25 Mar 2026

ஓவர்லோட் – உங்கள் பலவீனம் அல்ல, பஃபரிங்!

ஓவர்லோட் – உங்கள் பலவீனம் அல்ல, பஃபரிங்!

வாழ்க்கை என்பது ஒரு மென்பொருள் என்றால், இந்த எமோஷனல் ஓவர்வெல்ம் என்பது அதில் வரும் ஒரு பக் கிடையாது, அது சிஸ்டம் ஓவர் ஹீட் ஆகிவிட்டது என்பதைக் காட்டும் ஒரு வார்னிங் மெசேஜ்.

நம்மில் பலரும் நினைப்பது போல, மன அழுத்தம் என்பது எடுத்தவுடனேயே கதறி அழுவதோ அல்லது தலையைப் பிய்த்துக் கொள்வதோ அல்ல. சில சமயம் அது ரொம்பவும் சைலண்ட்.

காலையில் எழுந்திருக்கும் போதே, ஒரு நீண்ட தூக்கத்திற்குப் பிறகும் உடம்பு டயர்டாக இருந்தால், சின்னச் சின்ன விஷயங்களை அதாவது, சாவியை எங்கே வைத்தோம் என்பது போன்றவற்றை அடிக்கடி மறந்தால், பதில் வராத ஒரு வாட்ஸ்அப் மெசேஜுக்காக அல்லது சிங்க்கில் கிடக்கும் பாத்திரங்களுக்காக அழுகை முட்டினால், இன்னும் ஒரே ஒரு பிரச்சனை வந்தால் கூட தாங்க மாட்டேன் என்கிற ஒரு மெல்லிய பயம் அடிமனதில் ஓடினால் உங்களுக்கு ஓவர்வெல்ம் ஆகிவிட்டது என்று அர்த்தம். இது கத்தி கூச்சல் போடாது. அடியில் கசிந்து கொண்டிருக்கும் குழாய் போல மெல்ல மெல்ல உங்களைக் காலி செய்யும்.

இங்கே இப்போது என்ன நடக்கிறது என்றால், நீங்கள் புல் ஆகிவிட்டீர்கள். ஒரு பென் டிரைவில் 64 ஜிபி தான் இடம் இருக்கிறது என்றால், அதில் 65 ஆவது ஜிபியை ஏற்ற முடியாது. அது எர்ரர் காட்டும். உங்கள் மனமும் அப்படித்தான்.

உணர்ச்சிகளைக் கையாள்வது எப்படி என்று நமக்கு யாரும் ஸ்கூலில் சொல்லித் தரவில்லை. அதைப் பகிர்ந்து கொள்ள இடமும் இல்லை. விளைவு? எல்லாம் உள்ளேயே தேங்கி, அழுத்தம் அதிகமாகி, ஒரு கட்டத்தில் ப்ரிண்டர் ஜாம் ஆவது போல உங்கள் சிஸ்டம் ஜாம் ஆகிறது.

 ஏன் இதைப் புரிந்துகொள்வது கஷ்டம் என்றால், இது ஒரு மூவிங் டார்கெட்.

ஒரு நாள் படபடப்பாக இருக்கும். அடுத்த நாள் ஒன்றுமே ஓடாதது போல இருக்கும். உங்கள் தோள்பட்டை, வயிறு, தூக்கம் என எல்லா இடத்திலும் இது ஒளிந்து கொண்டிருக்கும். எந்த ஒரு புரொடக்டிவிட்டி ஆப்போ அல்லது செக் லிஸ்ட்டோ இதைச் சரி செய்யாது. இது டெக்னிக்கல் பிரச்சனை அல்ல, பயாலஜிக்கல் பிரச்சனை!

ஓவர்லோட் என்பது உங்கள் மூளையின் ஷார்ட் சர்க்யூட்!

நம் ஊர் டிராஃபிக்கில் சிக்கிக் கொண்டால் ஹார்ன் சத்தம் எப்படி நம் பிபியை ஏற்றுகிறதோ, அப்படித்தான் இந்த எமோஷனல் ஓவர்லோட்.

மற்றவர்கள் எல்லாம் நன்றாகத்தானே இருக்கிறார்கள், எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆகிறது? நான் என்ன அவ்வளவு வீக்கா? என்றெல்லாம் நீங்கள் நினைக்கலாம்.

நிஜத்தைச் சொல்லப்போனால், இது உங்கள் கேரக்டர் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை, இது உங்கள் உடலில் இருக்கும் ஹார்டுவேர் சம்பந்தப்பட்ட கோளாறு.

