ஒரு ஸ்டார்ட் அப்பின் முடிவு!
அந்த அறையில் ஏசி 16 டிகிரியில் ஓடிக் கொண்டிருந்தது. நடுவே, மேஜையின் மேல்
இரண்டு லேப்டாப்கள்.
கார்ப்பரேட் உடையில் அமர்ந்திருந்த அரவிந்த் சுப்பிரமணியம், தனது காபி கப்பை
உதட்டுக்குக் கொண்டு சென்றபடி எதிரே அமர்ந்திருந்த முனியசாமியைப் பார்த்தார்.
முனியசாமி சிவகாசி ஸ்டார்ட் அப்பின் புதுவரவு. அவரது தாத்தா அச்சுக்கூடங்களில்
ஈயம் கோர்த்தவர்; அப்பா பட்டாசு ஆலைகளில் மருந்து கலந்தவர். முனியசாமி ஒரு படி மேலே
போய், செயற்கை நுண்ணறிவு மூலம் சுயம்பாக வெடிக்கும் பட்டாசு அல்காரிதம் ஒன்றைக் கண்டுபிடித்திருந்தார்.
"பாருங்க முனியசாமி!" அரவிந்த் குரலைத் தாழ்த்தி, ஒரு குருவைப் போலப்
பேசத் தொடங்கினார். "உங்ககிட்ட ஐடியா இருக்கு. சிவகாசியோட பாரம்பரிய உழைப்பு இருக்கு.
ஆனா, முதலீட்டு ஞானம்? அது உங்ககிட்ட இல்லை. செபி பதிவு பெற்ற பண்டுகள்ல 12 லட்சம்
கோடி சும்மா சுத்திட்டு இருக்கு. ஆனா தமிழ்நாட்டுல ஒரே ஒரு யூனிகார்ன்தான் வந்துருக்கு.
ஏன் தெரியுமா?"
முனியசாமி பயபக்தியுடன் கேட்டார், "ஏன் சார்?"
"ஏன்னா, உங்களுக்கு பேலன்ஸ் ஷீட் போடத் தெரியல. ரிசர்வ் வங்கியோட எப்.டி.ஐ
வழிகாட்டுதல் தெரியல. சிலிக்கான் வேலியிலயும், சிங்கப்பூர்லயும் இருக்கிற நம்ம தமிழ்
பணக்காரங்களோட பணத்தைக் கொண்டு வரத் தெரியல! உங்களுக்கு ஒரு வழிகாட்டி தேவை!"
அரவிந்த் பேசி முடித்தபோது, முனியசாமியின் கண்களில் கண்ணீரே வந்துவிட்டது.
"சார்! நீங்கதான் என் வழிகாட்டி. நீங்க சொல்ற மாதிரி என் கம்பெனியக் கட்டமைச்சு,
செபி விதிகளுக்கு உட்பட்டு, அந்த 12 லட்சம் கோடியில ஒரு 100 கோடியை வாங்கித் தாங்க
சார்! சிவகாசியைச் சிலிக்கான் வேலியா மாத்துறேன்!" என்றார்.
அரவிந்த் சுப்பிரமணியத்துக்குக் கண்கள் வேர்த்தன.
*
அடுத்த மூன்று மாதங்கள் சூப்பர் கம்ப்யூட்டர் வேகத்தில் ஓடின.
அரவிந்த் தீவிரமாக உழைத்தார். முனியசாமியின் நிறுவனத்திற்குப் புதுப் புது ஆடிட்டர்களை
வரவழைத்தார். செபி விதிகளின்படி கணக்குகளைச் சீரமைத்தார். சிங்கப்பூர் முதலீட்டாளர்களுடன்
ஜூம் மீட்டிங் போட்டு, இந்திய ரிசர்வ் வங்கியின் சிக்கலான விதிகளை எளிமைப்படுத்திக்
காட்டி, முதலீட்டை உறுதி செய்தார். முனியசாமியை ஒரு யூனிகார்ன் நிறுவனத்தின் சி.இ.ஓவாகவே
மாற்றிவிட்டார்.
அனைத்து சட்டப்பூர்வ ஒப்பந்தங்களும் தயார். செபி அங்கீகரித்த பண்டிலிருந்து
100 கோடி ரூபாய் முனியசாமியின் ஸ்டார்ட் அப் வங்கிக் கணக்கிற்கு மாற வேண்டிய இறுதி
நாள் வந்தது.
