டிஜிட்டல் நியாயத்தராசு
நள்ளிரவு ஒரு மணி. முத்தையாவுக்குத்
தூக்கம் வரவில்லை. அதற்குக் காரணம் அவருடைய அறுபத்திரண்டு வயது மூட்டு வலியோ, அல்லது
தெருவில் குரைக்கும் நாய்களோ அல்ல. அவரது மருமகள் ரேகா ஏந்தியிருந்த அந்த ஐபோன்.
அதன் திரையிலிருந்து வெளிவந்த
வெளிச்சம், ஒரு மாயப் பேயின் முகம்போல ரேகாவின் முகத்தை வெளிச்சமிட்டுக் காட்டியது.
"மாமா! இந்த விடியோவை நல்லா
பாத்துக்கோங்க. இதுல உங்க பையன் என்னைப் பாத்து அறிவு இருக்கான்னு கேட்ட ஆடியோ தெளிவா
இருக்கு. நாளைக்குக் காலைல எட்டு மணிக்குள்ள நீங்க ரெண்டு பேரும் என்கிட்ட மன்னிப்பு
கேட்கலன்னா, இதை பேஸ்புக், இன்ஸ்டா, எக்ஸ் அப்புறம் உங்க சொந்தக்காரங்க வாட்ஸ்அப் குரூப்
எல்லாத்துலயும் அப்லோட் பண்ணிடுவேன். வரதட்சணைக் கொடுமைப்படுத்தும் மாமனாரும் கணவனும்னு
ஹாஷ்டேக் போட்டுருவேன்!"
முத்தையா கூனிக் குறுகிப் போனார்.
பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு,
கெட்டிமேளம் முழங்க, சல்லடை போட்டுத் தேடி, நம் வீட்டுக்கு வந்த மகாலட்சுமி என்று ஆரத்தி
எடுத்து வரவேற்ற பெண்மணிதான் இப்போது கையில் ஒரு சிறிய திரையை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்தக்
குடும்பத்தையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறாள்.
அவர் மகன் கார்த்திக், பேசாமல்
தலைகுனிந்து அமர்ந்திருந்தான். அவனுக்குத் தெரியும், அவன் சொன்ன அறிவு இருக்கா? என்ற
கேள்வி, மாலை ஆறு மணிக்கு ரேகா சாம்பாரில் உப்புக்குப் பதிலாகச் சர்க்கரையைப் போட்டபோது
தற்செயலாகக் கேட்டது. ஆனால், அந்த மூன்று வினாடி ஆடியோவில் சாம்பாரும் இல்லை, சர்க்கரையும்
இல்லை; கார்த்திக்கின் கோபக் குரல் மட்டுமே சாட்சியாக எஞ்சியிருந்தது.
"டேய் கார்த்திக்!"
முத்தையா மெல்லக் கிசுகிசுத்தார். "காவல்துறைக்குப் போனாக்கூட பரவாயில்லைடா. நம்ம
தரப்பு நியாயத்தைச் சொல்லலாம். ஆனா, இந்த பேஸ்புக்ல போட்டுட்டா, ஊர் சிரிக்குமேடா!
நாலு பேர் நம்மளப் பத்தி என்ன நினைப்பாங்க? என் வாழ்நாள் கௌரவமே போயிடுமே!"
கார்த்திக் பெருமூச்சு விட்டான்.
"அப்பா, காவல் துறைக்குத் தீர்ப்பு சொல்ல ஆறு மாசம் ஆகும். ஆனா பேஸ்புக்ல ஆறு
விநாடில தீர்ப்பு சொல்லிடுவாங்க. அதுல ஆயிரம் பேர் ஷேர் பண்ணுவான், மூவாயிரம் பேர்
நம்மளத் திட்டி கமெண்ட் போடுவான். நம்ம பக்கத்து நியாயத்தை நம்ம பொணத்தைக் கொண்டுபோய்
சுடுகாட்டுல வச்சாக் கூட அந்த ஆட்களுக்குச் சொல்ல முடியாது."
முத்தையா தன் கைகளைப் பார்த்தார்.
நடுக்கமாக இருந்தது.
அடுத்த நாள் காலை ஏழு மணி.
முத்தையா தன் அறையிலிருந்து வெளியே
வந்தார். ரேகா ஹாலில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்தாள். கையில் அதே போன்.
முத்தையா மெதுவாக அவளருகே சென்றார்.
"ரேகா! என்னை மன்னிச்சிடுமா. நாம போலீசுக்கு வேணா போவோம். ஆனா அந்த நெட்ல மட்டும்
எதையும் போட்டுடாத. ஊர் மத்தியில குடும்பத்து மானத்தை வாங்கிடாத..."
ரேகா புன்னகைத்தாள். அது ஒரு
வெற்றியாளனின் புன்னகை. "பாத்தீங்களா மாமா! சட்டம் தரவேண்டிய பயத்தை இந்த ஒரே
ஒரு போன் ஸ்கிரீன் தந்துடுச்சு. இனிமே இந்த வீட்ல நான் சொல்றதுதான் சட்டம்!"
அவள் காபி கோப்பையை மேஜை மீது
வைத்துவிட்டு, தன் அறைக்குச் சென்றாள்.
முத்தையா ஹாலில் இருந்த நாற்காலியில்
அமர்ந்தார். அவர் கண்கள் சுவரில் தொங்கிய அவர் மனைவியின் படத்தைப் பார்த்தன. நல்லவேளை,
அவள் உயிரோடு இல்லை.
திடீரென முத்தையாவின் கைப்பேசி
ஒலித்தது. அவருடைய நண்பர் சுப்பையா அழைத்திருந்தார்.
"யோவ் முத்தையா! உன் மருமகள்
ரேகா பேஸ்புக்ல ஒரு போஸ்ட் போட்டுருக்காப் பாரேன். என் மாமனாரும் கணவரும் என்னை எவ்வளவு
நல்லா பார்த்துக்கிறாங்க தெரியுமா? அப்படின்னு உங்க மூணு பேர் போட்டோவையும் போட்டு,
கீழ ஹேப்பி பேமிலின்னு ஹாஷ்டேக் போட்டுருக்கா!"
முத்தையா திடுக்கிட்டுப் போய்
எழுந்தார். தன் கையிலிருந்த போனின் திரையை நோக்கிப் பார்த்தார். அந்த கறுப்புச் சில்லு,
ஒரு மயான அமைதியுடன் அவரைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது.
*****

No comments:
Post a Comment