4 Aug 2026

தொண்ணூற்று ஒன்பது + ஒன்று!

தொண்ணூற்று ஒன்பது + ஒன்று!

அந்த வகுப்பறையில் மொத்தம் இரண்டு பேர்தான் இருந்தார்கள்.

ஒருவர், ஆசிரியர் தமிழரசன். இன்னொருவன், மாணவன் கபிலன்.

கடந்த மூன்று வருடங்களாகவே வகுப்பறை அப்படித்தான் இருந்தது. கபிலன் தும்மினால் தமிழரசனுக்கு ஜலதோஷம் பிடிக்கும்; தமிழரசன் பெருமூச்சு விட்டால் கபிலன் புத்தகத்தை விரிப்பான்.

வகுப்பில், யாருக்காவது சந்தேகம் இருக்கா? என்று கேட்கும்போதெல்லாம், கபிலன் தமிழரசனையும், தமிழரசன் கபிலனையும் பார்த்துக் கொள்வார்கள்.

மதிய உணவு சமைக்கும் இரு அக்காக்களும் வாசலில் அமர்ந்து, "இன்னிக்கு ஒரு முட்டை மிச்சம் சாமி, யார் சாப்பிடுறது?" என்று தினமும் ஒரு பஞ்சாயத்தைக் கூட்டுவார்கள்.

ஒரு நாள், தலைமை ஆசிரியர் போல வந்த ஓர் அதிகாரி, அட்டவணையோடு வகுப்பறைக்குள் நுழைந்தார்.

"தமிழரசன் ஐயா! எமிஸ் தரவுப்படி உங்க ஸ்கூல்ல 10 பேருக்கு கம்மியா இருக்கு. பக்கத்து யூனியன்ல இருக்குற பெரிய ஸ்கூல் கூட இந்த ஸ்கூலை மெர்ஜ் பண்ணப்போறோம். பையனுக்கு ஒரு மினி வேன் வச்சு அங்க அனுப்ப போறோம்! நீங்க நாளைல இருந்து 100 பேர் இருக்குற பெரிய ஸ்கூலுக்கு டிரான்ஸ்பர்!" என்றார்.

தமிழரசனுக்குக் கண்கள் கலங்கின. "அப்போ கபிலன்? அவன் மத்தப் பிள்ளைகளோட ஓடிப் பிடிச்சு விளையாடுவானா சார்? அவனுக்கு சமூகத் திறன் வளருமா சார்?"

"ஆமாம் ஐயா! மினி வேன்ல பாட்டு பாடிட்டே போவான். தினமும் புதுசு புதுசா சண்டை போடுவான், கலைத் திருவிழாவுல ஜெயிப்பான்! நீங்களும் நூறு பேருக்குப் பாடம் நடத்தலாம். நிதி மிச்சம், ஆசிரியர் வளம் மிச்சம்!" என்று கவிதையாகச் சொல்லிவிட்டு அதிகாரி கிளம்பினார்.

மறுநாள் காலை.

புதிய, பிரம்மாண்டமான ஒன்றிய நடுநிலைப் பள்ளி. நூறு மாணவர்கள், விளையாட்டு மைதானம், நூலகம், காலை உணவுத் திட்டம் என ஒரே அமர்க்களமாக இருந்தது.

தமிழரசன் உற்சாகமாக வகுப்பறைக்குள் நுழைந்தார். அடடா! எத்தனை குழந்தைகள்! எத்தனை கேள்விகள்! எத்தனை சமூகத் திறன்! என்று நெகிழ்ந்துபோய், கரும்பலகையில் எழுதத் தொடங்கினார்.

அப்போது, வகுப்பறையின் கடைசிப் பெஞ்சில் ஒரு சிறுவன் தனிமையாக, மிகவும் சோகமாக அமர்ந்திருப்பதைப் பார்த்தார்.

பக்கத்திலிருந்த மாணவனிடம் கேட்டார், "யார் அது? ஏன் அவ்வளவு சோகமா இருக்கான்?"

அந்த மாணவன் சலிப்பாகச் சொன்னான், "அவன் பேரு பாரிவேந்தன். அவன் தான் போன வருஷம் வரைக்கும் இந்த பெரிய ஸ்கூல்ல படிச்ச ஒரே ஆளு!"

தமிழரசன் அதிர்ச்சியுடன், "என்னது? போன வருஷம் வரைக்கும் இந்த பெரிய ஸ்கூல்ல ஒரே ஒரு பையன்தான் இருந்தானா? அப்போ மிச்ச 99 பேர் யாருடா?" என்று கேட்டார்.

மாணவன் சிரித்துக்கொண்டே சொன்னான், "ஐயா! அரசாங்கம் இந்த வருஷம் பத்து  மாணவர்களுக்குக் குறைவாக உள்ள பள்ளிகளை மூடி, ஒரே பெரிய பள்ளியா இணைப்போம்னு அறிவிச்சங்கல்ல? அப்படி ஒன்றியம் முழுக்கப் பூட்டப்பட்ட 49 சின்னப் பள்ளிகளுல இருந்து, 49 மினி வேன்கள்ல ஒண்ணு, ரெண்டு. மூணுன்னு கூட்டிட்டு வந்து மொத்தமா இறக்கின 99 மாணவர்கள்தான் ஐயா நாங்க எல்லாரும்!"

தமழரசன் மலைத்துப்போய் நின்றார்.

இப்போது அங்கே, வேனில் வந்த 99 மாணவர்களும் புதிய கூட்டத்தைப் பார்த்து மிரண்டுபோய், "நாங்க பழையபடி எங்க ஊரு இரண்டு பேர் ஸ்கூலுக்கே போறோம்டா சாமி!" என்று மினி வேனை நோக்கி ஓடத் தொடங்கியிருந்தார்கள்.

தமிழரசனின் கண்கள் அந்த 99 பேரில் கபிலன் எங்கே எனத் தேடத் தொடங்கியது.

*****

No comments:

Post a Comment