திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்
சூத்திரம் – 29
ஈகோவின் அரையடி இடைவெளி
மாலை
நேரத்துப் பூம்புகார் கடற்கரை.
அலைகள்
கரையைத் தொட்டுத் தொட்டுச் சென்றுகொண்டிருக்க, அந்தி வானத்தின் ஆரஞ்சு வெளிச்சத்தில்
பிரம்மாண்டமாக நின்றுகொண்டிருந்தன அந்தக் கடற்கரை மண்டபங்கள்.
சுற்றி
நின்று சுண்டல் விற்றுக் கொண்டிருந்தவர்களின் சத்தத்திற்கும், கடல் அலைகளின் பேரிரைச்சலுக்கும்
நடுவே, இவர்களுக்கிடையே மட்டும் ஒரு கனத்த மெளனம்.
மணலில்
அவனும் அவளும் அமர்ந்திருந்தார்கள். நடுவே அரை அடி இடைவெளி.
பிரச்சனை
ரொம்ப பெரிதெல்லாம் இல்லை. மாலை ஐந்து மணிக்கெல்லாம் கோவிலுக்குப் போய் விட்டு கடற்கரைக்கு
வரலாம் என்று அவள் சொல்லியிருந்தாள். அவனுக்கு அலுவலகத்தில் திடீரென ஓர் அவசர கூட்டம்.
கூட்டத்தில் சொன்ன வேலையை அங்கேயே உட்கார்ந்து வேலையை முடிக்க முக்கால் மணி நேரம் தாமதமாகிவிட்டது.
வந்ததிலிருந்து
அவள் பேசவில்லை. கடல் அலையைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள். அவளது அமைதி கல்மண்டபத்துச்
சிலை போல எந்தப் பதிலும் இல்லாமல் இருந்தது.
"சாரிடி
செல்லம். மேனேஜர் விடல. லேட் ஆயிடுச்சு," அவன் மெதுவாக ஆரம்பித்தான்.
மௌனம்.
கண்கள்
அலைகளிலேயே நிலைத்திருந்தன.
"இங்க
பாருடி, அட்லீஸ்ட் என்னை ஒரு தடவை பார்!"
"நான்
உங்களைப் பார்க்கவே இல்லை. நீங்க கிளம்புங்க, லேட் ஆச்சுல்ல? ஆபீஸுக்கே போங்க!"
குரலில் அண்டார்டிக்கா குளிர்.
அவன்
சிரித்துக்கொண்டான். இந்த ஊடல் இருக்கிறதே அது ஆபத்தானது, அதே சமயம் அழகுமானது. இதே
புகார் கடற்கரையில் கோவலனையும் மாதவியையும் பிரித்து விட்ட அழகிய பிசாசு அல்லவா இது!
ஒரு சின்ன விலகல் கூட பெரிய இடைவெளி போலப் பயமுறுத்தும்.
மெதுவாக
மணலில் நகர்ந்து அவள் அருகில் அமர்ந்தான். அவள் கொஞ்சம் தள்ளி நகர்ந்தாள். அவன் மீண்டும்
நகர்ந்து அவளது தோளோடு தோள் உரசும் அளவுக்கு நெருங்கினான்.
"கோபமா
செல்லம்?"
"இல்லை."
"பின்ன
ஏன் மூஞ்சி கிரஷ் ஆன மொபைல் மாதிரி இருக்கு?"
அவள்
அவனைத் திரும்பப் பார்த்தாள். அந்தப் பார்வையில் ஆயிரம் குற்றச்சாட்டுகள். "உங்களுக்கு
எப்பவுமே வேலைதான் முக்கியம். ஒரு வாரமா இதே போல காத்திருக்கேன். ஒரு நாளுக்குக் கூட
நேரத்துக்கு வர மாட்டீங்க இல்ல. என்னை ரொம்பவே அலட்சியப்படுத்துறீங்க!"
"அய்யோ
மேடம்! நாளைக்கு அந்த மேனேஜரை மூஞ்சுலேயே குத்தல. அப்புறம் பாருங்க. இனிமே என்னோட ஆல்
இன் ஆல் மேனேஜர் நீதாண்டி செல்லம். மறுபடியும் மறுபடியும் சாரிடி. இதுதான் லாஸ்ட் அன்ட்
லாஸ்ட் பார் எவர்." என்று சொல்லி அவளது விரல்களை மெல்லப் பற்றினான்.
அவள்
கையை இழுக்க முயன்றாள். ஆனால் அவன் விடாமல் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டான்.
அவள்
மெல்ல அவனது தோளில் லேசாகக் குத்தினாள். அந்த ஒரு செல்லக் குத்தில் அவளது மொத்தக் கோபமும்
கரைந்து போனது.
"பொய்யி!"
என்றாள் லேசான புன்னகையோடு.
"நிஜமாடி!
இனிமே ஆபீஸை விட நீதான் பர்ஸ்ட்." என்றபடி அவளைத் தன் பக்கமாக இழுத்து அணைத்துக்
கொண்டான்.
அவளது
தலை அவனது தோளில் சாய்ந்தது. பூம்புகாரின் கடற்கரைக் காற்றின் குளுமையில், அவளது விரல்கள்
அவனது கைகளோடு பிணைந்து கொண்டன. கோபம் மறைந்து, இருவரின் இதயத்துடிப்பும் ஒரே நேர்கோட்டில்
இணையத் தொடங்கியது.
ஊடலின்
கசப்பு நீங்கி, காதலின் உணர்தல் கூட, அந்த மாலை நேரத்தில் அழகிய கவிதையானது.
"ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்." (குறள், 1109)
என்று
கடற்கரை காற்று சொல்வது போல அக்காற்றின் குளுமையிலும் மெல்லோசையிலும் ஒரு சுகந்தம்
கூடியிருந்தது.
- சூத்திரங்கள் தொடரும்!
*****

No comments:
Post a Comment