24 Mar 2026

அப்டேட் ஆகாத கனவுகளும், ஹேங் ஆகும் வாழ்க்கையும்!

அப்டேட் ஆகாத கனவுகளும், ஹேங் ஆகும் வாழ்க்கையும்!

இருபதிலிருந்து இருபத்தைந்து வயதுள்ள பெண் என்றால், கையில் ஒரு ஸ்மார்ட்ஃபோன், உள்ளுக்குள் ஒரு தீராத பதற்றம். இதுதான் இன்றைய ஜென் இசட்  பெண்களின் லேட்டஸ்ட் ஸ்டேட்டஸ்.

இவர்களைக் கட்டாயப்படுத்தித் தெரபிக்கு கூட்டிட்டுப் போக முடியாது. தப்பான முடிவுகள் எடுக்காதே என்று தடுத்து நிறுத்தவும் முடியாது.

இந்த ஜென் இசட் பெண்களுக்கு, அவர்களின் தோழிகள் என்ன பிராண்ட் லிப்ஸ்டிக் பயன்படுத்துகிறார்கள் என்பதை விட, எந்த ஆன்டி டிப்ரஸன்ட் மாத்திரை வேலை செய்கிறது என்பதுதான் அத்துப்படியாக இருக்கிறது.

ஜென் இசட் பெண்களுக்கு வாழ்க்கை என்பது ஒரு கிரிட்டிக்கலான பக் நிறைந்த சாஃப்ட்வேர் போல ஆகிவிட்டது.

இது குறித்த புள்ளிவிவரங்கள் கொஞ்சம் பீதியைக் கிளப்புகின்றன.

எங்காவது ஓடிவிடலாமா என்று யோசிக்கும் ஆண்களின் எண்ணிக்கை 19%. பெண்களோ 40%.

எப்போதும் ஒரு பயத்திலேயே இருக்கிறேன் என்று சொல்லும் ஆண்கள் 19%. பெண்களோ 33%.

முன்பெல்லாம் டிவியில் செய்தி பார்ப்பார்கள். இப்போது செய்தி இவர்களைத் துரத்துகிறது. இன்ஸ்டாகிராம், டிக்டாக் என எங்கு திரும்பினாலும் நெகட்டிவ் தகவல்கள். கூடவே, பக்கத்து வீட்டுப் பெண் காபி டேயில் காபி குடிப்பதைப் பார்த்து வரும் தாழ்வு மனப்பான்மை இந்த ஜென் இசட் பெண்களுக்கு அதிகமாக இருக்கிறது.

அட்டென்ஷன்தான் இன்னைக்கு கரன்சி, மற்றவர்கள் கவனத்தை ஈர்க்க எதை வேண்டுமானாலும் இழக்க தயாராக இருப்பதாகச் சொல்கிறார் இந்த ஜென் இசட் பெண்கள்.

பழைய தலைமுறைப் பெண்கள் நாங்கள் எல்லாம் அப்போது அப்படி இருந்தோம் என்று அட்வைஸ் செய்யலாம். ஆனால், இன்றைய சூழல் வேறு.

இந்த ஜென் இசட் தலைமுறையில் டிகிரி வாங்கிய பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகம். ஆனால், கையில் இருக்கும் கல்விக்கடன் மலைபோல இருக்கிறது.

ஜென் இசட் பெண்களின் கையில் மாஸ்டர் டிகிரி என்பது சர்வ சாதாரணம். ஆனால், அதுக்கு மேல் எக்கச்சக்கமான லோன். அதனால் கைக்கு வர்ற சம்பளம், ஒரு வார மளிகைச் சாமானுக்கே மூச்சு வாங்குகிறது அவர்களுக்கு.

அதாகப்பட்டது, சம்பளம் என்னவோ டவுன் பஸ் ரேஞ்சில் இருக்கிறது. ஆனால், மளிகைச் சாமான்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது.

ஜென் இசட் பெண்களில் முப்பது சதவீதத்துக்கு மேல் ஐம்பதாயிரம், லட்சம் போன்ற சம்பளங்களை அநாயசமாக வாங்குகிறார்கள். ஆனால் சொந்த வீட்டில் இருப்பவர்கள் 25 சதவீதம் கூட இருக்காது. பாவம், மீதி பேர் எல்லாம் வாடகை வீட்டில் அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு சம்பாதிப்பவர்களே வீடு வாங்க முடியவில்லை என்றால், மற்ற எழுபது சதவீத ஜென் இசட் பெண்களின் நிலைமை?

அடுத்து செயற்கை நுண்ணறிவு எனும் ஏஐ இவர்களின் பல வேலைகளைக் காலி பண்ணிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு சின்ன ஆறுதல். பெண்கள் அதிகம் இருக்கும் ஹெல்த்கேர், டீச்சிங் போன்ற வேலைகளை ஏஐயால் அவ்வளவு சீக்கிரம் அவுட் பண்ண முடியவில்லை.

இன்றைய டேட்டிங் கலாச்சாரம் ஒரு குப்பைத் தொட்டி என்கிறார்கள். ஒருவரைப் பிடிப்பதும், உடனே எக்ஸ்பெண்டபிள் எனத் தூக்கிப் போடுவதும் சாதாரணமாகிவிட்டது இந்த ஜென் இசட் தலைமுறையில்.

இதன் விளைவு? ஒரு குழந்தையோடு போதும் என்று இந்த ஜென் இசட் இளம் தாய்மார்கள் முடிவெடுக்கிறார்கள். இரண்டாவது குழந்தைக்கு இங்கே இடமும் இல்லை, பட்ஜெட்டும் இல்லை.

பதற்றம், நிச்சயமற்ற எதிர்காலம், விலைவாசி உயர்வு இதற்கிடையில் எப்படியாவது பிழைத்துக் கொள்ளப் போராடும் ஒரு தலைமுறைதான் இன்றைய ஜென் இசட் பெண்கள். அவர்கள் சோம்பேறிகள் அல்ல, ஓடிக்கொண்டிருக்கும் ரயிலில் இருந்து கீழே விழாமல் இருக்க கம்பியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பவர்கள்.

நாங்கள் வெறுமனே உயிர் வாழத்தான் முயற்சி செய்றோம். ப்ளீஸ், எங்களை வாழ விடுங்களேன் என்பதுதான் ஒட்டுமொத்த ஜென் இசட் பெண்களின் மைண்ட் வாய்ஸ் ஆக மாறிக் கொண்டிருக்கிறது.

இவ்வளவு குழப்பம், பயம் இருந்தாலும், வாழ்க்கை பயங்கரமாகப் போனாலும், அதை ஒரு சின்ன நையாண்டியோடு, ஒரு மீம் போட்டு சிரித்துக் கொண்டே கடந்து போவதுதான் ஜென் இசட் பெண்களின் ஸ்பெஷாலிட்டி. சிரிக்கவில்லை என்றால் இந்த உலகம் தாங்காதுதானே!

*****

No comments:

Post a Comment