ஜீன் எக்ஸ்பிரஸ்
அறை முழுவதும் ஏசி குளிரையும் தாண்டி ஒருவித பரபரப்பு புகையும் வாடையுமாக உறைந்திருந்தது.
"டாக்டர் மார்க்கண்டேய ஞானதிரவியம்! நேத்திரா டிவியில நேத்தி நீங்க பேசினதெல்லாம்
ஓகே. ஆனா அரசாங்கம்ங்கறது ஒரு பிசினஸ். மதுவிலக்கைக் கொண்டு வந்தா கள்ளச்சாராயம் பெருகிடும்னு
எங்களுக்கு வர்ற ரிப்போர்ட் சொல்லுது!" என்றார் அந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி, கையில்
இருந்த கோப்பை மூடிவைத்தபடி.
மார்க்கண்டேய ஞானதிரவியம் லேசாகச் சிரித்தார். "சார், 1971க்கு முன்னாடி
30 வருஷம் இங்க பூரண மதுவிலக்கு இருந்தது. அப்போ இல்லாத கள்ளச்சாராயமா இப்போ வரப்போகுது?
அரசாங்கமும் போலீஸும் நினைச்சா ஒரு பொட்டு கள்ளச்சாராயம் இல்லாம பண்ண முடியும். கொரோனா
டைம்ல கடைகளை மூடுனீங்களே. நாடு என்ன அழிஞ்சா போச்சு?"
அதிகாரி யோசனையுடன் பேனாவைச் சுழற்றினார்.
"சரி. ஆனா இதுக்கு மேல இந்தத் தமிழ்ச் சமூகம் குடிச்சா அடுத்த 30 வருஷத்துல
தமிழ் சமுதாயமே அழிஞ்சிடும், மரபணு பேரிடர்ன்னு சொன்னீங்களே. அது கொஞ்சம் ஓவரா தெரியல?"
மார்க்கண்டேய ஞானதிரவியம் தன் லேப்டாப்பைத் திறந்து ஒரு டி.என்.ஏ வரைபடத்தைக்
காண்பித்தார்.
"இல்ல சார். இது பியூர் சயின்ஸ். 1971லிருந்து ரெண்டு தலைமுறையா இங்க குடியோட
வீரியம் ரத்தத்துல ஊறிடுச்சு. மூணாவது தலைமுறையும் இதையே தொடர்ந்தா, அடுத்து பிறக்கப்போற
குழந்தைகள் வயித்துல இருக்கும்போதே மதுவுக்கு அடிமையாத்தான் பிறக்கும். 55 வயசுல தெம்பா
இருந்த தமிழ்நாட்டு ஜீன் அமைப்பு இப்போ சிதையுது. இன்னும் 30 வருஷத்துக்கு அப்புறம்
தமிழன்னு சொல்லிக்க இங்க ஆள் இருக்க மாட்டான்."
அறைக்குள் ஒரு கனத்த அமைதி நிலவியது. ஐ.ஏ.எஸ் அதிகாரி பெருமூச்சு விட்டார்.
"ரைட். விஷயம் சீரியஸ்தான். டாஸ்மாக்கைத் தனியாருக்குக் கொடுத்தா லாப நோக்கத்துல
இன்னும் அதிகமா விற்பாங்க. நீங்க சொல்றதை வச்சுப் பார்த்தா, உடனடியாகக் கடைகளை மூடுறதுதான்
சமுதாயத்தைக் காப்பாத்துற ஒரே வழி! நான் உடனே இதை மேலிடத்துக்குப் பார்வர்ட் பண்றேன்."
மார்க்கண்டேய ஞானதிரவியம் நிம்மதியுடன் லேப்டாப்பை மூடினார். ஒரு மருத்துவ விஞ்ஞானியின்
கடமை முடிந்தது என்ற திருப்தி அவர் முகத்தில்.
*
அடுத்த வாரம்.
மார்க்கண்டேய ஞானதிரவியம் மருத்துவமனையில் தனது வழக்கமான பரிசோதனைகளை முடித்துவிட்டுத்
திரும்பிக்கொண்டிருந்தார். ரேடியோவிலும் தொலைக்காட்சியிலும் அரசு வெளியிட்ட அதி அவசர
அறிவிப்பு ஒலித்தது,
"பொது சுகாதாரத் துறை நிபுணர்களின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில்
உடனடியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படுகிறது! அனைத்து டாஸ்மாக் கடைகளும், பார்களும்
இன்றோடு மூடப்படுகின்றன!"
