காதல் என்னும் வெறிநாய் கடித்த காதலிகள்
உலகத்தில்
எத்தனையோ விசித்திரமான ஆசைகள் இருக்கின்றன. காதலனுக்குக் கவிதை எழுதிக் கொடுப்பது பழசு;
காத்தாடி பறக்க விடுவது அதையும் விடப் பழசு. கோவை மண்டலத்தைச் சேர்ந்த சில கல்லூரி
மாணவிகளுக்குத் தங்கள் காதலர்களுக்கு பைக் வாங்கித் தருவதும், அவர்களுடைய கடனை அடைப்பதும்தான்
ஆகச்சிறந்த காதலறமாகத் தெரிந்திருக்கிறது. அதுவும் சொந்தப் பணத்தில் இல்லை, தோழியின்
வீட்டுப் பீரோவில் இருக்கும் நகையை லவட்டி!
பொள்ளாச்சியைச்
சேர்ந்த 19 வயது ஜாய் பிரியன்சி, பிகாம் படிக்கும் புத்திசாலிப் பெண். படிப்பு காம்ப்யூட்டர்
அப்ளிகேஷன்ஸ். ஆனால் நடைமுறையில் அவர் அப்ளை செய்தது தோழி வீட்டு நகையை அபேஸ் செய்யும்
சிம்பிள் அப்ளிகேஷன். இரண்டு வாரங்களுக்கு முன்பு தோழியின் வீட்டிற்கு ஜாலியாகச் சென்றவர்,
பீரோவில் அநாதையாகக் கிடந்த 9 பவுன் நகையைப் பார்த்து நெகிழ்ந்துபோனார்.
காதலன்
ஜனகன் சிவாவிற்கு ஒரு பைக் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற புனிதமான லட்சியம் அவர்
நெஞ்சில் கனன்றுகொண்டிருந்தது. 9 பவுன் நகையை அப்படியே கடைக்குக் கொண்டு போய் இரண்டரை
லட்ச ரூபாயாக மாற்றினார். உடனே காதலனுக்குப் புதிய பைக் வாங்கித் தந்து, "இந்தா
பிடி என் காதலின் அடையாளம், ஆக்சிலரேட்டரை முறுக்கு!" என்று கொடுத்திருக்கிறார்.
விஷயம்
பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனது. ஷெர்லாக் ஹோம்ஸ் பாணியில் துப்பறிந்த
போலீஸார், இறுதியில் ஜாய் பிரியன்சியை அரைமணி நேரத்தில் கண்டுபிடித்து கோவைச் சிறையில்
அடைத்துவிட்டார்கள். பைக் வாங்கி ஜாலியாக வலம் வர நினைத்த காதலன் ஜனகன் சிவாவை இப்போது
போலீசார் தேடப்படும் குற்றவாளியாகத் தேடி வருகிறார்கள். காதல் பைக் ஓட்ட வைத்ததோ இல்லையோ,
இப்போது காதலனை ஊர் ஊராக ஓட வைத்துவிட்டது!
இதில்
வேடிக்கை என்னவென்றால், செப்டம்பர் 1 ஆம் தேதிதான் போத்தனூரில் சிந்து என்ற எம்பிஏ
மாணவி, தன் காதலன் பரணிதரனின் கடனை அடைப்பதற்காக முகமூடி அணிந்து வழிப்பறியில் ஈடுபட்டுக்
கைதானார். அவர் வழியில் அதே பாணியில், இப்போது ஜாய் பிரியன்சியும் தோழி வீட்டில் கைவரிசையைக்
காட்டியிருக்கிறார்.
காதலனின்
ஆசையை நிறைவேற்றக் கொள்ளைக்காரியாக மாறும் மாணவிகள் ஒன்றை உணர வேண்டும். பீரோவில் நகையைத்
திருடி பைக் வாங்கிக் கொடுத்தால், கடைசியில் பயணம் செய்வது என்னவோ அரசு வழங்கி இருக்கும்
சிறை வாகனத்தில்தான்.
தோழிகளை
வீட்டிற்கு அழைக்கும் கோவை மக்கள், இனி வரவேற்பறையிலேயே ஒரு மெட்டல் டிடெக்டரையும்,
பீரோவிற்கு டிஜிட்டல் பாஸ்வேர்டையும் போட்டு வைப்பது நல்லது. ஏனெனில், உங்கள் தோழிக்கு
எந்த நேரத்தில் காதல் நோய் முற்றி, பைக் வாங்க ஆசை வருமென்று யாருக்குத் தெரியும்?
*****

No comments:
Post a Comment