நாய்கள் இல்லாத ஊரில் பூனைகள் ஆவியாதல்!
தூத்துக்குடியின்
சந்துபொந்துகளிலெல்லாம் இரவு நேரத்து அசாத்திய நிசப்தம் கவிழ்ந்திருக்கிறது. அந்த நிசப்தத்தின்
நரம்புகளை அறுப்பது போல, எங்கோ ஒரு மூலையிலிருந்து மெலிதாக ஒலிக்கிறது ஒரு பூனையின்
முனகல். அது வெறும் பூனையின் சத்தம் மட்டுமல்ல; இந்த ஊரின் விசித்திரமான ஒரு மாயமானின்
விம்மல்.
பூபாலராயர்புரத்திலும்
திரேஸ்புரத்திலும் நேற்றிரவு வரை சுவரிடை நடந்து, மீன் கழிவுகளை மேய்ந்து, உலகத்து
மனிதர்களின் முட்டாள்தனங்களை அலட்சியமாகப் பார்த்துக்கொண்டிருந்த நாட்டுப் பூனைகள்,
இப்போது காற்றில் கரைந்துபோய்க்கொண்டிருக்கின்றன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இருநூறு
ஆன்மாக்கள், மன்னிக்கவும், இருநூறு பூனைகள் காணாமல் போயிருக்கின்றன.
சுவர்களில்
சாய்ந்து நிற்கும் சிசிடிவி கேமராக்கள், இரவின் கரிய திரைக்குப் பின்னால் நடக்கும்
அந்தச் சம்பவங்களைப் பதிவு செய்து வைத்திருக்கின்றன. ஒரு நிழல் நடமாடுகிறது. கையில்
ஒரு சாக்குப்பைப் போன்ற கறுத்த உருவம். அடுத்த கணம், அங்கிருந்த பூனை காற்றில் ஆவியாகிவிடுகிறது.
மனிதர்கள்
தங்கள் திரைகளில் அந்த நிழல்களைப் பார்த்துப் பதறுகிறார்கள். சமூக வலைதளங்கள் என்ற
பெருஞ் சந்தையில் அந்த விடியோக்கள் அச்சத்தைப் பண்டமாற்றம் செய்கின்றன.
ஊருக்குள்
இப்போது கேள்விகள் மொய்க்கத் தொடங்கியிருக்கின்றன.
"அந்தப்
பூனைகள் எங்கே போகின்றன?"
சாலையோரக்
கடைகளின் புகை மூட்டத்திற்குள், கொதிக்கும் எண்ணெய்ச் சட்டிகளுக்குள் அவற்றின் இறைச்சி
மறைந்துவிடுகிறதா? அல்லது, நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் அண்டாவில் மூலிகைகளைக்
கொதிக்கவைத்து போலி மருந்து தயாரிக்கும் மனிதர்களின் ரகசியப் பாத்திரங்களுக்குள் அவை
வீழ்கின்றனவா?
பதில்கள்
யாரிடமும் இல்லை; ஆனால் சந்தேகங்கள் மனிதர்களின் மனங்களில் நச்சரவமாக நெளிந்துகொண்டிருக்கின்றன.
அச்சமடைந்த
குடிமக்கள் சிலர் காவல் நிலையங்களின் படி ஏறுனார்கள். காகிதங்களில் புகார்கள் எழுதப்பட்டன.
காவல்துறையினரின் கைகளில் 'மனு ரசீதுகள்' எனும் வெள்ளைத் துண்டுகள் கைமாறின. தற்போது
"விசாரணை நடக்கிறது" என்ற வழக்கமான சொற்கள் காற்றில் மிதக்கின்றன.
ஆனால்,
தெருக்களின் மூலைகளில் எஞ்சியிருக்கும் சில பூனைகள், தங்களின் பெரிய மஞ்சள் கண்களால்
மனிதர்களைப் பார்த்துக்கொண்டே இருக்கின்றன. மனிதர்களின் பசியோ, பேராசையோ, அல்லது ஏதோ
ஒரு ரகசிய வெறியோ தங்களை விழுங்கக் காத்திருப்பதை அறிந்தவை போல!
இரவு
மேலும் அடர்த்தியாகிறது. தூத்துக்குடியின் தெருக்களில் அடுத்த பூனையைத் தேடி அந்த மர்ம
நிழல் அசையத் தொடங்குகிறது.
மீன்களின்
வாசமும் உப்புக்காற்றும் நிறைந்த தெருக்களில், இப்போது பூனைகளின் காலடிச் சத்தங்கள்
குறைந்துகொண்டே வருகின்றன.
அவை
வெறும் தெருவோர விலங்குகள் அல்ல; மனிதர்களின் இரகசியங்களையும், இரவின் மௌனத்தையும்
தங்கள் கண்களுக்குள் சேகரித்து வைத்திருந்த எளிய ஜீவன்கள். மனிதன் தன் பசிக்காகவோ,
பேராசைக்காகவோ அல்லது காரணமற்ற கொடூரத்திற்காகவோ ஏதோவொன்றை வேட்டையாடிக்கொண்டேதான்
இருக்கிறான்.
இன்று
சாக்குப்பைகளுக்குள் அடைபட்டுப்போனது பூனைகள் மட்டுமல்ல, இந்த மனித சமூகத்தின் மிச்சமிருக்கும்
கருணையும்தான்.
இருள்
இன்னும் அடரும் முன், அந்த மஞ்சள் கண்களின் மௌனக் கூச்சலுக்கு நாம் பதில் சொல்லியே
ஆகவேண்டும். இல்லையெனில், நாளை அதே இருள் நம்மை நோக்கித் தன் கைகளை நீட்டக்கூடும்.
*****

No comments:
Post a Comment