அப்படியென்றால் அப்படியன்று
அங்கே சுற்றி இங்கே சுற்றி
என்று
ஏகப்பட்ட சுற்றுகள்
சுருள் சுருளாய்ப் பல சுற்றுப்
பேச்சுகள்
வாய்பட்டிச் சித்தி வாய்மூடாச்
சித்தி
என்று பேரெடுத்திருந்தாலும்
எந்நேரமும் சுற்றிப் பேசும்
ஆட்களுக்குப் பஞ்சமிருக்காது
மார்கழி மாதத்து பரங்கிப்
பூக்களைப் போல
சித்தி வந்து விட்டால் வெள்ளந்திச்
சிரிப்புதான்
கூடம் தொடங்கி திண்ணை முதல்
கொல்லை தொடங்கி வாசல் வரை
வெண்முத்தை வீடெங்கும் வாரி
இறைத்தது போலவோ
தும்பைப் பூக்களைப் பறித்து
இறைத்தது போலவோ
ஏதேனும் விஷேஷத்திற்கு வெகுளி
சித்தி
வராவிட்டால் யாருக்கும் எதுவும்
தோன்றாது
எப்படித்தான் பேசா மடந்தைகளாய்
அச்செடுத்து வார்த்த பொம்மைகளாய்
இருக்கிறோம் என்பதும் புரியாது
விஷேஷத்தின் விஷேஷ மனநிலை
சித்திக்கே வாய்த்தது வாய்க்கிறது
வாய்க்கும்
ரொம்ப நாளாய் சித்தியைக்
கட்டிய
சித்தப்பா அதிர்ஷ்டசாலி என்று
நினைத்திருந்தேன்
பிறகொரு நாள் சித்தி சுய
வாக்குமூலம் தந்தாள்
மூன்று பிள்ளைகள் ஆயிற்று
மாலாவோடு
சித்தப்பா முன் ஒரு வார்த்தை
பேசியதில்லை என்று
*****
No comments:
Post a Comment