வயிற்றில் இடமில்லாதவர்கள்
எப்போதாவது வருகிறார்கள்
டீ குடி என்றால் வேண்டாம்
என்கிறார்கள்
காபியும் வேண்டாமாம்
பூஸ்ட் ஹார்லிக்ஸ் எதுவும்
வேண்டாமாம்
பழச்சாறும் வேண்டாமாம்
வயிற்றிலே சுத்தமாக இடமில்லை
என்கிறார்கள்
தொப்பை வயிற்றைப் பிதுக்கிக்
காட்டியபடி
கொஞ்சம் தண்ணீர் குடியுங்கள்
என்றால்
மினரல் வாட்டரா என்கிறார்கள்
கார்ப்பரேஷன் வாட்டர் என்றால்
டீயே பரவாயில்லை போட்டுக்
கொடுங்கள் என்கிறார்கள்
வெறும் டீயை எப்படிக் கொடுப்பது
ரெண்டு பிஸ்கட் பனிரெண்டு
கிராம் மிக்சரில்
பிஸ்கட்டைக் கொஞ்சம் உடைத்து
வாயில் போட்டுக் கொள்கிறார்கள்
அரை கிராம் மிக்சரை மெல்லுகிறார்கள்
இப்போது எப்படியோ வயிற்றில்
இடம் வந்து விடுகிறது
டீயை வயிற்றில் ஊற்றிக் கொள்கிறார்கள்
விஷேஷத்துக்கு அவசியம் வந்திடணும்
அதுவும் நாலு நாளைக்கு முன்பே
என்கிறார்கள்
ஓக்கே கிளம்புங்கள் அங்கிள்
ஆன்ட்டி என்கிறார்கள்
அதற்கு மேல் பொறுக்க முடியாமல்
பாவம் பிள்ளைகள்
பூஸ்டும் ஹார்லிக்சும் பறிகொடுத்து
மிச்சம் வைத்திருக்கும் பட்சணங்களை
எவ்வளவு நேரம்தான் பார்த்துக்
கொண்டிருப்பார்கள்
*****
No comments:
Post a Comment