17 Sept 2026

ஏய் நிலா ஓரம் போ!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 39

ஏய் நிலா ஓரம் போ!

அதிகாலை மணி 5.45.

திருவாரூர், செம்மொழிப் பூங்கா.

புல்வெளி விரித்த பச்சைக் கம்பளத்தைச் சுற்றி அழகழகாக அலங்கரிக்கப்பட்ட ஓவியங்கள் போல வரிசை வரிசையாகப் பூச்செடிகள். ஆங்காங்கே ஏசி போட்டது போன்ற குளுமையைத் தாங்கி நிற்கும் நிழல் மரங்கள்.

நடைபயிற்சி செய்யவும், மெல்லோட்டம் ஓடவும், உடற்பயிற்சி செய்யவும், ஓகம் பயிலவும் ஏராளமான மனிதர்கள்.

மெல்லோட்டத்திற்கான உடையுடன் அவன், அவளை எதிர்பார்த்தபடி.

வழக்கமாக 5.30க்கு வந்து விடுபவள், இன்று சற்றுத் தாமதம்.

அவன் வானத்தைப் பார்த்தான். அதே அல்பத்தனமான வேலை. இன்னும் முழுமையாக மறையாத நிலவு, வெளுத்துக்கொண்டிருக்கும் நீல வானத்தில் ஒரு வெள்ளை ஸ்டிக்கர் மாதிரி ஒட்டிக்கொண்டிருந்தது.

அப்போது செக்கச் சிவந்த டீசர்ட், கருநீல நிற டிரக்சூட், காற்றில் பறக்கும் முடிகள், கழுத்தில் மெல்லிய சில்வர் செயினுடன் தட் தட் என்ற மெல்லோட்டத்திற்கே உரிய மூடுகாலணியின் சத்தத்துடன் அவளது குரல் கேட்டது. "ரொம்ப நேரமாச்சா? இன்னிக்கு இந்தப் பூங்காவைச் சுற்றி பத்துச் சுற்று. ஆரம்பிக்கலாமா? "

அவள் நெற்றியில் அவசர அவசரமாகக் கிளம்பி, வேகமாக ஓடி வந்ததன் வியர்வைத் துளிகள். கலைந்த தலைமுடி. லேசான தூக்கக் கலக்கம். ஆனால், முகத்தில் ஓர் இயல்பான பிரகாசம்.

அவன் பதிலேதும் சொல்லாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் திரும்பிப் பார்த்துவிட்டுச் சிரித்தாள். "என்ன விசித்திரப் பார்வை? முகத்துல பதில் ஏதும் சொல்லக் கூடாதுன்னு எழுதி ஒட்டியிருக்கா? இப்படி உம்முன்னு பார்த்தா என்ன அர்த்தம்?"

அவன் அவளை அருகில் இழுத்து, வானத்தைக் காட்டினான். "அங்க பாரு! அதிகாலை நேரத்துல வந்து மாட்டிக்கிட்டு முழிக்குது பாரு நிலா."

அவள் புரியாமல் புருவத்தை உயர்த்தினாள். "ஆமா, மார்னிங் மூன். அதுக்கென்ன இப்போ?"

"அதுக்கென்னவா?" அவன் இப்போது தீவிரமாகப் பேசத் தொடங்கினான்:

"இந்த அதிகாலை நிலவுக்கு ஒரு செம ஓவர் கான்பிடன்ஸ். ராத்திரி பூரா பவளமா ஜொலிச்சுட்டு, விடியற்காலைல இவளோட முகம் எப்படி இருக்குன்னு ஒரு தடவை பாக்கணும். பேசாம உள்ளே போயிடணும். ஆனா, இது என்ன பண்ணுது? பகல்லயும் வந்து நின்னுட்டு நான்தான் ஒரிஜினல் அழகின்னு சலம்பிட்டு இருக்கு."

அவள் லேசாகச் சிவந்து சிரித்தாள். "உனக்கு எப்போ பாத்தாலும் ரொமான்டிக் பஞ்ச்தானா?"

"இல்ல. வள்ளுவர் அப்பவே சொல்லிட்டார்.

"மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்

பலர்காணத் தோன்றல் மதி."                    (குறள், 1119)

அப்படின்னு. மலர் மாதிரி இருக்கிற என் கண்ணழகி முகத்துக்கு முன்னாடி, இந்த நிலவு தோத்துப்போகும். அதான் அதுகிட்ட சொல்லிட்டு இருக்கேன். ஏய் நிலா, பல பேர் பார்க்கிற நேரத்துல, அதுவும் இப்படி பகல் வெளுத்த நேரத்துல வந்து நிக்காதே. உன் மேல இருக்கிற கறுப்புத் தழும்பு இவ மூஞ்சியோட கம்பேர் பண்ணும்போது அசிங்கமாத் தெரியுதுன்னு!"

அவள் அவன் கையைத் தட்டியபடியே செல்லமாகச் சொன்னாள். "போதும். ஜாக்கிங் முடிச்சு ஆபீஸ்க்கு  வேற கிளம்பணும். இப்பவே நேரமாச்சு, சீக்கிரமா கிளம்பு."

இருவரும் செம்மொழிப் பூங்காவைச் சுற்றி முதல் சுற்றை மெதுவாக ஓடத் துவங்கினார்கள்.

"என்னடா நீ? நேரமாச்சுன்னு நான் பரபரப்பா வந்தா, நீ காத்து வாங்கிட்டுக் கவிதை யோசிச்சிட்டு இருக்கே. ஆறே காலுக்குள்ள முடிச்சிட்டுக் கிளம்புனாத்தான் எல்லாத்துக்கும் நேரம் சரியா இருக்கும். இன்னிக்கு ஜாக்கிங்க, ரன்னிங்கா அப்கிரேட் பண்ணுவோமா?"

அவளை நெருங்கியபடி மெல்லோட்டாய் ஓடிக் கொண்டிருந்தவன் ஒரு கணம் நின்றான்.

அவளும் நின்றாள். ஏன் இப்படி இவன் இன்று விசித்திரமாக ஏதேதோ பேசுகிறான், பண்ணுகிறான் என்று அவள் லேசாகச் சிரித்தாள். அந்த அதிகாலை ஒளிவெளியில் அவளது கண்கள் மலர்களைப் போல விரிந்தன. "என்னடா இது? எது கேட்டாலும்  ரொம்ப யோசிக்கிறே. மூளையில ஏதோ சாப்ட்வேர் பக் மாதிரி முகத்துல ஒரு கன்பியூஷன்? என்னதான் பிரச்சனை உனக்கு?"

"இப்போ வானத்தைப் பாரேன்!"

"மறுபடியும் வள்ளுவர், கவிதைன்னு ஆரம்பிக்கப் போறீயா?"

"உன் முகத்தோட போட்டிப் போட முடியாம, நிலவு ஓடிப் போயிட்டுப் பாரு!"

"டேய் அது மூன்செட்றா!" என்றபடி அவள், அவன் மேலும் பேசுவதற்குள் தன் கைகளால் அவனது வாயைப் பொத்தினாள்.

அவளது கையை மெல்ல விலக்கியவன், அவளது விழிகளைப் பார்த்தான். செம்மொழிப் பூங்காவை அவளோடு பத்துச் சுற்று என்ன? நூறு சுற்று சுற்றுவதற்கான உற்சாகமும் ஆற்றலும் அவனுக்குள் பிரவகித்தது.

-          சூத்திரங்கள் தொடரும்!

*****

No comments:

Post a Comment