ரிப்பர் சந்திரனும், தத்துவக் குசுமாஞ்சலியும்!
இன்று
நாம் பார்க்கப்போவது ஜெயமோகனின் ஒரு தத்துவார்த்தக் கொலைக் காவியம். பொதுவாக ஒரு சீரியல்
கில்லரைப் பற்றிப் பேசினால் க்ரைம் த்ரில்லர் பாணியில் ரத்தம், சதை, போலீஸ் சேஸிங்
என்றுதான் போவார்கள். ஆனால், ஜெயமோகனோ, ஓட்டு வீட்டின் ஓட்டை வழியாக உள்ளே புகுந்த
ஒரு கொடூரத் திருடனை, அப்படியே மெல்லத் தூக்கிச் சென்று பீகாரில் கி.பி 975 இல் பிறந்த
உதயணரின் நியாய குசுமாஞ்சலி தத்துவத்தோடு முடிச்சுப் போட்டிருக்கிறார் பாருங்கள். அங்கேதான்
அவர் நிற்கிறார்!
சந்திரனின்
கொலை பாணி ரொம்பவே நுட்பமானதாம். கழுத்துக்குப் பின்னால், முகுளத்துடன் மூளை இணையும்
புள்ளியில் கீழிருந்து மேல் நோக்கி ஒரே அடி. அடிபட்டவர் முனகக்கூட மாட்டாராம். பக்கத்தில்
தூங்குபவருக்கும் கேட்காதாம்.
அடடே,
என்ன ஒரு புரொபஷனலிசம்! இதைக் கேட்கும்போது நமக்குக் கொலைகாரன் மேல் கோபம் வரவேண்டுமா,
அல்லது அவனுடைய அனாடமி அறிவைப் பார்த்து வியந்து
மெடிக்கல் கவுன்சில் விருது கொடுக்க வேண்டுமா என்றே தெரியவில்லை.
சந்திரனுக்குப்
படிப்பறிவு இல்லை, அவனுக்கு லண்டன் ஜாக் தி ரிப்பர் பற்றித் தெரிய வாய்ப்பில்லை, ஆனாலும்
வரலாறு அவர்கள் இருவரையும் இணைத்துவிட்டது என்கிறார் ஜெமோ.
உலகத்தில்
எத்தனையோ பேர் கஷ்டப்பட்டுப் படித்து, பிஎச்.டி வாங்கி, வெளிநாடு போய் வரலாற்றுப் புத்தகங்களில்
இடம் பிடிக்கப் போராடுகிறார்கள். ஆனால், இந்தச் சந்திரன் நீலேஸ்வரத்தில் பிறந்து, கர்நாடகாவில்
திம்மையாவிடம் இன்டர்ன்ஷிப் முடித்து, இரும்புக்கம்பியைத் தூக்கிய ஒரே காரணத்திற்காகப்
பிரிட்டன் ஜாக்குடன் க்ளோபல் கொலாபரேஷன் செய்துகொண்டான் பாருங்கள். அதுதான் ரியல் திறமை!
காந்தியவாதியும்
அறிஞருமான சுகுமார் அழீக்கோடு, சந்திரனுக்குக் கருணை காட்டலாம் என்ற நல்ல எண்ணத்தோடு
சிறைக்குப் போகிறார். “நீ பெண்களைக் கொடுமைப்படுத்தினாய் அல்லவா?” என்று கேட்க, சந்திரன்
அரைக்கணம் புன்னகைக்கிறான். அவ்வளவுதான். அழீக்கோடு நடுங்கி, கைகூப்பி ஓடியே வந்துவிட்டார்.
ஒரு
சீரியல் கில்லரிடம் போய் “நீ தப்பு பண்ணினேதானே?” என்று கேட்டால், அவன் என்ன “ஆமாங்கய்யா,
தப்புதான்” என்று அழுதுகொண்டா இருப்பான்? அவன் லேசாகச் சிரித்ததற்கே நம் அறிவுஜீவி
நடுங்கி ஓடிவந்துவிட்டார் என்றால், இவர்களெல்லாம் எப்படித்தான் உலக தத்துவங்களை அலசி
ஆராய்கிறார்களோ? அந்தச் சிரிப்புக்கு பின்னால் இருந்த நெக்ரோபிலியா மேட்டரை போஸ்ட்மார்ட்டம்
ரிப்போர்ட்டைப் பார்த்துப் புரிந்துகொண்ட பிறகுதான், ஊரே விவாதிக்கத் தொடங்கியிருக்கிறது.
