2 Aug 2026

ஏரிகளும், நாம் செய்யும் ஏழரைகளும்!

ஏரிகளும், நாம் செய்யும் ஏழரைகளும்!

மனிதன் அருந்த, மாடுகள் குளிக்க, பயிர் பச்சை வளர, பறவைகள் வந்து பொழுதைக் கழிக்க. என அனைத்துக்கும் ஏரிதான் பிரதான ஆதாரம்.

ஏரியில் தண்ணீரைத் தேக்கி வைத்தால், அடியில் இருக்கும் நிலத்தடி நீரும் “நான் இருக்கிறேன் நண்பா என்று மேலே உயரும். இதையெல்லாம் புரிந்து கொண்டுதான் நம் முன்னோர்கள் ஏரி வெட்டுவதையும், அதைப் பராமரிப்பதையும் ஏதோ சாமி கும்பிடும் காரியத்தைப் போலப் பரம பயபக்தியுடன் செய்து வந்தார்கள்.

அக்காலத்தில் ஏரியின் கரை உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்துவிடக் கூடாது என்பதற்காகக் காவலர்களை நியமித்திருந்தார்கள். ஏரியில் மண் அடைத்துக் கொண்டால், ஊர் மக்கள் அனைவரும் கூட்டமாகப் புறப்பட்டுச் சென்று தூர் வாருவார்கள். அதற்குப் பெயர்தான் குடிமராமத்து. அதாவது, "நம் ஊர் ஏரி, நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்" என்கிற கொஞ்ச நஞ்சப் பொறுப்புணர்வு!

பத்தாம் நூற்றாண்டில் ராஜாதித்த சோழன் என்றொரு மன்னன். அவர் வெட்டிய வீராணம் ஏரியின் சுற்றளவு மட்டுமே 15 கிலோமீட்டர்! 1,465 மில்லியன் கன அடி தண்ணீரை அதற்குள் அடைத்து வைக்கலாம். மனித கரங்களால் மட்டுமே உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய நீர்த்தேக்கம் இதுதான். இன்றைக்கும் சுற்றியிருக்கும் 45 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களுக்குத் தண்ணீர் கொடுத்து, சென்னைவாசிகளின் தொண்டையையும் நனைத்துக் கொண்டு இருக்கிறது.

சொல்லப்போனால், இந்தியாவிலேயே அதிக ஏரிகளைக் கொண்ட பெருமை நம் தமிழ்நாட்டிற்கும், அப்புறம் அந்த ராஜஸ்தானுக்கும்தான் உண்டு.

1906 இல் மெட்ராஸில் மட்டும் 474 ஏரிகள் இருந்தனவாம். இப்போது கணக்கெடுத்துப் பார்த்தால், வெறும் 43 மட்டுமே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இன்றைக்கோ, நாளைக்கோ என்று இருக்கின்றன!

மிச்ச ஏரிகளெல்லாம் எங்கே என்று கேட்டால், எல்லாம் வடிவேலுவின் கிணற்றைக் காணும் காமெடியாக நிஜமாகவே டிராஜடியாகக் காணாமல் போய்விட்டன. அத்தனை ஏரிகளையும் மூடி, வீடாக்கி, வணிக வளாகமாக்கி, தொழிற்சாலையாக்கி, சென்னைவாசிகளையெல்லாம் மெட்ரோ மனிதர்களாக்கி வளர்ச்சி அடைந்துவிட்டோம்.

இதில் உச்சக்கட்ட நகைமுரண் என்னவென்றால், சென்னையின் மையப்பகுதியில் இருந்த முகப்பேர் ஏரியை மொத்தமாக மூடிவிட்டு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அதற்கு முகப்பேர் ஏரித் திட்டம் என்றே பெயர் வைத்து மனைப் பிரிவு போட்டு விற்றுவிட்டதுதான்! ஏரியை அழித்துவிட்டு அதற்கே ஏரி திட்டம் என்று பெயர் வைக்கும் அந்த நல்ல மனம் இருக்கிறதே. அதுதான் தமிழ்நாட்டின் தனித்துவமான டிசைன்!

அடுத்து நம் பள்ளிக்கரணை சதுப்பு நிலம். 100 வருடங்களுக்கு முன்னால் 15,000 ஏக்கரில் பரந்து விரிந்து கிடந்தது. இப்போது தேடிப் பார்த்தால் 2,500 ஏக்கர் கூடத் தேறாது. அப்புறம் மழை பெய்தால் ஊருக்குள் வெள்ளம் வராமல் அமெரிக்காவுக்கா போகும்? அது அமெரிக்க சதியோ, ஆப்பிரிக்கா சதியோ அத்தனை வெள்ளமும் சென்னை மாநகருக்குள்தான் படை எடுக்கின்றன.

ஏரிக்குள் குப்பையைக் கொட்டுவது, சீமைக்கருவேல மரத்தையும், ஆகாயத்தாமரையையும் வளர்த்து அழகு பார்ப்பது என நாம் செய்கின்ற காரியங்களைப் பார்த்தால், நாம் ஏரியைப் பராமரிக்கிறோம் என்பதை விட, அதை எப்போது காலி செய்யலாம் என்று காத்துக் கொண்டிருப்பது போலத்தான் தெரிகிறது.

கடைசியாகச் சொல்ல வேண்டிய ஒரு விசயமும் இருக்கிறது. அது என்னவென்றால், தமிழ்நாட்டில் கடல் நீரைக் குடிநீராக மாற்றும் திட்டம் போய்க் கொண்டிருக்கிறது. முதலில் இதற்கு 914 கோடி ரூபாய் செலவு செய்தார்கள். அப்புறம் 2024 இல் 4,276 கோடி ரூபாய் ஒதுக்கினார்கள்.

யோசித்துப்பாருங்கள். வானத்தில் இருந்து இயல்பாக ஊற்றும் மழைத் தண்ணீரை ஏரியில் சேமித்து வைக்காமல், அதை நேராகக் கடலுக்கு அனுப்பிவிட்டு, பின்னர் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி, அந்த உப்புத் தண்ணீரைக் குடிநீராக மாற்றுகிறார்களாம்! என்னவொரு புத்திசாலித்தனம்!

ஏரிகளை வெட்டி, அதை வெட்டாவிட்டாலும் கூட பரவாயில்லை, இருக்கின்ற ஏரிகளைக் கொஞ்சம் செலவு செய்து பராமரித்தாலே கடல்நீரைக் குடிநீராக்கவும் வேண்டாம், வெள்ளம் வந்தால் உள்ளம் நொந்து அவதிப்படவும் வேண்டாம்.

*****

No comments:

Post a Comment