டெல்டாவில் குறுவை நாடகம்!
மேட்டூரும் திறக்கவில்லை. மேகமும் பொழியவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி வந்துவிட்டால்
போதும்; மேட்டூர் அணைக் கதவுக்குப் பின்னால் ஏதோ ஒரு ஸ்விட்ச் காத்திருப்பதைப் போல
நாளிதழ்களில் செய்திகள் வெளிவரும். "ஜூன் 12 இல் மேட்டூர் திறப்பு. விவசாயிகள்
மகிழ்ச்சி வெள்ளம்!" என்று வண்ணமயமாக எழுதுவார்கள்.
ஆனால் இந்த ஆண்டு?
கர்நாடகா மேலிருந்து தண்ணீரைத் திறந்துவிடவில்லை;
நம்மவர்கள் வழக்கம்போல மேட்டூர் அணையைத் திறந்துவிடவில்லை.
தண்ணீர் வராத கதையைப் பார்த்தால், காவிரியில்
தண்ணீர் வருவதைக் காட்டிலும், யூடியூப்பில் வெளியாகும் வாட்டர் ரெசிபி காணொளிகளைப்
பார்த்துதான் விவசாயிகள் பயிர் செய்ய வேண்டும் போலிருக்கிறது!
கடந்த சில ஆண்டுகளாக, "நாங்கள் சொன்ன
நேரத்திற்கு அணையைத் திறப்போம்; சொல்லாத நேரத்தில் மழையைப் பெய்ய வைப்போம்" என்று
அரசு சொல்லிக்கொண்டிருந்தது. குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் என்று பெயரிட்டு,
482 ரூபாயை கோடியை அள்ளித் தெளித்தார்கள். உயிர் உரம், நுண்ணூட்டச் சத்து, மானிய விதை
என ஒரே கொண்டாட்டம்தான். 19.51 லட்சம் விவசாயிகள் பயனடைந்தார்களாம்!
சென்ற ஆண்டு 12.48 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி
செய்து சாதனை படைத்ததாகப் பெருமை பேசினார்கள்.
ஆனால், இந்த ஆண்டு?
"ஆற்றில் தண்ணீர் இருந்தால் அள்ளிக்கொள்ளலாம்.
ஆற்றில் தண்ணீரே இல்லை என்றால் என்ன செய்வது?" என்ற மிகச் சிறந்த தத்துவார்த்தக்
கேள்விக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
மேட்டூர் அணை திறக்கப்படவில்லை என்றால் என்ன,
நிலத்தடி நீர் இருக்கிறதே? "பம்புசெட்டைப் போடு, பயிரை நடு!" என்று களம்
இறங்கினால், மின்சாரம் எப்போது வரும், எப்போது போகும் என்பது மின்சார வாரியத்திற்கே
தெரியாது.
இருப்பினும், நம் விவசாயிகள் சிரமப்பட்டு பம்புசெட்டைப்
பயன்படுத்தி இதுவரை 4.39 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்துள்ளனர். ஆனால், வழக்கமான
5.32 லட்சம் ஏக்கர் இலக்கில் 93 ஆயிரம் ஏக்கர் அம்பேல். "அட போங்கள், 93 ஆயிரம்
ஏக்கர் குறைந்தால் என்ன? நாங்கள் காகிதத்தில் இலக்கை எட்டி விட்டோமே!" என்று அதிகாரிகள்
மனதிற்குள் நினைக்காமல் இருந்தால் சரி.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏதாவது நஷ்டஈடு
அல்லது இழப்பீடு கிடைக்குமா என்று ஓர் உயர் அதிகாரியிடம் கேட்டால், அவர் மிக மிக இயல்பாக
ஒரு வெடிகுண்டை வீசுகிறார்:
"நீர் பற்றாக்குறையால் சாகுபடி செய்ய
முடியாத விவசாயிகளுக்கு இதுவரை தனியாக எந்த இழப்பீடும் வழங்கப்பட்டதே இல்லையே தம்பி!
அரசாங்க வரலாற்றிலேயே அப்படி ஒரு வழக்கமே கிடையாது!"
ஆஹா! எவ்வளவு தெளிவான விளக்கம்! "தண்ணீரும்
தரமாட்டோம், இழப்பீடும் தரமாட்டோம். ஆனால் குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டத்தில் மானிய
விலையில் உரம் தருவோம்; அதை வாங்கி வீட்டில் வரவேற்பறையில் காட்சிப் பொருளாக வேண்டுமானால்
வைத்துக்கொள்ளுங்கள்" என்று சொல்கிறார்களோ என்னவோ!
சுருக்கமாகச் சொன்னால்,
காவிரி நீரைக் காணவில்லை.
குறுவை சாகுபடி பரப்பளவு 1 லட்சம் ஏக்கர் காலி.
விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறி.
அரசு தரப்பு பதில், "அட, வழக்கம்போல ஒன்றும்
தரவில்லையே, புதிதாக ஏன் கேட்கிறீர்கள்?"
இப்படி, மழை வருமா? வராதா? என்று வானத்தைப்
பார்த்துக்கொண்டே, பம்புசெட் மோட்டாருக்குப் பூஜை போட்டுக்கொண்டிருக்கிறார்கள் டெல்டா
விவசாயிகள்!
*****

No comments:
Post a Comment