8 Sept 2026

இடையில் கொஞ்சம் இருக்கிறது மற்றும் இல்லை

காணாமல் போன கற்கள்

ஒரு குடத்தில்

கொஞ்சம் தண்ணீரைக்

காகத்திற்கு வைத்த காலம்

ஒரு லிட்டர் 20 ரூபாய் என்று

வாசகம் எழுதப்பட்ட

சுவரைத் தங்குவதற்காக

கற்களையெல்லாம்

காங்கீரிட்டாக்கி மூடியிருந்தது

*****

அவரவர்க்குத் தெரிந்த ரகசியம்

யாரோ சேமித்து வைத்திருந்ததை

பெருச்சாளிகள் தின்று விட்டுப் போகும்

பூனைகள் வந்து பிடித்து விட்டால்

இத்தனை நாட்கள் தப்பித்த

சாகசத்தை நினைத்துக் கொள்ளும்

சிக்கியது ஒன்று

சிக்காதது பலவென்று

பூனைகளுக்கும் தெரியும்

பூனைகளை வளர்ப்பவர்களுக்கும் தெரியும்

*****

இடையில் கொஞ்சம் இருக்கிறது மற்றும் இல்லை

கடைசியில் எல்லாம் இதற்குத்தானா என்று

எளிமையாகச் சொல்லி விடலாம்

இடையில் எத்தனை ஆசைகள்

எத்தனை சுயநலங்கள்

எத்தனை பழிதீர்த்தல்கள்

எல்லாம் கடந்து வந்த பிறகு தெரியும்

ஒன்றுமில்லை என்பதை

துவங்கும் போது

எப்படி இல்லையென்று துவங்க முடியும்

இருக்கிறதென்று துவங்கி

இல்லையென்று முடிப்பதைத் தவிர

வேறு வழியில்லை

*****

No comments:

Post a Comment