திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்
சூத்திரம் – 34
பூக்களுக்கும் வெட்கம் வரும்!
கணியன் கணினிப் பூங்கா நிறுவனத்தின் பத்தாவது மாடியில் குளிர்பதன வசதி
செய்யப்பட்டிருந்த அலுவலக அறையின் மெல்லிய குளிரில், மங்கலான ஒளியில் அவன் அமர்ந்திருந்தான்.
எதிரில் அவள்.
கண்களில் எந்த ஒப்பனையும் இல்லை, ஆனால் தீவிரமான தவிப்பும் துடிப்பும் நிரம்பியிருந்தன.
"என்ன? லேப்டாப் பேட்டரி டெட் ஆயிடுச்சா, இல்லை ப்ராஜெக்ட் டெட்லைன் நெருங்குதா?"
என்றான் அவன்.
அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். ஒரு நொடி அவனது கையில் இருந்த போன் கீழே
விழப்பார்த்தது. "அது கிடக்குது விடு. ஆனா, என்ன இது? நீ என்னை நேத்துல இருந்து
பார்க்கிற பார்வை, ஏதோ ஏஐ அல்காரிதம் வச்சு ஸ்கேன் பண்ற மாதிரி இருக்கு. என்ன விஷயம்?"
என்றாள்.
அவன் லேசாகப் புன்னகைத்தான். "ஒன்றுமில்லை. உன்னைத் பார்த்த உடனே வள்ளுவர்
ஞாபகம் வந்துட்டார். உன்னோட கண்களைப் பார்த்த உடனே அவர் எழுதி வச்ச ஒரு சூத்திரம் நியாபகத்துக்கு
வந்துச்சு.
"காணின்
குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை
கண்ணொவ்வேம் என்று" (குறள்,
1114)
அதான்!"
அவள் புருவத்தைச் சுருக்கினாள். "புரியல, இந்தச் சூத்திரம் என்ன சொல்லுதுன்னு
சொல்லு."
"ரொம்ப சிம்பிள். குவளை மலர் குளத்துல பூக்கும். ஆனா அது தண்ணிக்கு மேலே
நிமிர்ந்து பார்க்காம, தரையைப் பார்க்குமாம். ஏன்னா? உன்னோட அழகான கண்களுக்கு ஈடுகொடுக்க
முடியல, நம்ம கண்கள் தோத்துடும்னு வெட்கப்பட்டுத் தலைகுனிந்து பார்க்குமாம்."
அவள் சற்றே வெட்கப்பட்டாள். ஆனால், உடனடியாகத் தன்னைத் சமாளித்துக்கொண்டு,
"ஓஹோ! அப்போ குவளை மலருக்குக் கூச்ச சுபாவம் அதிகம்னு சொல்ற?"
"இல்லை. இங்குதான் நீ வள்ளுவரைத் தப்பாப் புரிஞ்சுக்கிற. உன் கண்களைப்
பார்க்கும் வரை அதுக்கு எந்தக் கூச்ச சுபாவமும் இல்ல. உன் கண்களைப் பார்த்த பிறகுதான்
கூச்சப்பட்டு நிலத்தை நோக்குது."
"என்ன பாஸ்! அப்படிப் பார்த்தாலும் லாஜிக் இடிக்குதே. குவளை மலர் இருக்குறது
குளத்துலங்றீங்க. அப்ப அது கவிழ்ந்தா தண்ணீரைத்தானே நோக்க முடியும். நிலத்தை எப்படி
நோக்க முடியும்?"
"நீ நிக்குறது நிலத்திலத்தானே!"
அவள் இதழ்களில் ஒரு மெல்லிய புன்னகை தொக்கி நின்றது. "நீ ரொம்பத்தான் பில்டப்
தர்ற. ஆனா, உன்னோட விளக்கம் சூப்பர்."
"தேங்க்ஸ். டெக்னாலஜி எவ்வளவோ வளர்ந்துட்டாலும், உன்னோடகண்களோட சாப்ட்வேரை
இன்னும் எந்தக் கம்பெனியும் காப்பி அடிக்க முடியல பாரு!"
அவளது கன்னம் லேசாகச் சிவந்தது. எப்போதும் சட்டென தர்க்கம் பேசுற அவளது வாய்,
இப்போது நிஜமாவே பூட்டு போட்ட மாதிரி அமைதியாக இருந்தது.
அவன் தொடர்ந்தான், "என்ன? குவளை மலரே உன் கண்ணைக் கண்டு நிலத்தைப் பார்க்கும்போது,
இந்த சாதாரணமானவன் எந்த மூலை?"
அவள் தலை குனிந்து நிலத்தைப் பார்க்க, "அடடா! குவளை மலர் உன் கண்களைப்
பார்த்து நிலம் நோக்குது சரி. உன்னோட கண்களும் நிலம் நோக்குதே. அது எதைப் பார்த்து?"
"ச்சீ! போடா! போய் வேலையைப் பாரு!" என்ற படி அவள் அங்கிருந்து மெதுவாக
ஓடியது, குவளை மலரே வெட்கப்பட்டு ஓடுவது போலிருந்தது.
- சூத்திரங்கள் தொடரும்!
*****

No comments:
Post a Comment