நெல் திருவிழா – 2026
ஒரு பிச்சைக்காரனின் விடியலும்,
அரை மணி நேர அறுவை சிகிச்சையும்!
பாரம்பரியத்தைக் காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று
கிளம்பி, கடைசியில் என்னைக் காப்பாற்றுங்கள் என்று கதறாத குறைதான் இந்த 2026 ஆம் ஆண்டின்
நெல் திருவிழா அனுபவம்.
நேற்று நடந்து முடிந்த அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க
நெல் திருவிழாவுக்குச் சென்று வந்த பிறகுதான் தெரிந்தது, நம் முன்னோர்கள் பாரம்பரிய
நெல்லை மட்டும் விட்டுச்செல்லவில்லை, அதை வாங்குவதற்குத் தேவையான தப்பிப் பிழைக்கும்
கலையையும் சேர்த்துத்தான் விட்டுச் சென்றிருக்கிறார்கள் என்று.
ஒவ்வொரு முறையும் இந்தத் திருவிழாவுக்குக் கிளம்பும்போதும்
மனதுக்குள் ஒரு பெரிய கனவு இருக்கும்,
"இன்றைக்கு எப்படியாவது ஏதேனும் ஒருபாரம்பரிய நெல்லை வாங்கி வந்து இந்த
ஊரில், இந்த நாட்டில், இந்த உலகத்தில் பாரம்பரிய விவசாயத்தைப் பாதுகாத்து ஒரு கை பார்த்துவிட
வேண்டும்!" என்று.
ஆனால், அங்கு சென்றதும் ஒவ்வொரு முறையும் நடப்பதே
வேறு.
திருவிழா நடந்த இடத்தை அடைந்தவுடனேயே எனக்குள் ஒரு
நடுக்கம் தொற்றிக்கொண்டது. கூட்ட நெரிசலைப் பார்த்தால், அடுத்து ஒரு "கரூர் சம்பவம்"
இங்கேதான் நடக்கப்போகிறது என்பது உறுதியாகத் தெரிந்தது.
அந்த அலைமோதும் கூட்டத்துக்கு நடுவே சிக்கிச் சின்னப்பின்னமாகி,
கடைசியில் உயிர் தப்பி வீடு திரும்பியதே போன ஜென்மத்தில் நான் செய்த ஏதோ ஒரு புண்ணியம்தான்.
நூறு ரூபாய்க்கு இரண்டு கிலோ பாரம்பரிய நெல் தருகிறார்களாம்.
அதை வாங்குவதற்குப் பல ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் முதல் அரைக்காணி நிலம்
வைத்திருக்கும் விவசாயிகள் வரை, கர்நாடகாவிடம் காவிரித் தண்ணீரைக் கேட்டுப் போராடும்
விவசாயிகளின் அதே தர்ணா பாணியில் காலையிலிருந்து அதை கொடுக்கும் வரை தேவுடு காத்து
வெயிலில் அங்கே இங்கே நகராமல் பரிதாபமாக உட்கார்ந்திருக்கிறார்கள். எங்கே போனாலும்
விவசாயிகளுக்குத் தர்ணா செய்வதுதான் பிழைத்திருப்பதற்கான ஒரே வழி போலும்.
அங்கிருந்த கூட்டத்தைப் பார்க்க பார்க்க விழா அமைப்பாளர்களுக்கு
ஒரே பெருமிதம்! "அடடே, எவ்வளவு பெரிய கூட்டத்தைக் கூட்டிவிட்டோம்!" என்று
அவர்கள் முகத்தில் அத்தனை திருப்தி. ஆனால், அந்த கூட்டத்தை நெறிப்படுத்தவோ, ஒழுங்கு
செய்யவோ அங்கே ஒரு நாய்கூட இல்லை. நாய்கள் ஒருவேளை கூட்டத்தைப் பார்த்துப் பயந்து ஓடியிருக்கலாம்.
மதியம் சுமார் மூன்று மணி வாக்கில்தான் அந்த
"பொறுப்பான மன்னர்கள்" வந்திறங்குகிறார்கள். வந்தவர்கள் நேராக அந்தப்புரத்து
மாடத்தின் மீது ஏறிக்கொண்டு, கீழே நிற்கும் மக்களுக்குக் காசுகளை வீசி எறிவதைப் போல
இரண்டு கிலோ நெல் மூட்டைகளைத் தூக்கி எறிகிறார்கள்.
அதன் பிறகு அங்கு நடந்ததுதான் உச்சகட்டக் கூத்து.
எங்கெங்கும் ஒரே பிச்சைக்காரக் குரல்கள்.
"ஐயா, புண்ணியவானே! எனக்கு ஒரு சீரகச் சம்பா
நெல்லைப் பிச்சைப் போடுங்களேன்!"
"சாமி, என் பொண்டாட்டி தங்கச் சம்பா கேட்கிறா,
ஒரு பிச்சை போடுங்களேன்!"
"மகராசனே, மாப்பிள்ளைச் சம்பா பிச்சை கிடைக்குமா?"