உங்கள் மண்டைக்குள் அமிக்டலா என்று ஒரு குட்டி பீன்ஸ் வடிவ உருவம் இருக்கிறது. அதுதான் உங்கள் உடம்பின் அலாரம் சிஸ்டம்.

ஆதிகாலத்தில் மனிதன் காட்டில் இருந்தபோது, தூரத்தில் புலி உறுமினால் இவன் ஓட வேண்டுமா அல்லது சண்டை போட வேண்டுமா என்று முடிவு செய்வது இந்த அமிக்டலாதான். ஆபத்து வந்ததும் இது சிக்னல் கொடுக்கும். ரத்த அழுத்தம் ஏறும், இதயம் டக் டக் என அடிக்கும், தசைகள் இறுகும். எல்லாம் ரெடி என கிரீன் சிக்னல் கொடுக்கும்!

ஆனால், இன்று புலி வருவது கிடையாது. அதற்கு பதில், திறந்தாலே தலைவலி தரும் 200 அன்ரீட் ஈமெயில்கள், வாட்ஸ்அப்பில் வரும் அந்த ஒரு ரிப்போர்ட் எங்கே? மெசேஜ், நாம பேசணும் என்று காதலியோ, மனைவியோ சொல்லும் அந்த ஒற்றை வரி போன்றவை புலி போல ஆகி விட்டன.

உங்க அமிக்டலா பாவம், ரொம்ப அப்பாவி. ஈமெயிலுக்கும் புலிக்கும் அதற்கு வித்தியாசம் தெரியாது. ஆபத்து என்று தெரிந்தாலே உடனே அலாரத்தை அடித்து விடும்.

தொடர்ந்து இப்படி அலாரம் அடித்துக்கொண்டே இருந்தால், உங்கள் உடல் ரெஸ்ட் மோடுக்கு போகவே மறந்து விடும். உங்கள் மனதின் பேண்ட்விட்த் மெல்ல மெல்ல குறைய ஆரம்பிக்கும்.

ஒரு கட்டத்தில், மிகச்சிறிய விஷயம் கூட உங்கள் சிஸ்டத்தை ஹேங் செய்துவிடும். இது உங்கள் தோல்வி அல்ல, உங்கள் நரம்பு மண்டலம்  தம்பி, கொஞ்சம் ஓரம் போய் நில், எனக்கு மூச்சு முட்டுகிறது என்று போடும் சிக்னல்.

இந்த விசயத்தில், உங்களை நீங்களே குறைபட்டுக் கொள்வதை நிறுத்துங்கள். உங்கள் சிஸ்டம் ஓவர்-ஹீட் ஆகியிருக்கிறது. அவ்வளவுதான். கொஞ்சம் கூலண்ட் ஊற்றி, ரீபூட்  செய்தால் எல்லாம் சரியாகிவிடும்.

உணர்ச்சிவசப்படுவது ஓர் உயிரியல் செயல்முறை என்பதைப் புரிந்து கொள்வதுதான் இதற்கான தீர்வுக்கான முதல் படி.

உங்களை ஒரு நிரம்பி விட்ட வாளியாக நினைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு டென்ஷனும், ஒவ்வொரு பொறுப்பும், ஒவ்வொரு ஈமெயிலும் அந்த வாளியில் விழும் ஒரு சொட்டுத் தண்ணீர்.

வாளியில் தண்ணீர் விழ விழ, அதை வெளியேற்ற ஒரு அவுட்லெட் குழாய் வேண்டும். அதாவது, தூக்கம், கொஞ்சம் அமைதி, பிடித்தமான ஒரு பாட்டு, அல்லது யாரிடமாவது மனம் விட்டுப் பேசுவது.

இந்த அவுட்லெட் குழாய் அடைபட்டு, தண்ணீர் மட்டும் விழுந்து கொண்டே இருந்தால் என்ன ஆகும்? வாளி வழியும். அதைத்தான் நாம் ஸ்ட்ரெஸ் என்கிறோம். ஆக, நீங்கள் சென்சிட்டிவ் ஆள் எல்லாம் கிடையாது, உங்கள் வாளிக்கு ஏற்ற அவுட்லெட் இல்லை, அவ்வளவுதான்!

இப்போது உங்களுக்கு விசயம் புரிந்து விட்டதா? அவ்வபோது சின்ன சின்ன ரெஸ்ட் மற்றும் உங்களுக்கே உங்களுக்குப் பிடித்த சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் பிராப்ளம் சால்வ்டு.

*****

No comments:

Post a Comment