18 டோக்கன்களும் 3 முட்டை மண்டைகளும்!
மனிதகுலம்
எத்தனையோ நோய்களைக் கண்டு அஞ்சியிருக்கிறது. ஆனால், தலைமுடி வழியாக ஒரு புதிய வினோத
நோய் பரவுகிறது என்றும், அதற்குத் தடுப்பூசியை விடத் துரிதமான தீர்வு மொட்டை என்றும்
கேள்விப்பட்டபோது, நமது சமூகத்தின் அறிவார்ந்த அஸ்திவாரம் எந்த அளவுக்குப் பலமாக இருக்கிறது
என்பது மீண்டும் ஒருமுறை உலகிற்கு நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
சேலம்
மாவட்டம் ஆத்தூரில் அரங்கேறியிருக்கும் இந்தச் சம்பவம், மனித நம்பிக்கையின் உச்சத்தையும்,
அதே நேரத்தில் இலவச அரசு உதவித்தொகை என்ற வார்த்தைக்குத் தமிழ்நாட்டில் இருக்கும் தெய்வீகச்
சக்தியையும் படம் பிடித்துக் காட்டுகிறது.
சம்பவம்
என்ன என்கிறீர்களா?
அரியலூரைச்
சேர்ந்த சதீஷ்குமார் என்ற 39 வயது வாலிபருக்கு இன்ஸ்டாகிராம் பார்த்துப் பார்த்துப்
சலிப்பு தட்டியிருக்கிறது. உடனே, யாரையாவது ஏமாற்றி விளையாடலாம் என்ற மேன்மையான எண்ணத்துடன்
தற்செயலாகச் சில எண்களை அழுத்தவே, அது ஆத்தூரில் உள்ள ஒரு பெண்ணுக்குச் சென்றிருக்கிறது.
விளையாட்டு
நபர் வீசிய தூண்டில் சாதாரணமானதல்ல. அவர் பேசியது இதுதான், "கொரோனா போல தலைமுடி
வழியா நோய் பரவுதுங்க. வெளிநாட்டுல எல்லாரும் மொட்டை அடிச்சிக்கிறாங்க. நம்ம அரசாங்கமும்
நோயைத் தடுக்க மொட்டை அடிக்கிற பெண்களுக்கு 15,000 ரூபாய், கல்லூரி மாணவிகளுக்கு
45,000 ரூபாய் தருது. உங்க ஏரியாவுக்கு மொத்தம் 18 டோக்கன்தான் இருக்கு!"
இங்கே
கவனிக்க வேண்டியது அந்த 18 டோக்கன் என்கிற மார்க்கெட்டிங் தந்திரம்தான். விலைமதிப்பற்ற
எதுவுமே கைநழுவி விடக்கூடாது என்ற மனித மனத்தின் பதற்றத்தை அந்த நபர் மிகச்சரியாகப்
பயன்படுத்தியிருக்கிறார். அதோடு, வாட்ஸ் அப்பில் 500 ரூபாய் கட்டுக்களின் படத்தையும்,
யாரோ மொட்டை அடித்த படத்தையும் அனுப்பியவுடன், அறிவியல் ஆய்வுகளையெல்லாம் தூக்கிச்
சாப்பிட்டுவிட்டது அந்தத் தாள்களின் ஒளி.
அறிவியல்
ரீதியாக இது சாத்தியமா? மருத்துவத்துறை என்ன சொல்கிறது? என்றெல்லாம் சிந்திக்க நேரமேது?
பதினைந்தாயிரம்
ரூபாய் கைநழுவிப்போய்விடுமே என்ற பதற்றத்தில், சித்ரா, ராமாயி, காவேரி ஆகிய மூன்று
பாட்டிகளும் சலூன் கடைக்கு விரைந்து, தங்கள் கூந்தலைத் தியாகம் செய்து தாரைவார்த்துக்
கொடுத்துவிட்டனர்.
காரியம்
முடிந்தது.
அடுத்தது
என்ன?
பணம்
வாங்க வேண்டியதுதானே!
அந்த
மூன்று முட்டை மண்டைகளும் ஆத்தூர் தாலுகா அலுவலகத்திற்குச் சென்ற போதே அந்த மகா உண்மை
வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
அங்கே
இருந்த அதிகாரிகளுக்குத் தலைசுற்றியிருக்கும்.
"அரசாங்கம்
மொட்டை அடிக்கப் பணம் தருகிறதா? அதுவும் 15,000 ரூபாயா?" என்று அவர்கள் திகைத்துப்
போய் நிற்க, "டோக்கன் 18 இல் நாங்களும் ஒருத்தருங்க!" என்று இந்த பாட்டிகள்
நின்ற காட்சியை நினைத்துப் பார்த்தால், நம் நாட்டின் நிர்வாக அமைப்புக்கே ஒரு புதிய
அத்தியாயம் எழுதத் தோன்றும்.
ஒருவேளை
அரசாங்கம் உண்மையில் இப்படி ஒரு திட்டத்தை அறிவித்திருந்தால் கூட, இவ்வளவு வேகமாக மக்கள்
பயன்பெற்றிருப்பார்களா என்பது சந்தேகமே!
இன்ஸ்டாகிராம்
ரீல்ஸ் பார்த்து அலுத்துப்போய், சும்மா டயல் செய்து ஓர் ஊரையே மொட்டை அடிக்க வைத்த
அந்தச் சதீஷ்குமாரை காவல்துறை கைது செய்துவிட்டது. "சும்மா விளையாட்டா பேசுனேங்க"
என்று அவர் கொடுத்த வாக்குமூலம், இன்றைய டிஜிட்டல் யுகத்தின் மிகப்பெரிய விபரீதத்தைச்
சிரிப்போடு வெளிப்படுத்துகிறது.
தொழில்நுட்பம்
வளர்ந்துவிட்டது, செல்போனில் உலகமே கைமுட்டியில் இருக்கிறது. ஆனால், "தலைமுடியில்
நோய் வருது, மொட்டை அடிச்சா 15,000 ரூபாய்" என்ற ஒரே ஒரு போன்கால், பல தசாப்த
கால மனித அனுபவத்தையும், பகுத்தறிவையும் சலூன் கடை வாசல் வரை மிக எளிதாக அழைத்துச்
சென்று விடுகிறது.
இனியாவது
மக்கள் உணர வேண்டும். இலவசமாக அரசாங்கம் தரும் எதையும் நம்பலாம், ஆனால் தலைமுடியைக்
கொடுத்துவிட்டு தாலுகா அலுவலகத்தில் காசு வாங்கலாம் என்று சொல்வதை மட்டும் நம்பவே கூடாது.
போன
முடி திரும்ப வந்துவிடும்; ஆனால் அந்த 15,000 ரூபாய் ஆசையில் போன தலைமுடி? அது ஒரு
காலத்தின் வரலாற்றுச் சுவடு!
*****

No comments:
Post a Comment