திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்
சூத்திரம் – 36
தொடர்வண்டியில் ஒரு வெண்ணிலா!
அன்று
மழையிரவு.
திருவாரூர்
தொடர்வண்டிச் சந்திப்பில் கடைசி பயணியர் தொடர்வண்டிக்காக காத்திருந்தனர் இருவரும்.
நனைந்த
நடைமேடை.
குளிர்ந்த
காற்று.
அவள்
அந்த சிமெண்ட் இருக்கையில் அமர்ந்திருந்தாள். அவன் அவளருகே நின்று கொண்டிருந்தான்.
விளக்கொளியின் சாயல் அவள் முகத்தில் பட்டுத் தெறித்தது.
நிலா
வானத்தில் மேகங்களுக்குள் மறைந்து ஓடிக்கொண்டிருந்தது.
அவள்
அவன் அருகில், துளி கூடக் கலங்காமல், அதே நிலவின் வெளிச்சத்தைக் கடன் வாங்கியது போல
அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனும் அப்படியே அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
சட்டென்று அண்ணாந்து மேலே வானத்தில் பௌர்ணமி நிலவைப் பார்த்தான்.
இரண்டும்
சரியாக ஒரே அளவில், ஒரே வண்ணத்தில், ஒரே வெண்மையின் தீவிரத்தோடு இருந்தன. சுற்றியிருந்த
ஆகாயத்தில் மின்னிய கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் ஏதோ திசையறியாமல், எந்தப் பக்கமாகவோ
நகர்ந்துகொண்டிருந்தன.
"என்ன
இது குழப்பம்?" முணுமுணுத்தான் அவன்.
"என்னது?"
என்றாள் அவள், புருவங்களை உயர்த்தி.
"இல்ல.
மேல இருக்கிற நிலவு எது, உன்னோட முகம் எதுன்னு இந்த விண்மீன்களுக்கே குழப்பம் வந்திருக்கும்
போலிருக்கு. பாரு, நட்சத்திரங்கள்லாம் ஒரே இடத்துல இல்லாம கலகலன்னு நடுங்குதுங்க."
அவள்
செல்லமாகச் சிரித்தாள். அந்தச் சிரிப்பின் அதிர்வில் வானத்து விண்மீன்கள் இன்னும் கொஞ்சம்
பதறிச் சிதறின. "என்ன சில்மிஷம்? இன்னைக்கு ஆபீஸ் பிரசர் மூளைக்கு ரொம்ப வேலை
கொடுத்துருச்சு போல."
"அப்படியெல்லாம்
இல்லை. இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடி கவிஞர் ஒருத்தர் எழுதி வெச்சதை இப்போ வேற
லெவல்ல உணர்ந்து பார்க்கிறேன்."
"அப்படியென்னப்பா
ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடியே இன்னிக்கு லைவ்வா பீல் பண்றாப்புல எழுதி வெச்சிருக்காரு
அந்தக் கவிஞர்?"
"அது
என்னான்னா,
"மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்." (குறள், 1136)
அப்படின்னு
செம ரொமாண்டிக்கா பீல் பண்ணியிருக்கார் கவிஞர்."
"ஹேய்!
இது திருக்குறள்ப்பா!"
"சரிதான்.
உன்னோட முகமும் அந்த நிலாவும் ஒண்ணா ஒளிரும்போது, வானத்து மீன்களுக்கு எது நிலா, எது
உன் முகம்னு கண்டுபிடிக்க முடியல. அதான் திகைச்சுப் போய் நிக்குதுங்க. ரெண்டாயிரம்
வருஷத்துக்கு முன்னாடியும் அப்படித்தான் இருந்திருக்கு. இப்பயும் அப்படித்தான் இருக்கு.
சில வானவியல் உண்மைகள் மாறாது போலிருக்கு."
அவள்
அவன் கைகளைப் பிடித்துத் தன் அருகில் இருக்கையோரம் இழுத்துக் கொண்டாள். அவளது மூச்சுக்காற்று
அவனது நெஞ்சில் பட்டுத் தெறித்தது.
"அப்ப
நான்தான் நிலாவா?"
"இல்ல.
நிலா ரொம்பக் குளிர்ச்சியானது. நீ என்னோட எரிமலை."
அவள்
சட்டென்று கோபிப்பது போலப் புன்னகைத்தாள். அந்தப் புன்னகைக்கு ஒரு கிலோவாட் பவர் இருந்தது.
"ரொம்ப பில்டப் கொடுக்காதீங்க மிஸ்டர்! விண்மீன்கள் கலங்குதோ இல்லையோ, உங்க லாஜிக்கல்
பிரைன் இப்போ டோட்டலா கலங்கிப் போயிருக்குன்னு மட்டும் புரியுது."
அதே
நேரம் ஊதல் ஒலியோடு பயணியர் தொடர்வண்டி நடைமேடை எண் ஒன்றுக்கு வந்தது.
இருவரும்
ஓடிச் சென்று தொடர்வண்டியின் சன்னலோர இருக்கை ஒன்றைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தனர். அவள்
தோள் அவன் தோளில் உரசியது.
தொடர்வண்டி
மீண்டும் ஊதல் ஒலியோடு புறப்பட ஆயத்தமானது.
அவன்
இப்போது தொடர்வண்டியின் சன்னல் வழியே வெளியே பார்த்தான். வானத்து நட்சத்திரங்கள் மினுமினுத்தன.
வள்ளுவக் கவிஞர் சொன்னது போலத்தான், மேகக் கூட்டங்களுக்கு நடுவே எது நிலவு, இந்த நகரும்
ரயிலின் வெளிச்சத்தில் எது அவளது முகம் என்று தெரியாமல் அந்த விண்மீன்கள் கூடத் தங்கள்
பாதையைத் தொலைத்துவிட்டுத் திக்குமுக்காடிக்கொண்டிருந்தன.
"இப்போ
மறுபடியும் சொல்லுங்க!" அவள் அவன் காதோரம் முணுமுணுத்தாள். அவளது மூச்சுக்காற்று
அவன் கன்னத்தைத் தீண்டியது. "வானத்துல இருக்கறது யாரு?"
"நீதான்!"
என்றான் அவளது விரல்களை இன்னும் இறுக்கமாகப் பற்றியபடியே.
அவன்
விரல்களின் ரேகைகளில் அவள் கரைந்து கொண்டிருக்க, காதலின் மின்னழுத்தம் உச்சத்தைத் தொட்ட
அந்த நொடியில், காலமும் திசைகளும் நின்றுபோக, பிரபஞ்சத்தின் அத்தனை விண்மீன்களும் குழம்பித்
திணறுவதைப்போல, அவனும் அவளும் அந்தத் தொடர்வண்டியில் தங்களது காதல் தேசத்தில் தொலைந்து
போயிருந்தனர்.
தொடர்வண்டி
அந்த இரு காதலர்களையும் சுமந்தபடி இரு இணைகோட்டுத் தண்டவாளங்களுக்கு இடையே சிக்கு புக்கு
சிக்கு புக்கு என விரைந்து கொண்டிருந்தது.
வானத்து
விண்மீன்களும் தங்கள் நிலா அந்தத் தொடர்வண்டியில் ஏறி விட்டதோ என நினைத்து அந்தத் தொடர்வண்டியை
மூர்க்கமாகப் பின்தொடர ஆரம்பித்தன.
- சூத்திரங்கள் தொடரும்!
*****

No comments:
Post a Comment