விவசாயிகள் ஆளாளுக்குத் தொண்டை வரளப் பிச்சை கேட்டுக்
கொண்டிருந்தார்கள். நானும் சளைக்காமல், ஒரு மணி நேரம் தொண்டை வறண்டு போகும் அளவுக்கு
"ஐயா கனவானே சீரகச் சம்பா பிச்சைப் போடுங்கள். ஐயா தர்மவானே தங்கச் சம்பா பிச்சைப் போடுங்கள்"
என்று கதறிப் பிச்சை கேட்டேன்.
ஆனால், கடைசியில் தான் உறைத்தது, "பிச்சைக்காரர்களுக்குத்
தனக்கு வேண்டிய உணவைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் கிடையாது" என்கிற கசப்பான
உண்மை!
இதற்கு மேல் பிச்சையெடுத்து உயிரை விட முடியாது என்று,
ஒரு வழியாக அந்த நெரிசலில் இருந்து தப்பித்து, சரி ஏதாவது பார்க்கலாம் என்று அங்கிருக்கும்
அரங்குகள் பக்கம் ஒதுங்கினால். அது அடுத்தகட்ட ஆபத்து!
ஏதாவது ஓர் அரங்கின் பக்கம் தப்பித்தவறி எட்டிப்பார்த்துவிட்டால்
போதும், நம்மை அப்படியே கெட்டியாகப் பிடித்து வைத்துக்கொள்கிறார்கள். அப்புறம் என்ன?
அனஸ்தீசியா கொடுக்காமல் அரை மணி நேரத்திற்கு ஒரு மிகப்பெரிய அறுவை சிகிச்சை நடக்கத்
தொடங்குகிறது!
"இந்த நெல்லோட வரலாறு தெரியுமா தம்பி? கி.மு
200இல் எகிப்து பிரமிடுக்குள்ள இதோட விதையைக் கண்டுபிடிச்சப்போ…" என்று அவர்கள்
ஆரம்பிக்கும் அந்த அரிய மருத்துவச் சிகிச்சை தொடர தொடர, நமது மூளையின் ஒவ்வொரு நரம்பையும்
பிச்சி பிச்சி எடுத்தாற் போல ஒரு வலி, வேதனை. அறிவியலின்படி மூளை வலியை உணராது என்பார்கள்.
இங்கே மூளை வலியை உணர்வது வேறு விசயம்.
நாமோ நெஞ்சைப் பிடித்துக்கொண்டு "சாமி, ஆளை
விடுங்க சாமி" என்று மனதுக்குள் அலறுவோம். ஆனால், அறுவை சிகிச்சை முடியாமல் நோயாளி
வெளியேற முடியாதே!
சரி, நெல்தான் கிடைக்கவில்லை, அறுவைச் சிகிச்சையும்
ஓயவில்லை, அங்கிருக்கும் பாரம்பரியக் கைவினைப் பொருட்களையோ அல்லது மதிப்புக்கூட்டப்பட்ட
பொருட்களையோ வாங்கலாம் என்று விலைப்பட்டியலைப் பார்த்தால், அடேங்கப்பா! விலைவாசி விண்ணைத்
தொட்டு, அங்கிருந்து செவ்வாய் கிரகத்திற்கே ராக்கெட் விட்டுக்கொண்டிருக்கிறது.
"ஐயா, இந்த அரிசி பண்டத்தின் விலை என்ன?"
என்று விசாரித்தால், "அட வெறும் எண்ணூறு ரூபாய்தான் தம்பி!" என்றார்கள்.
சாதாரணச் சந்தையில் ஐம்பது ரூபாய்க்கு விற்கும் ஒரு பண்டத்துக்கு, பாரம்பரியம் என்கிற
ஸ்டிக்கரை ஒட்டி, விலையை ஏரோபிளேன் ரேஞ்சுக்கு ஏற்றி வைத்திருந்தார்கள்.
சாதாரண ஈயச்சொம்புக்கும், பனை வெல்லத்துக்கும் அவர்கள்
சொல்லும் விலையைக் கேட்டால், நம் பாரம்பரியத்தைக் காப்பாற்ற நமது பேங்க் பேலன்ஸையும்,
ஊர் திரும்ப கையிலிருக்கும் கொஞ்ச நஞ்ச பணத்தையு பலி கொடுக்க வேண்டியிருக்கும் போலிருக்கிறது!
பாரம்பரிய நெல்லைப் பரப்புவது இருக்கட்டும், முதலில்
மனிதர்களை மனிதர்களாக நடத்தும் பாரம்பரியத்தையும், பார்வையாளர்களை அறுவை சிகிச்சை செய்யாமல்
வாழவிடும் நாகரிகத்தையும் இவர்கள் மீட்டெடுத்தால் நன்றாக இருக்கும்.
இனிமேல் எந்த நெல் திருவிழா பக்கமும் தலைவைத்துக்கூடப்
படுக்கப் போவதில்லை.
பாரம்பரிய நெல் விதைகளை விடவும், இந்தத் திருவிழா
தந்த மன உளைச்சல்தான் அதிகமாக விளைந்திருக்கிறது!
*****

No comments:
Post a Comment