மேஜைக்கடியில் காந்தி!
நகராட்சியின் இரும்பு நாற்காலிக்கு
வாதநோய் வந்து பல வருடங்களாகிவிட்டன. வெயில் தாங்காமல் அது ஈனஸ்வரத்தில் முனகியபோதெல்லாம்,
"நான் இருக்கேன்டி செல்லம்" என்று ராமலிங்கம் தன் பிட்டத்தால் அதை அணைத்துக்
கொண்டார்.
அவர் மேஜையில் இருந்த மனுக்களுக்கு
அடியில் எப்போதும் ஓர் ஐந்நூறு ரூபாய் தாள் அரைப் பிரசவ நிலையில் தலைநீட்டிக்கொண்டிருக்கும்.
ராமலிங்கம் அதைத் தொடுவதும், விரல்கள் பட்டுப்போன பூச்சிகளைப் போலப் பின்வாங்குவதும்
கடந்த இருபது வருடங்களாக நடக்கும் ஒரு சின்னஞ்சிறு நாடகம்.
உள்ளே நுழைந்தார் தலைமை எழுத்தர்
சபாபதி. அவர் குரலில் எப்போதும் ஒரு கிலோ வனஸ்பதி தடவியிருக்கும்.
"என்ன யோசனை ராமலிங்கம்?"
"இல்லை சபாபதி. சமூகத்தில்
தெருவில் திருடுபவனை அடித்துத் துவைக்கிறார்கள். கோடிகளில் சுருட்டுபவனுக்குப் பொன்னாடை
போர்த்துகிறார்கள். ஏன் இந்த முரண்பாடு?"
சபாபதி லேசாகச் சிரித்தார்.
"திருடுறவனுக்கு அதிகாரப் பின்புலம் இல்லை ராமலிங்கம். ஊழல் பண்றவனுக்கு அதிகாரம்
இருக்கு. அதிகாரத்தைப் பார்த்துக் கும்பிடு போடுவது நம் டி.என்.ஏவிலேயே ஊறிப்போன ஜீன்.
பெண்டாட்டி, பிள்ளை குட்டி என்று சுயநலம் இருக்கும் வரை எந்த நாயாலும் இந்த பயத்தை
ஒழிக்க முடியாது."
"ஆனால், பயம் நிலையானது
இல்லையே?" என்றார் ராமலிங்கம், ஒரு தத்துவ ஞானியின் போஸைக் கஷ்டப்பட்டு வரவழைத்தபடி.
*
அன்று மாலை ஊரின் மைதானத்தில்
ஒரு ரட்சகன் தோன்றியிருந்தார்.
"யார் லஞ்சம் கேட்டாலும்
செருப்பைக் கழற்றி, மன்னிக்கவும், தர முடியாது என்று துணிச்சலாகச் சொல்லுங்கள்! அரசாங்கம்
உங்களுடையது, நான் உங்கள் குடும்பத்தில் ஒருவன்!"
மேடையில் ஒலித்த அந்த புதிய அதிகாரத்தின்
குரல், அங்கிருந்த இளைஞர்களின் கண்களில் உடனே ஏதோ ஓர் எக்ஸ்ட்ரா வெளிச்சத்தை ஏற்றிவைத்தது.
ராமலிங்கத்தின் மகன் கார்த்திக், தன் கைபேசியில் அதை நேரலையாகப் பதிவிட்டு, உலகெங்கும்
உள்ள தன் நண்பர்களுக்குப் பகிர்ந்து, தனக்கான லைக்குகளைச் சேகரித்துக் கொண்டிருந்தான்.
வீட்டிற்கு வந்ததும் கார்த்திக்
வீராப்பு பேசினான். "அப்பா, இது வெறும் பேச்சு இல்லை. மேலிருக்கிற அதிகார மரத்தின்
ஆணிவேரையே வெட்டப் போகிறார்கள். இனிமேல் நாங்களும் சும்மா இருக்கப்போவதில்லை. பல கோடி
கண்கள் கண்காணிப்பில் இறங்கும்!"
ராமலிங்கம் பதில் பேசாமல் ஜன்னல்
வழியே வெளியே பார்த்தார். காலத்தின் நதியில் ஏதாவது புதுக் குப்பை மிதந்து வருகிறதா
என்று பார்க்கத் தானும் தயார் என்பது போல ஒரு மெல்லிய நம்பிக்கை அவர் மனதிலும் துளிர்த்தது.
