11 Sept 2026

தேரோடும் வீதியில் திருவள்ளுவரின் குறள்!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 33

தேரோடும் வீதியில் திருவள்ளுவரின் குறள்!

மழையின் மெல்லிய ஈரம் காய்ந்தும் காயாமலும் ஈரப்பதத்தைத் திருவாரூரின் நான்கு வீதிகளிலும் பரப்பிக் கொண்டிருந்தது. தேரோடும் வீதியின் இருபுறமும் ஆங்காங்கே வரிசையாக இருக்கும் பழமையான ஓட்டு வீடுகளும், அதன் உச்சியில் செழித்து வளர்ந்திருக்கும் அரசமரக் கன்றுகளும் காலத்தைக் கடந்து நிற்கும் அடையாளங்கள்.

மாலையின் மஞ்சள் வெயில் சற்றே மங்கி, கமலாலய குளத்தின் குளிர் காற்றும் சேர்ந்து திருவாரூரைக் கொஞ்சம் கூடுதலாகவே குளிர்விக்க, தியாகராஜர் வீதியிலுள்ள அந்தப் பாரம்பரிய வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்தான் அவன்.

காலம் எவ்வளவுதான் மாறினாலும், திருவாரூரின் அந்த மந்தமான சோம்பலும், மாலை நேரங்களில் மணக்கும் அந்தக் காபி வாசனையும் எப்போதையும் விட இன்றைக்குச் சற்று அதிகமாகவே அவனுக்குள் இறங்கியிருந்தது. அவனது கையில் அந்தப் பழைய செப்பு டம்ப்ளர். உள்ளே சுடச்சுட இஞ்சிக் காபி. எதிர் வீட்டுத் திண்ணையில் நின்றுகொண்டிருந்தாள் அவள்.

அவள் தன் கூந்தலைக் கொண்டையாகச் சீவிக்கொண்டிருந்தாள். அவளது அந்தத் திடீர் அசைவில் ஒரு மின்னல் வேகம் இருந்தது. அவளது மினுமினுப்பான அந்தத் தோல் மீது சன்னல் வழியே நுழைந்த விளக்கு வெளிச்சம் பட்டுத் தெறித்தது. இயற்கையின் இணையற்ற படைப்பாகத் தெரிந்தது அது. இயந்திரங்களின் இரைச்சலோ கார்ப்பரேட் டென்ஷனோ இல்லாத இந்தத் திருவாரூரில், அவளது ஒவ்வொரு அசைவும் ஏதோ ஒரு பாரம்பரியப் பாடலின் மெட்டு போல அவனுக்குள் சுழன்றது.

திடிரென்று அவள் திரும்பி அவனைக் கவனித்தாள். முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது. அந்த வெண்மையான பற்கள் முத்துப்போல் மின்ன, அவள் லேசாகச் சிரித்தாள். ஏதோ வாழ்க்கையின் மிக முக்கியமான தேர்வில் சென்டம் வாங்கியது போன்ற ஓர் அரிய திருப்தி அவனுக்குள் பரவியது.

அவள் சமையலறையிலிருந்து திண்ணையை நோக்கி நகர்ந்து வரும்போதெல்லாம், அந்த வீட்டின் பாரம்பரிய மல்லிகைப் பூ வாசனையும் அவளது இயல்பான நறுமணமும் சேர்ந்து காற்றில் மிதந்து வந்தது. எந்தவொரு செயற்கை வாசனைத் திரவியமும் இல்லாத, மண்ணின் தூய்மையும் காதலின் குளிர்ச்சியும் கலந்த அந்த வெறிநாற்றம் அவனது நரம்பு மண்டலத்தை முழுமையாகச் சமன்செய்தது.

அவளது அந்தக்  கண்கள், திருவாரூர் தேர்த் திருவிழாவின் போது எரியும் ஆயிரமாயிரம் விளக்குகளின் பிரகாசம் போல் பிரகாசித்தன. அதில் அவனது மொத்த மன அழுத்தமும் மகிழ்ச்சிப் பெருக்கமாய் மாறிப் போனது.

வாழைத் தண்டின் மென்மையும் மூங்கிலின் ஒய்யாரமும் கலந்த அவளது தோள்கள் அவனை அப்படியே அள்ளி சொர்க்கத்தில் தள்ளியது போன்ற உணர்வைத் தந்தது. சில விஷயங்களுக்கு தலைமுறைகளும் ஊர்களும் மாறினாலும் காலாவதி தேதி இல்லை என்பதற்கு அவள் ஓர் உயிர்ப்பான சான்று.

"என்ன அப்படி ஒரு பார்வை?" என்றாள் அவள் சிரித்துக்கொண்டே.

அவன் காபியை ஒரு வாய் குடித்துவிட்டு மென்மையாகப் புன்னகைத்தான். இயற்கையின் உயிர்நுட்பமே வேறுதான். அந்த மேனியின் பிரகாசம், முத்த முறுவல், வெறிநாற்றம், வேல் போன்ற கண்கள், வேய்த்தோள் என இதைவிடச் சிறந்ததொரு சொர்க்கத்தின் கட்டமைப்பு இந்த உலகத்தில், ஏன் இந்தப் பிரபஞ்சத்தில் எங்குமே கிடையாது.

அவனது மைண்ட் வாய்ஸ் எனும் மனதின் குரல் புரிந்தது போல, அவள் அவன் எதிரே வந்து நின்றாள், "என்ன யோசனை மிஸ்டர் கவிஞரே?"

அவன் வார்த்தைகளை மென்று விழுங்குவது போலச் சொன்னான், "ஒன்னுமில்ல! உன்னைப் பார்த்தா, திருவள்ளுவர் காலத்துலேயும் நீதான் இருந்திருக்கணும்னு தோணுது. இல்லன்னா, அவர்தான் உன்னை நேரில் பார்த்துவிட்டு அந்தத் குறளை எழுதி வச்சிருக்கணும்."

"அப்படியா! அப்படியென்ன குறள் அது?" என்றாள் அவள் மீண்டும் முத்துகளைச் சிதற விடும் சிரிப்போடு.

"அதுவா? அது வந்து…

"முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்

வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு."                    (குறள், 1113)

அதுதான் அந்தக் குறள்!" என்றான் அவன்.

அவள் அவனது தலையில் லேசாக ஒரு தட்டு தட்டிவிட்டுப் புன்னகையுடன் நகர்ந்தாள். காலம் சுழன்றாலும் காதலின் மொழி மட்டும் மாறுவதேயில்லை. இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தாலும் அந்த மொழி கட்டுக் குழையாமல், நன்னி கூட சிதையாமல் அப்படியே இருக்கிறது.

-           சூத்திரங்கள் தொடரும்!

*****

No comments:

Post a Comment