8 Sept 2026

அறியாமையின் அழகியல்

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 30

அறியாமையின் அழகியல்

அந்த மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தின் பத்தாவது மாடியில், கணினியில், பைத்தானில், கடினமான நிரல் ஒன்றை எழுதிக்கொண்டிருந்தான் அவன். அவன் ஒரு தொழில்நுட்ப நிபுணன். உலகத்தின் சகல விஷயங்களையும் தர்க்கம், கணிதம், கணினி நிரல் என்ற கட்டுக்குள் அடைக்கப் பார்க்கும் விநோதன்.

ஆனால், கடந்த ஆறு மாதங்களாக அவன் எதிரே அமர்ந்திருக்கும் அவளிடம் எந்த தர்க்கமும் சுத்தமாக வேலை செய்யவில்லை.

அவள் அணிந்திருந்த வைரத் தோடு அறையின் விளக்கு வெளிச்சத்தில் அழகாக மின்னியது. கழுத்தில் பிளாட்டின சங்கிலி புன்சிரிப்பு பூப்பதைப் போலிருந்தது. தன் சுண்டு விரலால் தேநீர்க் கோப்பையைச் சுற்றி வந்து கொண்டிருந்தவள், கூந்தலைக் காதோரம் ஒதுக்கியபடி அவனைக் கூர்ந்து பார்த்தாள்.

"என்ன அப்படிப் பார்க்கறே?"

"உன்னைப்பற்றித்தான் யோசிக்கிறேன். ஆறு மாசத்துக்கு முன்னாடி, உன்னை முதல்முறை டிராபிக் சிக்னல்ல பார்த்தப்ப, ஓகே, இவ ஒரு சிம்பிளான பொண்ணு, ஐடி ஜாப், கிளாசிக் மியூசிக் பிடிக்கும், காரசாரமா காளான் தோசை சாப்பிடுவான்னு ஒரு முடிவுக்கு வந்தேன். அதாவது, உன்னைப் பத்தி எனக்கு எண்பது சதவீத டேட்டா கிடைச்சுடுச்சுனு நினைச்சேன்."

அவள் புன்னகைத்தாள். "இப்போ?"

"இப்போ உன்கூட பழகப் பழக, உன்னைப் பத்தி எனக்கு எதுவுமே தெரியலைனு புரியுது! நேத்து வரைக்கும் உனக்கு அமைதிதான் பிடிக்கும்னு நினைச்சேன், இன்னைக்கு மெட்டாலிகா ராக் இசை கேட்டுட்டு தலையாட்டுற. உனக்கு கோபம் வராதுனு நினைச்சேன், அன்னைக்கு அந்த ஆட்டோகாரன்கிட்ட நீ பேசுன ஹிந்தியைப் பார்த்து மிரண்டுட்டேன். உன்னை முழுசா புரிஞ்சுக்கிட்டேன்னு நினைக்கும்போதெல்லாம், புதுசா ஏதோ ஒண்ணு தெரியுது. நீ ஒரு பெரிய அன்ப்ரெடிக்டபிள் அல்காரிதம்!"

அவள் தன் தேநீர்க் கோப்பையை உதட்டில் வைத்தபடி, லேசாகக் கண் சிமிட்டினாள். "அதுதானே காதல்?"

"நல்லதுதான், ஆனா ஒரு டெக்னாலஜி எக்ஸ்பர்ட்டுக்கு இது மிகப்பெரிய அடி!" என்றான் அவன் சிரித்தபடியே. "நம்ம ஊர்ல ஈராயிரம் வருஷத்துக்கு முன்னாடி வள்ளுவரும் இதே நிலைமையிலதான் இருந்திருக்காரு போல! அவரும் இதையேத்தான் சொல்றாரு!"

"அப்படி என்னதான் சொல்றாராம்?"

"என்ன சொல்றார்ன்னா,

"அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்

செறிதோறும் சேயிழை மாட்டு."              (குறள், 1110)

அப்படின்னு சொல்றாரு."

"அப்படின்னா?"

"விஷயம் எளிது. நாம நிறைய புத்தகங்களைப் படிக்கப் படிக்க, அடடா, நமக்குத் தெரியாத விஷயம் உலகத்துல எவ்வளவு இருக்குன்னு தோணும்ல? அறிவு பெருக பெருக நம்ம அறியாமை நமக்கு வெளிப்படும். அதே மாதிரிதான் சிறந்த நகைகளை அணிந்த பெண்ணாகிய உன்கிட்ட நான் நெருங்கிப் பழகப் பழக, உன்னைப் பற்றி நமக்கு இன்னும் எதுவுமே தெரியவில்லையேங்கிற அறியாமைதான் கூடுகிறது. காதலுக்கு எப்போதும் வயதாவது இல்லை; அது என்றும் புதுமை."

அவள் அவனைச் சில நொடிகள் அமைதியாகப் பார்த்தாள். பிறகு தன் கைப்பையிலிருந்து ஒரு சிறிய குறிப்பேட்டை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

"இது என்ன?" அவன் குழப்பத்துடன் கேட்டான்.

"உனக்கு என்னைப் பற்றி எல்லாமே தெரிஞ்சிடுச்சுனு நீ நினைக்கிற ஒவ்வொரு முறையும், இந்த நோட்டைத் திறந்து படி. இதில் என் நூறு ரகசியங்கள் இருக்கு. தினமும் ஒன்னை மட்டும் படி."

அவன் ஆர்வத்துடன் அதைத் திறக்கப் போனான். அவள் அவனது கையைப் பற்றித் தடுத்தாள்.

"இப்போ வேண்டாம், வீட்டிற்குப் போய் நள்ளிரவில் முதல் பக்கத்தைப் படி."

அன்று நள்ளிரவு, தன் அறையில் அவன் ஆர்வத்தோடு அந்த நோட்டின் முதல் பக்கத்தைத் திறந்தான்.

அதில் அவளின் அழகான கையெழுத்தில் இப்படி எழுதியிருந்தது, ''இந்த நோட்டில் 100 ரகசியங்கள் இருக்கும் என்று நீ நம்பினாய் அல்லவா? அதுதான் என் முதல் ரகசியம். இதில் எந்த ரகசியமும் இல்லை, வெறும் வெற்றுப் பக்கங்கள்தான் உள்ளன. ஆயுசு முழுக்கப் படித்தாலும் முடியாத ஒரு புத்தகத்தை உன்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. என்னை ஆராய்வதை நிறுத்திவிட்டு, தொடர்ந்து நேசித்துக்கொண்டே இரு!''

அவன் உரக்கச் சிரித்தான்.

வெளியே வந்து, நிலா வெளிச்சத்தைப் பார்த்தபடி மனதுக்குள் நினைத்துக்கொண்டான் "வள்ளுவர் சொன்னது நிஜம்தான். காதல் ஒரு மாளாத புதிர்!"

*****

No comments:

Post a Comment