*
அடுத்த நாள் காலை.
நகராட்சி அலுவலகம்.
அதே வாதநோய் நாற்காலி.
மேஜை மீது அதே மனு.
அடியில் அதே ஐந்நூறு ரூபாய்.
மனுவைக் கொண்டு வந்தவர் லேசாகக்
கண் சிமிட்டி, "கொஞ்சம் சீக்கிரம் முடியுங்களேன்" என்றார்.
நேற்றைய மேடைப் பேச்சும், மகனின்
வீராப்பும் ராமலிங்கத்தின் மனக்கண் முன் கவாத்து அடித்தன.
ராமலிங்கம் நிமிர்ந்து உட்கார்ந்தார்.
காந்தியைப் போலத் தன் முதுகெலும்பை நேராக்கினார். அந்த ஐந்நூறு ரூபாய் தாளை அப்படியே
எடுத்தார். நபரிடம் திருப்பிக் கொடுத்து, "லஞ்சம் கொடுக்காதீர்கள். இது உங்கள்
உரிமை!" என்றார்.
அந்த மனிதர் திகைக்கவில்லை. அதற்குப்
பதிலாக, "யோக்கிய சிகாமணி. சரி, அப்ப வேலையப் பாருங்க" என்று லேசான எள்ளலுடன்
சிரித்துவிட்டுத் தாளைப் பையில் போட்டுக் கொண்டு நகர்ந்தார்.
*
மதியம் இரண்டு மணி.
சபாபதி ஒரு காகிதத்தோடு வந்தார்.
"ராமலிங்கம், உங்களை உடனடியா பி பிரிவுக்கு மாத்தியாச்சு. அங்கே பழைய கிழிஞ்ச
கோப்புகளைக் தூசி தட்டி அடுக்குற வேலை."
ராமலிங்கம் அதிர்ச்சியடைந்தார்.
"ஏன் சபாபதி? நான் என் கடமையைத்தானே செய்தேன்?"
சபாபதி பரிதாபமாகப் பார்த்தார்.
"காலையில உன்கிட்ட காசு கொடுத்தாரே. அவரு நேத்து மேடையில் பேசினாரே ஒரு ரட்சகன்,
அவரோட சொந்த மச்சான். லஞ்சம் வாங்காதேன்னு மேடையில் பேசறது மக்களுக்குத் தர்ற ஒருவித
போதை மருந்து ராமலிங்கம். ஆனா அந்த சிம்மாசனத்தைச் சற்றே அசைக்கப் பார்த்தாலும், அதே
கைதான் வந்து உன் தலையில் அடிக்கும்."
*
மாலை வீட்டில் கார்த்திக் சோகமயமாய்
உட்கார்ந்திருந்தான்.
"என்னப்பா ஆச்சு? உங்களை
ஆபீஸ்ல மிரட்டுனாங்களாமே? நான் சோஷியல் மீடியால போஸ்ட் போடலாம்னு பார்த்தா, நம்ம ஏரியா
இளைஞர் மன்றத்துல இருந்து போன் பண்ணி இதெல்லாம் தேவையில்லாத பிரச்சனை, பேசாம இருங்கன்னு
சொல்றாங்க அப்பா. போன் பண்ணது வேற யாரும் இல்லை, நேத்து என் கூடவே வந்து கைதட்டுன என்
நண்பன்தான்," என்றான். அவனது குரலில் நேற்றிருந்த புரட்சி வடிந்து, ஒருவித அச்சு
பிசகாத பயம் எட்டிப்பார்த்திருந்தது.
ராமலிங்கம் மெல்ல நடந்து சென்று
ஜன்னல் அருகில் நின்றார். தன் சட்டைப் பையைத் தடவிப் பார்த்தார். காலியாக இருந்தது.
நாளை மீண்டும் அதே இரும்பு நாற்காலியில்
அமர்ந்து, மனுக்களின் அடியில் எட்டிப் பார்க்கும் ஐந்நூறு ரூபாய் தாள்களை எவ்வித சலனமுமின்றி,
நாகரிகமாகப் பெறத் பழகிக்கொள்ள வேண்டும் என்பதை அவர் மனம் மெதுவாகப் புரிந்துகொண்டது.
இருள் முழுமையாக நகரைச் சூழ்ந்துகொண்டது
வழக்கம்போல.
*****

No comments:
Post a Comment