24 Mar 2026

இரண்டு போர்கள், ஒரு க்ளைமாக்ஸ்!

இரண்டு போர்கள், ஒரு க்ளைமாக்ஸ்!

மத்திய கிழக்கில் நடப்பது ஒரு போர் என்று நினைத்தால் அது தவறு. அங்கே இணைகோடுகளாக இரண்டு போர்கள் நடக்கின்றன.

ஒன்று, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நவீன விமானங்கள் ஈரானின் தலையில் போடும் குண்டுகள்.

இரண்டு, ஈரான் உலகப் பொருளாதாரத்தின் கழுத்தைப் பிடித்து நெரிக்கும் எனர்ஜி வார்.

இந்த இரண்டுமே ஒரு பக்கச் சார்புடையவை. அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்களை ஈரானால் தடுக்க முடியவில்லை. அதே சமயம், ஈரான் மூடி வைத்திருக்கும் அந்த 54 கிலோமீட்டர் அகலமுள்ள ஹோர்முஸ் நீர்ச்சந்தியை திறக்க அமெரிக்காவால் முடியவில்லை.

ஈரானின் லாஜிக் சிம்பிள், நீ என் மீது குண்டு போட்டால், நான் உலகத்தின் பெட்ரோல் டேங்க்கை உடைப்பேன். வலி தாங்க முடியாமல் நீயே போரை நிறுத்துவாய்.

ஆனால், டொனால்ட் டிரம்ப் கணக்கு வேறு மாதிரி இருக்கிறது. ஹோர்முஸ் நீர்ச்சந்தி திறக்கப்படும் வரை போரை நிறுத்த அவர் தயாராக இல்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், ஆரம்பத்தில் ஈரானைப் பார்த்து பயந்த வளைகுடா நாடுகள், இப்போது டிரம்புடன் கைகோர்த்து நிற்கின்றன. இப்படியே விட்டால் இவன் வாழ்நாள் முழுக்க மிரட்டுவான், அடித்து ஒழித்துவிடுங்கள் என்பதுதான் அவர்களின் தற்போதைய மைண்ட் வாய்ஸ்.

பென்டகன் கணக்குப்படி 7,000 தாக்குதல்கள் ஈரானில் நடந்துவிட்டன. இஸ்ரேல் ஒரு படி மேலே போய், ஈரானின் முக்கியப் புள்ளிகளை ஸ்கெட்ச் போட்டுத் தூக்குகிறது.

ஈரானின் கப்பல்கள் பல இப்போது கடலுக்கு அடியில் மீன்களுக்கு வீடாக மாறியிருக்கின்றன. ஆனாலும் ஈரான் விடுவதாக இல்லை. ஜலசந்தியைச் சுற்றி கண்ணிவெடிகளையும், ட்ரோன்களையும் ஏவி ஒரு வெர்ச்சுவல் பூட்டைப் போட்டிருக்கிறது.

1988களில் டிரம்ப் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார், நான் அதிபரானால் கார்க் தீவை ஒரு கை பார்ப்பேன்.

கார்க் தீவு என்பது ஈரானின் 90 சதவீத எண்ணெய் ஏற்றுமதி நடக்கும் ஒரு பாறைத் திட்டு. இப்போது மார்ச் 13 இல் அங்கே குண்டு மழை பொழிந்துவிட்டார். அடுத்து அந்தத் தீவை ஆக்கிரமிக்கவும் திட்டம் இருக்கலாம். வளைகுடா நாடுகள் எண்ணெய் விற்க முடியாவிட்டால், ஈரானும் விற்கக்கூடாது, இதுதான் டிரம்பின் ஈக்விட்டி.

ஈரான் இப்போது தன் வியூகத்தை மாற்றியிருக்கிறது. கப்பல்களைத் தாக்குவதை விட, சவுதி அரேபியா மற்றும் துபாயின் எண்ணெய் வயல்களையும், சுத்திகரிப்பு நிலையங்களையும் நேரடியாகத் தாக்குகிறது. இதனால் பெட்ரோல் விலை எகிறுகிறது. கூடவே செமிகண்டக்டர் தயாரிக்கத் தேவையான ஹீலியம் வாயுவின் விலையும் ராக்கெட் வேகத்தில் உயர்கிறது.

துபாய் ஏர்போர்ட்டில் ஈரான் ட்ரோனின் சிதறல்கள் விழுந்ததில் விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன. ஹோட்டல்கள் காலியாக கிடக்கின்றன. ரமலான் முடிந்த கையோடு பிசினஸ் களைகட்டும் என்று நினைத்த வளைகுடா நாடுகளுக்கு இது பேரிடி.

ஈரான் இப்போது ஒரு மாப் பாஸ் போலப் பேசுகிறது. அமெரிக்கா எல்லா பேஸ்களையும் காலி செய்ய வேண்டும், போர் நஷ்ட ஈடாக எங்களுக்கு முதலீடு செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறது.

டிரம்பின் நிஜமான நோக்கம் என்ன? ஈரானின் ஆட்சியைத் தூக்குவதா? அல்லது ஒரு டீல் போடுவதா? யாருக்கும் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்:

ஈரான் எப்போது உலகத்தின் எரிசக்தி மீது கை வைத்ததோ, அப்போதே அதன் எதிரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்துவிட்டார்கள். இவனை முழுமையாக முடக்காமல் போர் முடியாது என்கிற ஒற்றைப் புள்ளியில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் இப்போது கைகோர்த்து நிற்கின்றன.

ஆட்டம் இன்னும் சூடுபிடிக்கும் போலிருக்கிறது. எந்தப் பக்கம் என்ன நடக்கும் என்பது வழக்கம் போலவே எதிர்காலத்திற்கு மட்டுமே தெரிந்த விடுகதை.

*****

No comments:

Post a Comment