10 Sept 2026

கண்ணில் பூ பூக்கும் தொழில்நுட்பம்

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 32

கண்ணில் பூ பூக்கும் தொழில்நுட்பம்

மாலை ஆறு மணி. காரைக்கால் கடற்கரையில் உப்பு மணமும், மெல்லிய வறுத்த நிலக்கடலை வாசனையும் சேர்ந்து கொண்டிருந்தன.

அவன் கையில் வாகனத்தின் சாவிக்கொத்தைச் சுழற்றிக்கொண்டிருந்தான். எதிரே அவள் உட்கார்ந்திருந்தாள்.

அவள் கண்கள்! ம்ஹும்! அதைப் பற்றித்தான் பஞ்சாயத்து.

அலை அடிக்கும் கடற்கரையில், அந்தி மயங்கும் பொன்மஞ்சள் மாலை வெயிலில் அவள் கண்களைப் பார்க்காமல் இருக்க முயற்சிப்பது, மின்வெட்டு நேரத்தில் டார்ச் லைட்டை அணைத்து வைக்க முயல்வது போல வீண் வேலை.

"என்ன, நான் பேசுறது உன் காதுல விழுதா இல்லையா?"

"விழுது. ஆனா உன் கண்ணைப் பார்த்துட்டிருந்தா நீ பேசுறது ஆடியோவா கேக்கல, விஷுவல் பிளர் ஆகுது."

அவள் லேசாகச் சிரித்தாள். "என்னது இது புதுசா சைட் அடிப்புக் கலை? பொண்ணுங்களோட கண்ணுப் புகழ்ச்சி சாப்டர் ஒண்ணா? டூவா?"

"இல்ல. சீரியஸா! இந்த உலகத்துல எத்தனையோ பூக்கள் இருக்கு. குறிஞ்சி, பவள மல்லி, தாமரை, செம்பருத்தி, மல்லிகை, முல்லை, செவ்வரளின்னு எத்தனையோ. ஆனா நீ பார்க்கும்போது உன் கண்ணுல ஒரு பூ பூக்குது பாரு! அது மாதிரி பூ உலகத்துல எங்கேயும் இல்ல!"

அவள் இமைகளைச் சிமிட்டி, "அப்படியா!" என்றாள்.

"அப்புறம், நான் என்ன பொய்யா சொல்றேன்? நூறு சதவீத உண்மை!"

"நான் நம்ப மாட்டேன். அக்மார்க் பொய்."

"அப்படின்னா, உண்மையை உடைத்துச் சொல்ல வேண்டியதுதான். அதோ பூ விக்குறாங்களே! அவங்ககிட்ட இருக்குற ரோஜாப் பூவை பாரு," என்றான் அவன்.

அவள் அந்தப் பூக்கூடையில் இருந்த சிவப்பு ரோஜாவைப் பார்த்தாள். "ம்ம், அழகா தான் இருக்கு. அதுக்கென்ன இப்போ?"

"அதுதான் பிரச்சனை. பூ அழகாதான் இருக்கு. ஏன்னா, அதை இந்தக் கடற்கரைக்கு வர்ற எல்லாரும் பாக்கலாம். அந்தப் பையன் பாக்கலாம், இந்தப் பொண்ணு பாக்கலாம், அதோ அங்க உட்கார்ந்திருக்குற அந்த வயசானவரு கூட பாக்கலாம். எல்லாரும் பாத்து ஆஹா பூவுன்னு சொல்லலாம்."

அவன் சற்றே முன்னால் சாய்ந்து, அவளது கண்களை நேராகப் பார்த்தான்.

"ஆனா உன் கண்ணு அப்படி இல்லை."

அவள் புன்னகையை அடக்க முயன்று, "என் கண்ணு என்னவாம்?" என்றாள்.

"உன் கண்ணைப் பார்த்தா என் நெஞ்சு குழம்பிப் போகுது. இந்த பூவை எல்லாரும் பாக்குற மாதிரி, உன் கண்ணையும் எல்லாரும் பார்த்துட முடியுமா என்ன? சேச்சே இது எல்லாரும் பார்க்கிற சாதாரண பூ மாதிரி இல்ல. இது எனக்கு மட்டும்தான் சொந்தம்னு என் மனசு அடம் பிடிக்குது. ஆனா, இல்லடா லூசு, இதுவும் எல்லாரும் பாக்குற பூ மாதிரிதான்னு என் மூளை சொல்லுது. ரெண்டுக்கும் நடுவுல என் நெஞ்சு கிறுக்குப் பிடிச்சு அலையுது. திருவள்ளுவருக்கே இதுல ஒரு மயக்கம் இருந்திருக்கு. அவர் என்ன சொல்றார்ன்னா,

"மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்

பலர்காணும் பூவொக்கும் என்று."                     (குறள், 1112)

அப்படிங்றார்."

அவள் தன் கையிலிருந்த மொபைலைக் கீழே வைத்துவிட்டு உரக்கச் சிரித்தாள்.

"ஹலோ மிஸ்டர் ஹேண்ட்ஸம்! எதுக்கு இப்போ வள்ளுவரையெல்லாம் கூப்பிட்டு வந்து, இவ்வளவு சுத்தி வளைச்சு கவிதை பேசிட்டு இருக்கீங்க? மேட்டர் என்ன?"

அவன் தன் பாக்கெட்டில் இருந்த சிறிய பெட்டியை வெளியே எடுத்தான்.

"மேட்டர் இதுதான். இந்த உலகத்துல இருக்குற எந்தப் பூவையும் யார் வேணாலும் பாக்கலாம். ஆனா, இந்தக் கண்களை நான் மட்டும்தான் ஆயுசுக்கும் பாக்கணும்னு ஆசைப்படுறேன். அதுக்கு இந்த நெஞ்சுக்கு அனுமதி கிடைக்குமா?"

பெட்டியைத் திறந்தான்.

பெட்டியில் இருந்த வைரக் கம்மலில் அந்தச் சிறிய வைரம் மின்னுவது போல், அவள் கண்களில் ஒரு புது ஒளி மின்னி ஒளிர்ந்தது. அது இந்த உலகத்தில் இதுவரை எந்தத் தாவரமும் பூக்காத பூ போன்றிருந்தது.

-          சூத்திரங்கள் தோன்றும்!

*****

No comments:

Post a Comment