6 Sept 2026

காற்றுக்கு அனுமதியில்லை

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 28

காற்றுக்கு அனுமதியில்லை

மழைக்காலத்து நள்ளிரவு.

திருவாரூர் - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் கார் பழுதாகி நின்றபோது, அவனும் அவளும் சண்டையின் ஐந்தாம் கட்டத்தில் இருந்தார்கள். அவர்கள் காதலிக்க ஆரம்பித்து ஆறு மாதங்கள் ஆகியிருந்தன.

காரின் எஞ்சின் சூடு தணிந்திருந்தது. காரின் ஏசி நின்றதும், உள்ளே ஊடுருவிய மழைக்காற்றின் குளிர் இருவரையும் மெல்ல நடுங்க வைத்தது.

"எல்லாம் உன்னாலதான்! கிளம்பும்போதே மெக்கானிக்கிட்ட காமிப்போம்னு சொன்னேனா இல்லையா?" அவள் காரின் டேஷ்போர்டை வெறித்தபடி கத்தினாள்.

"இப்ப கத்தி என்ன ஆகப்போகுது? நெட்வொர்க்கும் இல்லை. அமைதியா இரு," அவன் மொபைலை என்ன செய்வது என்று தெரியாமல், நெடுஞ்சாலையில் ஏதேனும் வாகனம் வருகிறதா எனப் பார்த்தான். இருளைத் தவிர வேறு எதுவும் தென்படுவதாகத் தெரியவில்லை.

வெளியே மழை வீறிட்டு அடித்தது. கடும் காற்று காரை அசைத்துப் பார்த்தது. காருக்குள் இருட்டின் அடர்த்தியும், அமைதியும் பாறையாய் இறங்கியது.

சண்டை போட்டுக் அலுத்துப் போய், குளிரில் பற்கள் கிட்டடி அடிக்க ஆரம்பித்தன இருவருக்கும். அவன் தன் கைகளைப் பிசைந்து கொண்டான். அவள் உதடுகளைக் கடித்துக்கொண்டு உடலைக் குறுக்கிக் கொண்டாள்.

ஒரு கட்டத்தில் குளிர் அவர்களின் ஈகோவை விடவும் கடுமையானதாக மாறியது.

"இங்க வா!" அவன் தன் கைகளை விரித்தான்.

அவள் யோசிக்கவில்லை. அடுத்த நொடி அவனது நெஞ்சில் போய் முகம் புதைத்துக் கொண்டாள். அவன் தன் கைகளால் அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

அவர்களின் உடல்கள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டன. இருவரின் இதயத் துடிப்பும் ஒரே சீராக இயங்கத் தொடங்கியது. உடல்களின் வெப்பம் பரிமாறப்பட்டு, நடுங்கும் குளிர் மெல்ல விலகியது.

அப்போது, அவனது விரல்கள் அவளது முதுகை இன்னும் இழுத்து அணைக்க முயன்றன. ஆனால், அவர்கள் அணிந்திருந்த தடிமனான ஸ்வெட்டர்கள் இடையே தடையாய் நின்றன.

"ஹ்ம்ம்! இந்த ஸ்வெட்டர் கூட நடுவுல காத்து புகுற அளவுக்கு கேப் விடுது," அவள் அவனது கழுத்து வளைவில் முணுமுணுத்தாள்.

அவன் சிரித்தான். "காத்து கூட புக முடியாத அளவுக்கு ஒட்டிக்கணும்ங்கறதுதான் உண்மையான சுகம்ன்னு இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடியே நம்ம ஊரு ஐயன் எழுதி வெச்சிருக்கார் தெரியுமா?"

"யாரு?"

"வள்ளுவர்தான்.

''வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை

போழப் படாஅ முயக்கு''               (குறள், 1108)

அப்படின்னு அவரு ஒரு சூத்திரத்தையே எழுதி வெச்சிருக்காரு. அதாவது, காதலிக்கும் ரெண்டு பேர் கட்டிப்பிடிச்சுக்கிட்டு இருக்கும்போது, அவங்களுக்கு நடுவுல மெல்லிய காத்து கூட புக முடியாத அளவுக்கு இறுகின அணைப்புதான் உலகத்திலேயே ஆகச்சிறந்த சுகமாம்."

அவள் தன் கையிலிருந்த ஸ்வெட்டர் ஜிப்பை மெல்லக் கீழே இறக்கினாள். "அப்படின்னா, அந்த வள்ளுவர் சொன்னதை நாம ஏன் தப்பாக்கணும்?"

வெளியே பேய்க்காற்று சாலையோர மரங்களைப் பிளந்து கொண்டு வீசியது. ஆனால், அந்த மூடிய காருக்குள். காற்று புகக்கூட ஒரு மில்லிமீட்டர் இடைவெளி இருக்கவில்லை.

-           சூத்திரங்கள் தொடரும்!

*****

No comments:

Post a Comment