23 Mar 2026

கேக், சிப் மற்றும் எலக்ட்ரான் யுத்தம்!

கேக், சிப் மற்றும் எலக்ட்ரான் யுத்தம்!

என்விடியா பாஸ் ஜென்சன் ஹுவாங் ஒரு தத்துவம் சொல்கிறார், ஏஐ என்பது ஒரு கேக் மாதிரி.

மேலே இருக்கும் க்ரீம் சாட்பாட்கள். நடுவில் இருக்கும் பிரட் எல்.எல்.எம் சாஃப்ட்வேர். அடியில் இருக்கும் பேஸ் செமிகண்டக்டர் சிப்ஸ். ஆனால், இந்த கேக் வேக வைக்க ஒரு அடுப்பு வேண்டுமே? அதுதான் எனர்ஜி.

சீனா இப்போது இந்த ஏஐ கேக்கைப் பேக் பண்ணுவதில் செம பிஸியாக இருக்கிறது. டிக்டாக்காரர்கள் ஒரு வீடியோ ஆப் வைத்திருக்கிறார்கள். ஹுவாய் ஒரு புதிய சிப்பை இறக்குகிறது. ஆனாலும், அமெரிக்காவை முந்த ஒரு ரகசிய ஆயுதத்தை சீனா கையில் எடுத்திருக்கிறது. அதன் பெயர் எலெக்ட்ரான் கேப்.

ஏஐ மாடல்களுக்குப் பசி அதிகம். அவை ட்ரில்லியன் கணக்கில் கணக்குப் போட மின்சாரம் ரத்தம் மாதிரி தேவை. அமெரிக்காவின் கிரிட் பழைய பஞ்சாங்கம். அங்கே ஒரு டேட்டா சென்டர் ஆரம்பிக்க மின்சார கனெக்ஷனுக்குப் பின்னால் வரிசையில் நிற்க வேண்டும்.

ஆனால் சீனா?

கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 500 ஜிகாவாட் சேர்த்திருக்கிறார்கள். இது அமெரிக்காவின் மொத்தத் திறனை விட இரண்டு மடங்கு.

சீனாவில் ஒரு யூனிட் மின்சாரம் சுமார் 3 சென்ட்தான். அமெரிக்காவில் இது டபுள்.

அமெரிக்காவில் டேட்டா சென்டர் கட்டினால், எங்கள் வீட்டு மின்சார விலை ஏறிவிடும் என்று மக்கள் கொடி பிடிப்பார்கள். சீனாவில் அந்தப் பேச்சிற்கே இடமில்லை.

சாம் ஆல்ட்மேன் முதல் எலான் மஸ்க் வரை எல்லோருக்கும் இப்போது பயம் வந்துவிட்டது. சிப் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, மின்சாரம் இருந்தால் சீனா ஜெயித்துவிடும் என்று முணுமுணுக்கிறார்கள்.

ஷான்சி மாகாணத்தில் யங்காஓ என்று ஒரு தூசி படிந்த ஊர். அங்கே ஒரு பழைய பன்றிப் பண்ணையை இடித்துவிட்டுப் பிரம்மாண்டமான டேட்டா சென்டர் கட்டியிருக்கிறார்கள்.

சுற்றிலும் விண்ட் மில், சோலார் பேனல்கள், நிலக்கரி மின் நிலையம் எனப் பவர் சப்ளை தாராளம். ஆனால் ஒரு சின்னப் பிரச்சனை. அமெரிக்காவின் தடையால் அங்கே அதிநவீன சிப்கள் இல்லை. அங்கிருக்கும் மேனேஜர் புலம்புகிறார், எங்களிடம் இருக்கும் சிப்களில் 0.1 சதவீதம் கூட ஏஐ ட்ரெய்னிங் செய்ய லாயக்கில்லை என்று.

சீனா சளைக்கவில்லை. அதிநவீன சிப் இல்லையென்றால் என்ன? சாதாரண சிப்களை நிறைய அடுக்கி வைத்து வேலை வாங்குவோம் என்கிறார்கள். இதற்கு மின்சாரம் அதிகம் செலவாகும். ஆனால் சீனாவில்தான் மின்சாரம் மலிவாச்சே!

ஹுவாய் நிறுவனம் இப்போது 7 நேனோமீட்டர் சிப்களைத் தயாரிக்கத் தொடங்கிவிட்டது. இது அமெரிக்க சிப்களை விட வேகம் கம்மியாக இருந்தாலும், எண்ணிக்கையை அதிகப்படியாக வைத்து அடித்து நொறுக்கப் போகிறார்கள். 2028க்குள் நாடு முழுக்க இருக்கும் டேட்டா சென்டர்களை ஒரே நெட்வொர்க்கில் இணைக்கப் போகிறது சீனா.

சீனாவின் இப்போதைய டார்கெட் என்னவென்றால், ஆர்ட்டிபீசியல் ஜெனரல் இன்டெலிஜன்ஸ். அதாவது மனிதனை விட அதிக அறிவுள்ள மெஷின். இதற்குப் பிரம்மாண்டமான மின்சாரம் தேவைப்படும்.

சீனாவின் புதிய ஐந்தாண்டுத் திட்டத்தில் இதைப் பற்றித் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். நாங்கள் எதையும் கண்டுபிடிக்க வேண்டாம், தொடர்ந்து கட்டிக்கொண்டே இருந்தால் போதும், என்கிறார் ஒரு சீன அறிஞர்.

அமெரிக்காவிடம் புத்திசாலித்தனமான சிப்கள் இருக்கலாம். ஆனால் சீனாவிடம் அந்த சிப்களை ஓட்டத் தேவையான எலக்ட்ரான் மலை போல இருக்கிறது. இறுதியில் இந்த கேக் யாருக்குச் சொந்தம் என்பது மின்சார பில்லில்தான் இருக்கிறது!

என்ன நடக்கப் போகிறது? அமெரிக்காவா? சீனாவா? வெயிட் அன்ட் வாட்ச்.

*****

No comments:

Post a Comment