*
அரசு அமைப்பின் குளிரூட்டப்பட்ட மாநாட்டு அரங்கில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள்,
செபி அதிகாரிகள், அரவிந்த் மற்றும் முனியசாமி அனைவரும் கூடி இருந்தனர்.
அரவிந்த் பெருமிதத்தோடு முனியசாமியைப் பார்த்துச் சொன்னார், "முனியசாமி,
அந்த டிஜிட்டல் கையெழுத்தைப் போடுங்க. தமிழகத்தின் அடுத்த யூனிகார்ன் பிறந்துருச்சு!"
முனியசாமி லேப்டாப் திரையைப் பார்த்தார். பேனா போன்ற ஸ்டைலஸைக் கையில் எடுத்தார்.
பிறகு திடீரென நிறுத்தினார்.
அறையில் அமைதி நிலவியது. "என்ன முனியசாமி, என்ன ஆச்சு?" என்றார் அரவிந்த்
பதற்றத்துடன்.
முனியசாமி நிதானமாக லேப்டாப்பை மூடினார். அரவிந்தைப் பார்த்துச் சிரித்தார்.
அந்தச் சிரிப்பில் கார்ப்பரேட் நளினம் இல்லை; முதலாளிகளின் பரம்பரைத் தந்திரம் மட்டுமே
இருந்தது.
"அரவிந்த் சார். இவ்வளவு நாள் நீங்க சொன்ன சட்ட விதிமுறைகள், செபி கைடுலைன்ஸ்,
பேலன்ஸ் ஷீட் ஸ்ட்ரக்சர் எல்லாத்தையும் ரொம்ப தெளிவா எனக்குச் சொல்லிக் கொடுத்துட்டீங்க.
ரொம்ப தேங்க்ஸ். ஆனா, இந்த 100 கோடி முதலீட்டுக்கு கையெழுத்துப் போட்டா, என் கம்பெனியோட
நாற்பது சதவீத பங்கை அந்த பண்டுக்கு எழுதித் தரணும். கரெக்ட்டா?"
"ஆமா முனியசாமி, அதான் வழக்கம்." என்றார் அரவிந்த்.
"அங்கதான் சார் நீங்க தப்புப் பண்றீங்க!" என்றார் முனியசாமி.
மடியிலிருந்த தனது பழைய டைரியை எடுத்த முனியசாமி தொடர்ந்தார், "நீங்க சொன்ன
மாதிரி நம்ம தமிழ்நாட்டுல முதலீட்டு ஞானம் கம்மிதான். ஆனா, வார்த்தைக்கு மதிப்பளிச்சு
கோடி ரூபாயைக் கடனாத் தர்ற கரூர் கைத்தறி வியாபாரிகளும், கூட்டு முதலீடு பண்ற திருப்பூர்
நெசவாளர்களும் என் சொந்த மாமா, மச்சாங்காரனுங்க சார்!"
அரவிந்த் அதிர்ச்சியில் உறைந்தார்.
"நீங்க கம்பெனியை எப்படி லீகலா கட்டமைக்கணும்னு கத்துக் கொடுத்த அந்த மூணு
மாசத்துல. என் மாமாக்கள், மச்சான்கள் 50 பேரை வச்சு ஒரு சீட்டுக்கட்டு கூட்டியே உங்களோட
செபி, கிபியை விடக் கம்மி வட்டிக்கு 100 கோடியை ரொக்கமா ரெடி பண்ணிட்டேன் சார்! கம்பெனி
பங்கையும் யாருக்கும் தரத் தேவையில்ல!"
முனியசாமி அரவிந்தின் தோளைத் தட்டினார்.
"செபி சட்டதிட்டம் தெரியாம இருந்ததுதான் சார் எங்களுக்குப் பிரச்சனை. அதைத்தான்
நீங்க சூப்பரா கத்துக் கொடுத்துட்டீங்களே! வட்டிக்கு ஆள் புடிக்கிறது எங்க பரம்பரை
ரத்தம் சார். வர்றேன்!"
முனியசாமி லேப்டாப்பைத் தூக்கிக் கொண்டு மாநாட்டு அரங்கிலிருந்து வெளியேற, அரவிந்தின்
கையிலிருந்த காபி கப் அப்படியே உறைந்து போயிருந்தது!
*****

No comments:
Post a Comment