மார்க்கண்டேய ஞானதிரவியம் புன்னகைத்தார், "செய்துவிட்டார்கள்!"
*
மார்க்கண்டேய ஞானதிரவியத்தின் கார் ஒரு சிக்னலில் நின்றது. பக்கத்துச் தெருவில்
திடீரென ஒரு மிகப்பெரிய கூட்டம் அலைமோதியது. ஏதோ திருவிழா போல ஆட்களின் கூச்சல்.
மார்க்கண்டேய ஞானதிரவியம் காரின் கண்ணாடியை இறக்கி, பக்கத்தில் நின்ற ஒரு இளைஞனிடம்
கேட்டார், "தம்பி என்ன அங்கே கூட்டம்? டாஸ்மாக் மூடுனதைக் கொண்டாடுறாங்களா?"
அந்த இளைஞன் அவரை ஒரு மாதிரியாகப் பார்த்துச் சிரித்தான்.
"ஹலோ அங்கிள்! எந்த உலகத்துல இருக்கீங்க? கவர்மென்ட் மதுக்கடையை மூடுன
செய்தி வந்த அரை மணி நேரத்துல, பக்கத்து மாநிலத்துல இருந்து லாரி லாரியா சரக்கு உள்ள
வர ஆரம்பிச்சிடுச்சு! அதைவிடக் கூத்து, இங்க இருக்கிற பார்மா கம்பெனிகள் எல்லாம் ஹோம்
டெலிவரி ஆப் மூலமா லீகலா ஆல்கஹால் சப்ளிமெண்ட் விக்க ஆரம்பிச்சிட்டாங்க! டாஸ்மாக் இருந்தப்பக்கூட
இவ்வளவு ஸ்பீடா கிடைக்கல சார்!"
மார்க்கண்டேய ஞானதிரவியம் அதிர்ச்சியுடன் பார்த்தார். அந்த இளைஞன் தன் மொபைல்
திரையைக் காண்பித்தான். அதில் ஒரு புது ஆப் மிளிர்ந்தது, டிராப்ஸ் - 10 நிமிடத்தில் உங்கள் வாசலில்!'
அப்போது மார்க்கண்டேய ஞானதிரவியத்தின் மொபைல் போன் அடித்தது. ஸ்கிரீனில் அதே
மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியின் பெயர்.
மார்க்கண்டேய ஞானதிரவியம் பதற்றத்துடன் போனை எடுத்தார், "ஹலோ சார்"
மறுமுனையில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிரித்தார். அந்தச் சிரிப்பில் ஒருவித கார்ப்பரேட்
நக்கல் இருந்தது.
"டாக்டர்! உங்க ஜீன் தியரி ரொம்ப அற்புதம் சார்! டாஸ்மாக் மூலமா அரசுக்கு
வந்த வருமானத்தை விட, இப்போ இந்த ஆல்கஹால் ஆல்டர்நேட்டிவ் ஆப்ஸ் மூலமா அரசுக்கு வரியும்,
தனியாருக்கு லாபமும் 3 மடங்கு அதிகமா வருது! மதுவிலக்கு கொண்டு வந்தா பிசினஸ் அடிபடும்னு
நினைச்சோம். ஆனா அதுவே ஒரு புதிய மிகப்பெரிய சந்தையைத் தொறந்து விட்டுடுச்சு! தேங்க்ஸ்
டாக்டர்!"
மார்க்கண்டேய ஞானதிரவியத்தின் கையில் இருந்த போன் மெதுவாக நழுவியது.
கார்ப்பரேட் உலகமும், மனித மூளையும் அறிவியலை விட எவ்வளவு வேகமாக அப்டேட் ஆகிவிடுகிறது
என்பதை நினைத்தபோது, 30 ஆண்டுகள் தேவையில்லை, தமிழ் சமுதாயத்தின் அழிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது
என்பது அவருக்குத் தெளிவாகப் புரிந்தது!
*****

No comments:
Post a Comment