கள் தொடரும்!

*****

13 Sept 2026

வேறு என்ன இலவச வாக்குறுதி கொடுக்கலாம்?

ஆட்சிப் பொறுப்பேற்று ஐந்தாவது வருடத்தில்தான் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமா?

முதல் வருடத்திலேயே நிறைவேற்றி விட்டு நான்கு வருடங்களில் மக்கள் மறந்து விடுவதற்கா என்றுதான் ஐந்தாவது ஆண்டு நிறைவேற்றுகிறார்கள். இதுதான் அரசியல்வாதிகள் மக்களுக்கு டப் கொடுக்கும் இடம். ஆனால், மக்களுக்கு ஒரு பிரேக்கிங் நியூஸ் கிடைத்தால் போது நான்கே நிமிஷத்தில் அதையும் மறந்து விடுவார்கள் என்பது வேறு விசயம். இதுதான் மக்கள் அரசியல்வாதிகளுக்கு டப் கொடுக்கும் இடம்.

*****

இந்தத் தேர்தலில் வேறு என்ன இலவச வாக்குறுதி கொடுக்கலாம்?

இலவச சரக்கு. குவார்ட்டர், ஆப், புல் என்று ஒவ்வொரு தேர்தலுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றிக் கொள்ளலாம். இதை ஒன்றைத்தாம்பா இப்போதைக்கு விட்டு வெச்சுருக்காங்க. அதையும் கொடுத்துட்டா சோலி முடிஞ்சிடும்!

*****

உண்மையில் புதையல், அதிர்ஷ்டம் என்பதெல்லாம் இப்போதும் இருக்கிறதா?

புதையல், அதிர்ஷ்டம் என்பதெல்லாம் பழங்காலத்து வஸ்துக்கள் அல்ல. இப்போதும் இருப்பவைதான். அவை மறைந்திருக்கும் வஸ்துக்கள். அது எங்கே இருக்கிறதோ, அங்கேதான் எப்போதும் இருக்கிறது. மறைந்திருக்கும் அதைக் காண ஒரு மைக்ராஸ்கோப் தேவைப்படுகிறது. அதுதான் கொஞ்சம் முயற்சி மற்றும் உழைப்பு. இந்த வார்த்தைகளைக் கேட்டாலே பலருக்கும் ஒரு சலிப்பும் வெறுப்பும் அத்தோடு அலுப்பும் வந்து விடுகிறது. ஆனால் இந்தச் சலிப்பு, அலுப்பு, வெறுப்பு இவற்றைத் தூக்கி எறிந்து விட்டு, முயற்சியாலும் உழைப்பாலும் யார் தேடத் தொடங்குகிறார்களோ அவர்களின் அட்ரஸ் கேட்டுக் கொண்டு இந்தப் புதையலும், அதிர்ஷ்டும் ஸ்விக்கியில் போட்ட ஆர்டரைப் போலத் தேடி வந்து விடும் என்பதுதான் ரகசியம்.

*****

தொழில்நுட்பம் வளர்ந்து விட்டால் எல்லாம் மாறி விடுமா?

தொழில்நுட்பம் வளர்ந்து விட்டால் எல்லாம் மாறலாம். மாற்ற முடியாதவையும் இருக்கவே செய்யும். அதில் முதன்மையானது பேசிக் இன்ஸ்டின்க்ட். அதை மாற்றுவது அவ்வளவு சுலபமல்ல. அதில் முதலிடத்தில் இருப்பது ஏமாற்றுவதும் திருடுவதும்.

முன்பெல்லாம் பேருந்தில் ஏறிக் கூட்டத்தோடு கூட்டமாக இடித்துக்கொண்டு, ப்ளேடு போட்டு பிக்பாக்கெட் அடிப்பார்கள். அது ஒரு மேனுவல் வேலை. இப்போது டிஜிட்டல் இந்தியா. கையில் ஏடிஎம் கார்டும், மொபைலில் ஜிபேயும் வந்த பிறகு அந்தப் பாவப்பட்ட பிக்பாக்கெட்காரர்கள் காணாமல் போய்விட்டார்கள். வேலையில்லாத் திண்டாட்டம் அவர்களையும் பாதித்திருக்க வேண்டும். ஆனால் திருட்டு நின்றுவிட்டதா? அதுதான் இல்லை.

திருட்டு இப்போது அப்கிரேட் ஆகியிருக்கிறது. ஒரு காலத்தில் கத்தியைக் காட்டி மிரட்டியவன், இப்போது ஒரு லிங்க் அனுப்பி கிளிக் செய்வதற்கு மாறியிருக்கிறான். ஓர் ஓடிபியை சிரித்துப் பேசி வாங்கினால் போதும், உங்கள் பேங்க் பேலன்ஸ் ஜீரோ ஆகிவிடுகிறது.

அன்று பிக்பாக்கெட்; இன்று ஆன்லைன் ஸ்கேம். பாட்டில் மாறியிருக்கிறது, ஆனால் உள்ளே இருக்கும் விஷம் அதேதான்.

இந்த உலகில் ஐகியூ வளர வளர, திருடர்களின் 'கோடிங்'கும் வளர்கிறது. அதைத் தொழில்நுட்பமே முயன்றாலும் மாற்ற முடியாது.

*****

இந்தக் கோயிலில் வேண்டிக் கொண்டால் வீடு கட்ட பணம் வந்துவிடும் என்பவரிடம் என்ன சொல்வது?

வீடு கட்ட பணம் வந்து விடும், இஎம்ஐ கட்ட தெம்பும் வந்துவிடுமா?

*****