சிறை
அதிகாரி சொல்கிறார், “அவனுக்கு அழிவில்தான் இன்பம். ஐந்து பேரைக் கொன்றுவிட்டு ஒரு
வீட்டில் ஒன்றுமே கிடைக்காமல் திரும்பியிருக்கிறான். கொல்லாதே என்று அவனிடம் சொல்வது,
நீ மகிழ்ச்சியாக இருக்காதே என்று சொல்வது போல.”
அடப்பாவிகளா!
திருடப் போன இடத்தில் காசு, பணம் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, ஐந்து பேரைக்
கொன்ற மனநிறைவோடு திரும்பியிருக்கிறான் அந்த உத்தமன். அவனுடைய ஹேப்பினஸ்ஸில் நாம் தலையிடக்
கூடாதாம். என்ன ஒரு மனிதநேயம்!
கதை
இங்கேயே முடிந்திருந்தால் அது வெறும் க்ரைம் நியூஸ். ஆனால், ஜெமோ ஆற்றூர் ரவிவர்மாவுடன்
மாலையில் வாக்கிங் போகும்போது, “மனிதன் எப்படி இரக்கமில்லாமல் இருக்க முடியும்?” என்று
கேட்கிறார். அதற்கு ஆற்றூர், “சம்ஹார பாவம் கடவுளின் இயல்பு, அவனில் அது மட்டும்தான்
இருந்தது” என்கிறார்.
அதற்கடுத்த
சில வருடங்களில் ஜெமோ நியாய குசுமாஞ்சலி படிக்கிறார்.
அப்போது
ஜெமோவுக்குப் பல தரிசனங்கள் ஏற்படுகின்றன.
உலகில் பூகம்பம், பேரழிவு நடப்பதால்தான் கடவுள் பிரபஞ்ச
பேராற்றலாக இருப்பதாக அர்த்தமாகிறதாம்.
நாம்
மாத்திரை சாப்பிட்டு கோடிக்கணக்கான பாக்டீரியாக்களைக் கொல்வதில்லையா? புலி மானைக் கொல்வதில்லையா?
எனவே, சந்திரனுக்குள் இருந்த குரூரமும் அந்தப் பிரபஞ்ச அழிவுச் சக்தியின் ஒரு பகுதிதான்
என்று தரிசனம் காண்கிறார் ஜெமோ.
என்ன
ஒரு கனெக்சன்! காய்ச்சலுக்கு நாம் போடும் பாராசிட்டமால் மாத்திரையையும், காட்டில் மான்
வேட்டையாடும் புலியையும், நள்ளிரவில் ஏழைகளின் ஓட்டைப் பிரித்து மண்டையை உடைக்கும்
ரிப்பர் சந்திரனையும் ஒரே தராசில் வைத்து, அதற்கு சம்ஹார பாவம் என்று லேபிள் ஒட்டி,
பிரபஞ்சப் பேராற்றலின் மகா பிளான் என்று விளக்கியிருக்கிறார் பாருங்கள். அங்கேதான்
தத்துவம் நம்மைத் தலைசுற்ற வைக்கிறது!
இனிமேல்
யாராவது வீட்டில் திருட வந்தாலோ அல்லது தலையில் அடிக்க வந்தாலோ, நாம் பதற்றப்படக் கூடாது.
“அப்படியே நில்லுங்கள் சகோதரரே, நீங்கள் செய்வது பிரபஞ்சத்தின் ஆக்கவிசைக்கு எதிரான
அழிவுவிசை . நீங்கள் வெறும் கரும்பாறை, எல்லாப் பக்கமும் மூடியிருப்பவர். உங்கள் மகிழ்ச்சியைக்
கெடுக்க நான் விரும்பவில்லை. அடித்துவிட்டுப் போங்கள்!” என்று தத்துவார்த்தமாகச் சரணடைந்துவிட
வேண்டும் போல!
கடைசியாக
அந்தச் சிறை அதிகாரி சந்திரனிடம் பேசிவிட்டு, ஏதோ இருட்டு தெய்வத்தைப் பார்த்தது போல
நடுங்கிக்கொண்டே நேராகக் கோயிலுக்குப் போய் கும்பிட்டுவிட்டுத் தூங்கப் போனாராம்.
நாமும்
இந்த அத்தியாயத்தைப் படித்துவிட்டு, “ஒரு சீரியல் கில்லரின் கொடூர புன்னகைக்குள்ளும்,
பிணத்துடன் உடலுறவு கொள்ளும் வக்கிரத்துக்குள்ளும் இப்படியொரு வேதாந்த தத்துவ தரிசனம்
ஒளிந்திருக்கிறதா?” என்று வியந்து, நேராகக் கணினியை மூடிவிட்டு கடவுளே, என்னை இந்தத்
தத்துவவாதிகளிடமிருந்து காப்பாற்று என்று கும்பிட வேண்டியதுதான்!
*****

No comments:
Post a Comment