திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்
சூத்திரம் – 40
அனிச்சம், அன்னம் அப்புறம் அவளின்
பாதம்!
அவன் மருத்துவர்.
அவள் பொறியாளர்.
அவர்களின் காதல் மருத்துவமும் பொறியியலும் கலந்த பயோ மெடிக்கல் என்ஜினியரிங்
மிராக்கிள் போல இருந்தது.
மருத்துவமனையின் குளிர்பதன அறையில், அவன் அவளது வலது காலை மென்மையாகத் தன் கைகளில்
ஏந்தியிருந்தான்.
வலியில் அவள் முகம் சுளிக்க, அவன் கட்டைவிரலால் அவளது குதிகாலில் லேசாக அழுத்தம்
கொடுத்துக் கொண்டே நிமிர்ந்து பார்த்தான். அவன் கண்களில் இப்போது காதலை விட, ஒரு செல்லக்
கோபம் கலந்திருந்தது.
"சொன்னதைக் கேட்டாயா? நீ வேலை பார்க்கிற விதம் இருக்கே, அனிச்சம் பூ மாதிரி
இருக்க வேண்டிய உன் பாதம், இப்போ அப்படியே நெருஞ்சிப் பழம் மாதிரி மாறிடுச்சு!"
என்றான் அவன், குரலில் பாசம் வழிய.
அவள் சப்பாணி கொட்டினாள். "போதும் நிறுத்துங்க! இங்க கால் வலி உயிர் போகுது.
இதுல வந்து எனக்கு குறள் கிளாஸ் எடுக்கறீங்க. நான் என்ன வேணும்ன்னா இப்படிச் செய்துகிட்டேன்?
ப்ராஜக்ட் டென்ஷன், மீட்டிங், ராத்திரி வரைக்கும் ஆர்கிடெக்ட் ஸ்டாண்ட் அப் டெஸ்க்ல
நின்னுகிட்டே டிசைன் பண்ணா இப்படித்தான் நடக்கும்."
அவன் அவளது காலைக் கீழே இறக்கிவிடாமல், இன்னும் கொஞ்சம் ஆதரவாகப் பிடித்துக்கொண்டான்.
"அது எனக்குப் புரியுது செல்லம். ஆனா உன்னை நினைச்சாதான் பயமா இருக்கு.
அந்த காலத்துல வள்ளுவர் என்ன அழகா எழுதியிருக்காரு பாரு.
''அனிச்சமும்
அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு
நெருஞ்சிப் பழம்.''
(குறள், 1120)
அப்படின்னு. அதாவது, அனிச்ச மலரும், அன்னப்பறவையின் இறகும் எவ்வளவு மென்மையானதோ,
அதை விட மென்மையானது உன்னோட பாதங்கள். ஆனா நீ என்ன பண்ணியிருக்க? உன் பாதத்தை நீயே
இந்த டேபிள் ஒர்க்கால கல்லு மாதிரி மாத்திக்கிட்ட."
அவளது முகம் சுருங்கியது. கோபமாகப் பேச முயன்றவள், அவன் கண்களில் தெரிந்த உண்மையான
அக்கறையைப் பார்த்ததும், அந்தச் கோபம் சலசலவென்று கரைந்துபோக, "இப்போ நான் என்னதான்
பண்ணனும் டாக்டர் சார்?" என்று செல்லமாகச் சிணுங்கினாள் அவள்.
அவன் தன் ஸ்டெத்தாஸ்கோப்பைக் கழட்டி மேஜை மீது வைத்தான். புன்னகையுடன் அவளுக்கு
அருகில் வந்து நின்றான்.
"மூன்று விஷயங்கள் இன்ஜினியர் மேடம். ஒண்ணு, நீங்க ரொம்பப் பிரியப்படுகிற
அந்த ஹை ஹீல்ஸ் செருப்புக்கு இனிமே கும்பிடு போட்டுடுங்க. ரெண்டு, ஒவ்வொரு மணி நேரத்துக்கும்
இடையில அந்த ஸ்டாண்டிங் டெஸ்க் ஆர்கிடெக்ட் டிசைன் டிராயிங்குக்கு ஒரு குட்பை சொல்லிட்டு,
ஒரு ரெண்டு நிமிஷம் கொஞ்சம் நாற்காலியில உட்காருங்க. மூணு, சாயுங்காலம் அஞ்சு மணி ஆயிட்டா,
டான்னு இங்க கண் முன்னால வந்து எங்கிட்டெ கொஞ்சம் தெரபி எடுத்துக்குங்க. சரியா?"
அவள் மெலிதாகச் சிரித்தாள். "சரி! உங்க ஆர்டரை மீற மாட்டேன்."
"சமத்துப் பொண்ணு!" என்றபடி தன் மேஜை டிராயரைத் திறந்த அவன், ஓர்
அழகிய பிளாட் சாண்டலை வெளியே எடுத்து அவளிடம் நீட்டினான்.
அவள் ஆச்சரியமாக அதைப் பார்த்தாள். "இது என்ன?"
"உனக்காக நேத்தே வாங்குனது. எங்க இன்ஜினியர் இனிமே பூ மாதிரி நடக்கணுமே!"
அவள் அந்தச் செருப்பை வாங்கிக்கொண்டு, "அப்போ என் பாதங்கள் ரொம்ப சாப்ட்னு
சொல்ல வர்றீங்க. அப்படித்தானே?"
"நிச்சயமாக. பயாலஜிக்கலா யோசிச்சா. மனித தோலின் டென்சிட்டி, குறிப்பா பாதத்தோட
சோல் பகுதி எப்பவுமே அழுத்தம் தாங்கும். ஆனா உன்னோடது..." அவன் பேச்சை முடிப்பதற்குள்,
அவள் சட்டென்று அவன் காலில் லேசாக மிதித்துவிட்டு ஓடினாள்.
"ஹே! என்ன பண்ற?"
அவள் திரும்பி நின்று, நமுட்டுச் சிரிப்புடன் சொன்னாள், "நீங்கதானே சொன்னீங்க.
என் பாதம் அவ்வளவு சாப்ட்ன்னு. சும்மா ஒரு டெஸ்ட் ட்ரை பண்ணிப் பார்த்தேன். வலிக்குதுதானே?"
அவன் தன் கால்களைத் தேய்த்துக் கொண்டே சிரித்தான். அது வலிக்கவில்லை. மாறாக,
சிலிர்த்தது. ''ஓ! இதுதான் வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைக்கிறதா?''
''இல்ல. கற்றுக் கொடுத்த குருகிட்டேயே வித்தையைக் காட்டுறது.''
''நாளைக்கு அஞ்சு மணிக்கு மறந்திடாதீங்க இன்ஜினியர் மேடம்!''
''கண்டிப்பா டாக்டர் சார்! மிதி வாங்க தயாரா இருங்க!''
- சூத்திரங்கள்
தொடரும்!
*****

No comments:
Post a Comment